திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள பி.கே அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதுடைய சுப்பிரமணி. விவசாயியான இவர் தனது தோட்டத்திற்கு செல்வதற்காக, இருசக்கர வாகனத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றிருக்கிறார்.
அப்போது திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று, சுப்பிரமணி ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணி உடலில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த, பி.கே அகரத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சென்னை - திருச்சி திருச்சி - சென்னை இரண்டு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்த லால்குடி கோட்டாட்சியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கடந்த 10 தினங்களில் பி.கே அகரம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் இதே இடத்தில் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். என்றும் அடிக்கடி இதுபோன்று விபத்து ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகியுள்ளது. ஆகையால் சாலையை கடப்பதற்கு இந்த பகுதியில் சர்வீஸ் சாலை அல்லது சுரங்க வழித்தடம் அமைத்து தர வேண்டும், என கோரிக்கையை முன் வைத்தனர் கிராம மக்கள்.
இதுகுறித்து ஆவணம் தயார் செய்யப்பட்டு உயர் அதிகாரிகளிடம் பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதை தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால், சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை பின்னர் போலீசார் சீர் செய்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்