தூத்துக்குடி மாவட்டம், பி என் டி காலனி பத்தாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி செலின் இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் இளைய மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தாய் செலின் தாது மூத்த மகனான நிபின் இமானுவேல் உடன் வசித்து வந்தார். நிபின் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் 8 வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்த மின்வாரியத்தில் பணிபுரிந்து வரும் சங்கர் என்பவரது மகள் கௌசிகா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் நாளடைவில் இந்த பழக்கமானது காதலாக மாறி இருவரும் காதலித்து வந்தனர்.
இவர்களது காதல் கௌசிகாவின் வீட்டுக்கு தெரிய வர கௌசிகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நிபின் இமானுவேல் தனது காதலியை திருமணம் செய்ய நினைத்து முறையாக பெண் கேட்டு கௌசிகாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் கௌசிகாவின் தந்தை சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் தங்களது மகளை நிபின் இமானுவேலுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என மறுத்து கௌசிகா உடனான காதலை கைவிடுமாறு எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து நிபின் இம்மானுவேலை தொடர்புகொண்ட கௌசிகா செல்போன் மூலம் தொடர்பு கொண்டு “நான் உன்னை தான் காதலிக்கிறேன் உன்னை தான் திருமணம் செய்துகொள்வேன். அதையும் மீறி வேறு யாருக்காவது கல்யாணம் பண்ணி வச்சா நான் உன் கூட ஓடிவந்துருவேன்” என கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கௌசிகாவுக்கு வேறு ஒரு நபருடன் தூத்துக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு வரை கௌசிகா மற்றும் நிபின் இம்மானுவேல் ஆகியோர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருமணம் முடிந்த பின்பும் கௌசிகா நிபின் இம்மானுவேலை தொடர்பு கொண்டு “என்னால் இப்போது வர இயலாது கொஞ்சம் பொறுத்துக் கொள் நான் எனது கணவரிடம் விவாகரத்து வாங்கிவிட்டு உன்னுடன் வந்து வாழ்கிறேன்” என கூறியுள்ளார். இதனை தெரிந்து கொண்ட கௌசிகாவின் தந்தை சங்கர் சிப்காட் காவல் நிலையத்தில் நிபின் இம்மானுவேல் மீது திருமணமான பின்பும் தனது பெண்ணிடம் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வருகிறார் என புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் நிபின் இம்மானுவேலை விசாரணை செய்த சிப்காட் காவல் துறையினர் அவரது செல்போனில் நிபின் இமானுவேல் மற்றும் கௌசிகா ஆகியோர் ஒன்றாக இருந்த ரகசிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை அழித்து விட்டதுடன் நிபின் இம்மானுவேலிடம் இனிமேல் அந்த பெண்ணுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன் என எழுதி வாங்கி அனுப்பி உள்ளனர்.
மேலும் நிபின் இம்மானுவேலை குண்டர்களை வைத்து கௌசிகாவின் தந்தை மிரட்டி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பி என் டி காலனியில் உள்ள தனது வீட்டில் உள்ள தனி அறையில் இருந்த நிபின் இம்மானுவேல் எட்டு ஆண்டுகளாக காதலித்த பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நடைபெற்ற விரக்தியிலும் அவரது தந்தை குண்டர்களை வைத்து தாக்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலாலும் தலைக்கு அடிக்கும் ஹேர் டை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து சிப்காட் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிப்காட் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இதைத்தொடர்ந்து நிபின் இம்மானுவேலின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நிபின் இம்மானுவேல் சாவுக்கு காரணமான நிபின் இம்மானுவேலின் காதலி கௌசிகா மற்றும் கௌசிகாவின் தந்தை சங்கர் தாக்குதல் நடத்திய மூன்று பேர் என அனைவர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளனர். தூத்துக்குடியில் எட்டு ஆண்டுகளாக காதலித்த பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் திருமண நடைபெற்றதாலும் பெண் வீட்டார் மிரட்டியதாலும் மனமுடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.