பொழுதுபோக்கு

பின்வாங்கும் அமேசான் பிரைம்! வெளியாகுமா விஜயின் ஜனநாயகன்?

தணிக்கை குழு ஆய்வு செய்த பின்பு கூட ஜனநாயகன் திரைப்படம், தேர்தலுக்கு பின்புதான் வெளியிடப்படும் என்றும்..

மாலை முரசு செய்தி குழு

விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம்தான் 'ஜனநாயகன்'. H.வினோத் இயக்கத்தில், விஜய், மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்து வெளியாக உள்ள படம்தான் 'ஜனநாயகன்'. தற்போது விஜயின் இந்த கடைசி படம் வெளியாவதில் சிக்கல்கள் நீடித்து வருவதால் 'அமேசான் பிரைம்' தனது OTT ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'ஒன் லாஸ்ட் டான்ஸ்' என்று ரசிகர்களால் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் படம்தான் H.வினோத் இயக்கத்தில் வெளியாகவுள்ள விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்'. தெலுங்கில் பாலைய்யா நடிப்பில் வெளியான 'பகவத் கேசரி' படம்தான் ஜனநாயகன் என்று கூறியபோதிலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு சிறிதும் குறையாமல் அதிகரித்த வண்ணமே இருந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 09ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்த ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக படம் வெளியாவதில் சிக்கல்கள் நீடித்தது. பின்பு, மார்ச் 09ம் தேதி தணிக்கை குழுவால் திரையிடப்படுவதாக இருந்த ஜனநாயகம் திரைப்படம், குழுவில் இருந்த ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மறு தேதி அறிவிக்கலாம் திரைப்படம் தணிக்கைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த முறையாவது திரைப்படம் எந்த ஒரு தடையும் இன்றி வெளியாகும் என்று எதிர்பார்த்த விஜய் ரசிகர்களுக்கு இடையே இது மிகப்பெரிய ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.

H. வினோத் இயக்கிய இந்தப் படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் , பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரூ.380 கோடி செலவில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . ஜனவரி மாத தொடக்கத்தில் திரையரங்குகளில் ஜனநாயகன் திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் தணிக்கை சான்றிதழ் செயல்பாட்டில் தாமதம் ஏற்பட்டதால் தற்போது வரை இறுதி வெளியீட்டு தேதி நிச்சயமற்றதாகவே உள்ளது.

சட்ட மோதல்: விஜயின் ஜனநாயகன் திரைபடத்தில் மத நல்லிணக்கத்தை பாதிக்கும் காட்சிகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. எனவே, படம் மறுபரிசீலனைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. சென்சார் சான்றிதழைப் பெற உத்தரவிடக் கோரி தயாரிப்பாளர்கள் நீதிமன்றம் வரை சென்றனர். முதலில் ஒரு தனி நீதிபதி, சான்றிதழ் வழங்க வாரியத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் 'டிவிஷன் பெஞ்ச்' அந்த உத்தரவை ரத்து செய்து வழக்கை திருப்பி அனுப்பியது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. பின்னர், படம் ஏற்கனவே மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தணிக்கை வாரியம் தெரிவித்த நிலையில் தயாரிப்பாளர்கள் வழக்கை வாபஸ் பெற முடிவு செய்தனர்.

OTT பின்வாங்கல்: இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படம் எந்த ஒரு மறு தேதியும் அறிவிக்காமல் சென்சார் குழுவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பிரபல OTT நிறுவனமான அமேசான் பிரைம் பின்வாங்கியுள்ளது. ஜன நாயகன் படத்தின் திரையரங்குகளுக்குப் பிந்தைய டிஜிட்டல் உரிமைகளை பிரபல OTT தளமான 'அமேசான் பிரைம் வீடியோ' முன்னதாக ரூ.120 கோடிக்கு வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . இருப்பினும், தற்போது அந்த ஒப்பந்தத்தில் இருந்து இந்த OTT தளம் பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு குழு மீண்டும் படத்தை கவனமாக ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால், இதுபோன்ற நடைமுறை பெரும்பாலும் கூடுதல் நேரத்தை எடுக்க வாய்ப்புள்ளது. அனுமதி வரும் வரை அதிகாரப்பூர்வ திரையரங்க வெளியீடு நிச்சயமற்றதாகவே இருப்பதால், இது விநியோக ஒப்பந்தங்களை நேரடியாகப் பாதித்துள்ளது.

தணிக்கை குழு ஆய்வு செய்த பின்பு கூட ஜனநாயகன் திரைப்படம், தேர்தலுக்கு பின்புதான் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. எனவே இதன் வாயிலாகவும் கூடுதல் காலதாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. பல சிக்கல்கள் இருந்த போதிலும் ரசிகர்கள் மத்தியில் இது விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் இது ஒரு முக்கியமான திரைப்படமாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் சிறிதும் உற்சாகம் குறையாமல் படத்தின் வெளியிட்டிற்காக காத்திருக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்