பொழுதுபோக்கு

“வயதை வென்ற வசீகரம்” - சூப்பர்ஸ்டாருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் .. போயஸ் கார்டனில் கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்!

ரசிகர்கள் வெறும் ரசிகர்களாக மட்டும் இல்லாமல் அவர்கள் என்றும் எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக...

Mahalakshmi Somasundaram

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஸ்டைல் வைத்துக்கொண்டு அன்றிலிருந்து இன்று வரை தனக்கான ரசிகர் பட்டாளத்தை விரிவுபடுத்திக் கொண்டே இருப்பவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் 75 வது பிறந்தநாளான (டிசம்பர் 12) இன்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த வண்ணமாக உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு சென்னை போயஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ள நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லத்தின் முன்பு அவரது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு 12 மணிக்கு முன்னரே கூடிய ரசிகர்கள் அவரின் புகைப்படம் பதித்த பிறந்தநாள் கேக்கை வெட்டி விமர்சையாக சூப்பர் ஸ்டாரின் 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடினர். மேலும் போயஸ் கார்டன் பகுதி முழுவதும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கேக் வெட்டிய ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் “உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த வண்ணமாக உள்ளார்கள். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ரசிகர்கள் வெறும் ரசிகர்களாக மட்டும் இல்லாமல் அவர்கள் என்றும் எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக உள்ளனர் . மேலும் ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் வீடு செல்ல வேண்டும்” என பேசியுள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகத்தினர் சூப்பர்ஸ்டாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் வாழ்த்து:

இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டாரின் 75 வது பிறந்தநாளுக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் “ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை!

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்!” என தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து :

எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதள பக்கத்தில் “தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார். திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு!” என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சசிகலா வாழ்த்து:

ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து சசிகலா  “அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு, என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். பண்பின் இலக்கணமாக, எளிமையின் சிகரமாக தமிழக மக்களின் உள்ளங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள் தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், ஆண்டவனின் பரிபூரண ஆசீர்வாதத்தினாலும் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்று நம் இந்திய மண்ணிற்கே பெருமை சேர்த்துள்ளார்கள். 

வாழ்க்கையில் எத்தகைய உச்ச நிலையை அடைந்தாலும் அவர்களது எளிமையான அணுகுமுறையினையும், எல்லோரையும் சமமாக மதித்து, அனைவரிடத்திலும் நட்பு பாராட்டும் உயர்ந்த பண்பினையும் எண்ணி மிகவும் பெருமையடைகிறேன். தங்களுடைய அன்பும், நட்பும், சகோதர பாசமும் என்றென்றும் நிலைத்திருக்க ஆண்டவனின் அருள் கிடைக்கப்பெற வேண்டும்.அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.” என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரதமர் வாழ்த்து:

பிரதமர் நரேந்திர மோடி “திரு ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக்  கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின்  குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.