பொழுதுபோக்கு

தீபாவளிப் பரிசு.. வெறும் ₹10,000-ஆ? - அமிதாப் பச்சனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

அமிதாப் பச்சனின் இந்தச் செயலைப் பாராட்டினாலும், பெரும்பாலானோர் அந்தத் தொகை மிகவும் குறைவு...

மாலை முரசு செய்தி குழு

தீபாவளிப் பண்டிகை முடிந்து சில நாட்களான நிலையில், பாலிவுட்டின் மெகா ஸ்டாரான அமிதாப் பச்சன் தன்னுடைய ஊழியர்களுக்குக் கொடுத்த பரிசுகள் பற்றிய ஒரு வீடியோ வெளியாகி இப்போது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியிருக்கிறது. அவர் அன்பளிப்பாகக் கொடுத்த தொகையைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு கன்டென்ட் கிரியேட்டர் மும்பையில் உள்ள ஜூஹூவில் இருக்கும் அமிதாப் பச்சனின் வீட்டுக்குப் (ஜல்ஸா) போய், அங்கிருந்த ஊழியர்களிடம் பேசிய வீடியோதான் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், "இங்கே ஸ்வீட்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. இது அமிதாப் பச்சனின் வீடு" என்று அவர் பேசுகிறார்.

அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம், தீபாவளிக்குப் பணம் கொடுத்தார்களா என்று கேட்டதற்கு, "ஆமாம், பணமும் கொடுத்தார்கள்" என்று அவர் பதில் அளித்துள்ளார். அதன்பின், அவருக்கு எவ்வளவு பணம் கிடைத்தது என்று கேட்டபோது, அவருக்குப் பத்தாயிரம் ரூபாயும் ஒரு இனிப்புப் பெட்டியும் கிடைத்தது என்று அந்த ஊழியர் கூறியிருக்கிறார்.

இந்த வீடியோவை வெளியிட்டவர், "பாலிவுட்டின் மிகப் பெரிய நடிகர் அமிதாப் பச்சன் தன்னுடைய வீட்டு ஊழியர்களுக்கும், செக்யூரிட்டி பணியாளர்களுக்கும் ₹10,000 பணமும், ஒரு இனிப்புப் பெட்டியும் கொடுத்தார்" என்று கேப்ஷன் கொடுத்திருந்தார். இந்தக் கோடீஸ்வர நடிகரின் ஊழியர்களுக்குக் கிடைத்த அன்பளிப்பு பற்றிய தகவல் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவ ஆரம்பித்தது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், அமிதாப் பச்சனின் இந்தச் செயலைப் பாராட்டினாலும், பெரும்பாலானோர் அந்தத் தொகை மிகவும் குறைவு என்று விமர்சித்தனர். "இரவு, பகல் பாராமல் ஒரு ஸ்டாருக்காக 24 மணி நேரமும் ஓடி ஓடி வேலை செய்யும் ஊழியர்களுக்கு இது மிகவும் குறைவான தொகை. அவர்கள் இன்னும் அதிகமாகப் பெறத் தகுதியானவர்கள்" என்று ஒரு இணையப் பயனர் கமென்ட் செய்துள்ளார். "₹10,000 பெரிய தொகையே இல்லை" என்றும் சிலர் ஏமாற்றத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, சிலர் கடுமையாகவும் விமர்சித்துள்ளனர். "வெறும் பத்தாயிரம்தானா? வெட்கக்கேடு" என்று ஒருவர் கூறியுள்ளார். "தீபாவளி என்றால் ஊழியர்களுக்கு இரட்டிப்புச் சம்பளம் கொடுக்க வேண்டும். குறைந்தது இருபதாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை போனஸாகக் கொடுப்பார்கள்" என்று இன்னொருவர் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பல கம்பெனிகள் மற்றும் முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு ஆடம்பரமான தீபாவளிப் பரிசுகள் கொடுத்த வீடியோக்கள் பரவி வரும் நிலையில், அமிதாப் பச்சனுக்கு எதிரான இந்த விமர்சனம் சூடுபிடித்துள்ளது.

இருப்பினும், ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இல்லை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.