பிரபல பஞ்சாபி பாடகி யஷிந்தர் கவுர், காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, லூதியானா அருகே உள்ள நீலோ கால்வாயில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடகி கவுர் பஞ்சாபி இசைத்துறையில் வளர்ந்து வரும் ஒரு குரலாக விளங்கினார். தனது பிராந்திய இசை நிகழ்ச்சிகளுக்காகவும், சமூக ஊடக பிரபலமாகவும் நன்கு அறியப்பட்டார். சோனே தி சிர்ஹி, ஜிஜா, சோனா லக்டா, மற்றும் தேசி சிர்ரே டா போன்ற பாடல்களுக்காக அவர் பெயர் பெற்றவர். 29 வயதான இவர், மே 13 முதல் தொடர்பில்லாமல் இருந்துள்ளார்.
திடீரென அவரது சடலம் செவ்வாய்க்கிழமை காலை சுமார் 11 மணியளவில் மீட்கப்பட்டதாக தெரியவந்தது. உடலை கைப்பற்றிய, காவல்துறையினர் கொலை வழக்கு எனும் கோணத்தில் விசாரித்து வருகின்றனர், மேலும் இந்த வழக்கின் பல்வேறு கோணங்களையும் ஆராய்ந்து வருகின்றனர்.பஞ்சாப் செய்திகளின்படி, பாடகி கவுர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாகவும், அவரது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்ய வற்புறுத்தப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளதாகவும் தெரிகிறது.
குடும்பத்தினரின் கூற்றுப்படி, அவர் அந்தத் திருமண முன்மொழிவை மறுத்ததால், பின்னர் கொல்லப்பட்டார். மே 13 அன்று மாலை சுமார் 6:30 மணியளவில் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக அவர் வீட்டை விட்டு வெளியே சென்றதாக அவரது சகோதரர் கூறினார். வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை” என்றும் “அவரைத் தொடர்பு கொள்ளவில்லை” என்றும் தெரிவித்தனர். அதையடுத்து உறவினர்கள் அவரைத் தேடத் தொடங்கி, பின்னர் காவல்துறையை அணுகினர்.
விசாரணையின் போது, பஞ்சாப் மோகாவைச் சேர்ந்தவரும் தற்போது கனடாவில் வசிப்பவருமான சுக்விந்தர் சிங் என்ற நபரை அந்த பாடகி அறிந்திருந்தார் என்பதை புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். பின்னர் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்ததாகவும், ஆனாலும் பாடகி கவுரை, தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தியதாகவும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
“குற்றத்தை அரங்கேற்றிய பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், முழு சம்பவத்தையும் வெளிநாட்டில் இருந்தே திட்டமிட்டதாகவும்’’ விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் தங்களது விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகின்றனர்.இந்தர் கவுர் இன்ஸ்டாகிராமில் 1,24,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களுடன் ஒரு வலுவான டிஜிட்டல் இன்புளுயன்சராகவும் இருந்து வந்துள்ளார்.
தற்போது அவரது மரணச் செய்தி ரசிகர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடத்தல் மற்றும் கட்டாயத் திருமண அழுத்தம் குறித்த குற்றச்சாட்டுகள் உட்பட, கிடைக்கப்பெற்ற அனைத்து ஆதாரங்களையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இதுவரை இறுதி முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை, மேலும் பாடகியின் மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து காவல்துறை தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.