தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று (ஜூலை 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இப்படம், பல்வேறு சட்ட மற்றும் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால் தாமதமாகி, தற்போது ரசிகர்களை சந்தித்துள்ளது. விஜயின் 69-வது திரைப்படமாக உருவான ‘ஜனநாயகன்’, அவர் அரசியலுக்காக முழுமையாக சினிமாவை விட்டு விலகும் முன் நடித்த கடைசி திரைப்படம் என்பதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில், கர்நாடகா மற்றும் கேரளாவில் அதிகாலை 6 மணிக்கே ரசிகர்களுக்கான முதல் காட்சிகள் தொடங்கின.
படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா முன்பே, இந்தியா மட்டுமின்றி 30-க்கும் மேற்பட்ட நாடுகளில், சுமார் 7,000 முதல் 8,000 திரைகளில் படம் வெளியாகும் என தெரிவித்திருந்தார். அதன்படி, உலகம் முழுவதும் பிரம்மாண்டமான அளவில் படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு 'ஏ' (A) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 18 வயதிற்குக் குறைவானவர்கள் பெற்றோருடன் வந்தாலும் திரையரங்குகளில் படம் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். விஜய் நடித்த ‘பகவதி’ திரைப்படத்திற்குப் பிறகு, சுமார் 24 ஆண்டுகள் கழித்து அவரது படத்திற்கு மீண்டும் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரியில் ஏன் வெளியாகவில்லை?
2026 ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் வெளியீடாக ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. அதற்காக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திடம் (CBFC) சான்றிதழ் பெற விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை ஆய்வு செய்த சான்றிதழ் வாரிய உறுப்பினர்கள், அதில் இடம்பெற்றிருந்த சில காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்ததால், சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக திட்டமிட்டபடி ஜனவரி 9-ஆம் தேதி படத்தை வெளியிட முடியாத சூழல் உருவானது.
சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, படத்திற்கு யு/ஏ (UA) சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை ஏற்காத மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டை விசாரித்த அமர்வு, தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகிய நிலையில், அந்த வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்து, உயர்நீதிமன்றமே வழக்கை தொடர்ந்து விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தது.
இதன் பின்னர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பு நிறுவனம் தனது மனுவை வாபஸ் பெற்றது. அதே நேரத்தில், படத்தை மீண்டும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திடம் சமர்ப்பித்து, அவர்களின் வழிகாட்டுதலின்படி தேவையான நடைமுறைகளை பின்பற்றுவதாக தெரிவித்தது. இதனால் நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்ததுடன், படத்திற்கு சான்றிதழ் பெறும் நடவடிக்கை மீண்டும் சான்றிதழ் வாரியத்தின் பரிசீலனைக்கு சென்றது.
இணையத்தில் கசிந்த காட்சிகள்
சான்றிதழ் தொடர்பான நடைமுறைகள் நீடித்துக் கொண்டிருந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படம் மற்றொரு சர்ச்சையிலும் சிக்கியது. படம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத சூழலில், அதன் சில காட்சிகள் இணையத்தில் கசிந்ததாக தகவல்கள் வெளியாகின. சமூக வலைதளங்கள் மற்றும் சில இணையதளங்களில் அந்த காட்சிகள் வேகமாக பரவியதால், ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. படத்தின் பாதுகாப்பு மற்றும் காட்சிகள் எவ்வாறு வெளியேறின என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் உடனடியாக விசாரணையை தொடங்கியது.
தொடர்ந்து நடத்தப்பட்ட உள்துறை விசாரணையில், படத்தொகுப்பு (Editing) பணிகளின் போது ஏற்பட்ட அலட்சியமே காட்சிகள் கசிவுக்கு காரணமாக இருந்ததாக தகவல்கள் வெளியானது. குறிப்பாக, படத்தொகுப்பு அலுவலகத்தில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படாததே இந்த சம்பவத்துக்கு வழிவகுத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற கசிவுகளைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இந்த சர்ச்சைகள் அனைத்தையும் கடந்து, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் கடந்த ஜூலை 11-ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக 'ஏ' (A) சான்றிதழ் வழங்கியது. இதனைத் தொடர்ந்து, படம் ஜூலை 23-ஆம் தேதி இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட நிலையில் முதல்வர் விஜய்யின் கடைசி படம் என்பதால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.