பொழுதுபோக்கு

'ஜெயிலர் 2' கொடுத்த அசுர வெற்றி.. இனியும் மோதணுமா? - படு ஸ்மார்ட்டாக ரூட்டை மாற்றுகிறாரா முதல்வர்?

வெறுப்பை வளர்க்கும் வகையிலான விவாதங்கள் தேவையற்ற எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் கருதுவதாகவும்

Muthu Lakshmi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் அக்டோபர் 15ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம், வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது. வெளியான ஐந்து நாட்களிலேயே உலகளவில் ரூ.500 கோடியை நெருங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வார இறுதிக்குள் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு வெளியான 2.o திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.800 கோடி வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில், இந்தச் சாதனையை ‘ஜெயிலர் 2’ முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, தமிழில் ரூ.1,000 கோடி வசூலை எட்டும் முதல் படமாக ‘ஜெயிலர் 2’ உருவெடுக்குமா என்ற கேள்வியும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

தீபாவளி வரை பெரிய படங்கள் எதுவும் இல்லை என்பதால் தென்னிந்தியாவில் வசூல் வேட்டை.. இந்த சாதனையை உறுதி செய்ய கூடும் என்றும் கணிக்கப்படுகிறது. ஏற்கெனவே ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வரும் இந்த வெற்றி, மற்ற சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், சினிமா வட்டாரத்தில் இன்னொரு சுவாரஸ்யமான பேச்சும் உலவி வருகிறது. அதுதான் ரஜினிகாந்த் – தமிழக முதலமைச்சர் விஜய் சந்திப்பு!

‘ஜெயிலர் 2’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெறலாம் என்றும், அதைத் தொடர்ந்து நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. சென்னையில் நடைபெறவுள்ள வரவேற்பு நிகழ்ச்சி குறித்த தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் திரைத்துறைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது என தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் காவ்யா மாறனின் திருமண வரவேற்பில் கிரிக்கெட் பிரபலங்களும் கலந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இந்த நிகழ்ச்சியில் நடக்கப்போகும் இன்னொரு சுவாரஸ்யம் தான் என்னவென்றால்!

அனிருத், ரஜினிகாந்தின் உறவினர் என்பதால் இந்த நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அனிருத்துடன் நட்பாகப் பழகி வரும் விஜய்யும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. அப்படி இருவரும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றால், ரஜினிகாந்தும் விஜய்யும் சந்தித்துக்கொள்ளும் சூழல் உருவாகலாம். இதில் என்ன என்று கேட்பது புரிகிறது.. அதற்குப் பின்னால் ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ரஜினி விஜய் ரசிகர்களின் மோதல் இருக்கிறது!

ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே படங்களின் வெளியீடு, வசூல் சாதனைகள், யார் பெரிய நட்சத்திரம் என்ற விவாதங்கள் மற்றும் அரசியல் எனப் பல்வேறு விஷயங்களில் அடிக்கடி மோதல்கள் எழுந்துள்ளன. சில நேரங்களில் இந்த விவாதங்கள் அரசியல் ரீதியான விமர்சனங்களாகவும் மாறியிருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் இரு தரப்பு ரசிகர்களும் ஒருவரையொருவர் விமர்சிப்பதும் அடிக்கடி நடந்துவரும்.

இப்படிப்பட்ட சூழலில், இரு நடிகர்களும் நேரில் சந்தித்துப் பேசினால் அது ரசிகர்களிடையே நிலவும் மோதல்களைக் குறைப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியானாலே, ரசிகர்கள் மத்தியில் நிலவும் சில தேவையற்ற விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. 

‘ஜெயிலர் 2’ படத்தின் வெற்றி மற்றும் வரவேற்பு தலைவரு நிரந்தரம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த நேரத்தில் ரஜினி மீதான வெறுப்பை வளர்க்கும் வகையிலான விவாதங்கள் தேவையற்ற எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் கருதுவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த நேரத்தில் ரஜினியின் ஆதரவை பெறுவது விஜயின் அரசியல் பயணத்தில் கூட நன்மை பயக்கும் என கருதலாம். இருவரின் இந்த சந்திப்பு இதற்கு எண்டுக்கார்ட் போடும் வாய்ப்பை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது. அதனால், இருவரும் இடையே சுமுகமான சந்திப்பு நிகழுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஆனால், ஒருபுறம் ‘ஜெயிலர் 2’ வசூல் சாதனை, மறுபுறம் அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு எனப் பரபரப்பான சூழல் உருவாகியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் ரஜினியும் விஜய்யும் சந்தித்துக்கொள்வார்களா என்ற கேள்வி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.