பொழுதுபோக்கு

பாலிவுட்டை பார்த்து பாலிவுட்டே பயப்படுகிறதா ? ரன்வீர் சிங் படத்தின் வெற்றியால் பீதியில் இயக்குனர்கள் - ராம் கோபால் வர்மா!

இதுதான் இப்போது மற்ற இயக்குனர்களுக்குப் பெரிய பயத்தைக் கொடுத்துள்ளது...

மாலை முரசு செய்தி குழு

இந்தியத் திரையுலகில் எப்போதுமே தனது காரசாரமான கருத்துக்களால் பரபரப்பை ஏற்படுத்துபவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. தற்போது பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர்' (Dhurandhar) திரைப்படம் குறித்து அவர் கூறியுள்ள கருத்துக்கள் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம், வழக்கமான மசாலா படங்களின் இலக்கணத்தை உடைத்து எறிந்துள்ளதாகவும், இதனால் பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர் கலக்கத்தில் இருப்பதாகவும் ராம் கோபால் வர்மா வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், 'துரந்தர்' திரைப்படத்தை மகாபாரதத்துடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். "நான் எந்தப் படத்தையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், கடந்த 7 முதல் 10 ஆண்டுகளாகப் பாலிவுட்டில் வரும் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் மனிதர்கள் காற்றில் பறப்பது போன்ற நம்பகத்தன்மையற்ற சண்டை காட்சிகளையே கொண்டிருந்தன. மக்கள் அதைப் பார்த்துப் பழகிவிட்டார்கள் என்று இயக்குனர்கள் நினைத்தார்கள். ஆனால், 'துரந்தர்' அந்த விதியை மாற்றியமைத்துள்ளது. இதில் வரும் சண்டை காட்சிகள் மிகவும் இயல்பாக, நிஜத்தில் எப்படி நடக்குமோ அப்படி இருக்கின்றன. இதை மக்கள் பெருமளவு கொண்டாடுகிறார்கள். இதுதான் இப்போது மற்ற இயக்குனர்களுக்குப் பெரிய பயத்தைக் கொடுத்துள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், "இந்தத் படத்தின் வெற்றி பல இயக்குனர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. இப்போது தயாரிப்பில் இருக்கும் பல படங்களின் கதி என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. வழக்கமான மசாலா ஆக்ஷன் படங்களை எடுத்துக்கொண்டிருக்கும் எனது நண்பர்களான மூன்று, நான்கு இயக்குனர்கள் இப்போது பயத்தில் உறைந்து போயிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் திரைக்கதையை மீண்டும் திருத்தி எழுத வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஏனென்றால், 'துரந்தர்' போன்ற ஒரு எதார்த்தமான படத்தைப் பார்த்த பிறகு, மக்கள் பழைய பாணியிலான மிகைப்படுத்தப்பட்ட படங்களைப் பார்த்தால் திரையரங்கலேயே சிரித்து விடுவார்கள். அந்த வகையில் 'துரந்தர்' ஒரு திரைப்படம் மட்டுமல்ல, அது இந்திய சினிமாவின் ஒரு மிகப்பெரிய பாய்ச்சல்" என்று ராம் கோபால் வர்மா புகழ்ந்து தள்ளியுள்ளார்.

பாலிவுட் திரையுலகம் ஆரம்பத்தில் இந்தப் படத்தின் வெற்றியைப் புறக்கணிக்க முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். "தொடக்கத்தில் பலர் இந்தப் படம் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. காரணம், அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இது அவர்களுக்கு ஒரு 'ஹாரர்' (பேய்) படம் போன்றது. ஆனால் இது ரசிகர்களைப் பயமுறுத்தவில்லை, மாறாகத் சக இயக்குனர்களைப் பயமுறுத்துகிறது. உங்களால் இது போன்ற ஒரு படத்தை மீண்டும் எடுக்க முடியுமா? அல்லது இதைப் போலச் சிந்திக்கவாவது முடியுமா? என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது. அதனால் தான் வெற்றி பெற்றும் கூட, பாலிவுட் இந்த படத்தைக் கண்டு கொள்ளாமல் இருக்க முயல்கிறது" என்று அவர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

படத்தில் வரும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பைக் குறித்தும் அவர் வியந்து பேசியுள்ளார். "இதை நான் நவீன மகாபாரதம் என்று சொல்வேன். இதில் வரும் 'பாபு டகைட்' போன்ற கதாபாத்திரங்கள் திரையில் வரும் நேரம் குறைவுதான். ஆனால், அவர்கள் வரும் அந்த 20 நிமிடங்களில் ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம். பின்னணி இசையும், அந்தக் கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் நமக்கு ஒரு உளவியல் ரீதியான பயத்தை ஏற்படுத்துகிறது. முகம் தெரியாத ஒருவன் எப்படி இவ்வளவு மிரட்டலாக இருக்க முடியும் என்பதை இந்தப் படம் நிரூபித்துள்ளது. இதுதான் உண்மையான திரைக்கதை" என்று அவர் விளக்கினார்.

இறுதியாக, ரன்வீர் சிங்கின் நடிப்பை சன்னி தியோலின் 'கடார்' படத்துடனும் ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் ராம் கோபால் வர்மா. "சன்னி தியோல் 'கடார்' படத்தில் 'தாய் கிலோ கா ஹாத்' (இரண்டரை கிலோ கை) என்று கத்திக்கொண்டு வசனம் பேசுவது இப்போது பார்க்கும்போது மிகவும் செயற்கையாகத் தெரிகிறது. ஆனால், 'துரந்தர்' படத்தில் ரன்வீர் சிங் ஏற்றுள்ள 'ஹம்சா' கதாபாத்திரம் பெரும்பாலும் பேசுவதே இல்லை. அவர் என்ன நினைக்கிறார், அடுத்து என்ன செய்வார் என்பதே நமக்குத் தெரியாது. ஒரு உளவாளி (Spy) என்பவன் இப்படித்தான் இருக்க வேண்டும். அவன் கூட்டத்தோடு கூட்டமாகத் தன்னை மறைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் மற்ற படங்களில் ஹீரோக்களுக்குத் தேவைக்கதிகமான பில்டப் கொடுக்கிறார்கள். ரன்வீர் சிங் அந்த அமைதி மூலமே மிரட்டியுள்ளார்" என்று தனது பாணியில் ஒரு புதிய விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.