இன்று பலருக்கும் இரவென்றாலே இசைஞானி இளைராஜாவின் பாடல்கள்தான் நினைவிற்கு வரும். தென்றலை போன்று வருடிடும் அவரது இசைக்கு இங்கு மயங்காதவர்கள் இருக்கமுடியாது என்றுதான் கூறவேண்டும். இன்னும் இலகுவாக சொல்லவேண்டும் என்றால் Gen Z தலைமுறைகள் கூட அவரது இசைக்கு அடிமைதான். இந்த இசை கடவுளை பற்றி ஒரு பார்வை பார்க்கலாமா?.
இளையராஜா 1943ம் ஆண்டு தேனி மாவட்டம் கம்பத்தில் பிறந்துள்ளார். அதன்பின்பு 1968 ராஜா தனது 25 வயதில், தென்னிந்தியாவின் திரைப்படத் தலைநகரான மெட்ராஸ் நகருக்கு இசையை தேடி வந்தார். அவர் தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய பாணியில் கிதார் மற்றும் பியானோ போன்ற கருவிகளை வாசிக்கவும் தொடங்கினார். பின்பு, 1976 இளையராஜா தனது இசையை 1976-ல் வெளியான ' அன்னக்கிளி' என்ற திரைப்படத்தின் மூலம் வெளிக்கொணர்ந்தார். ஒரு கிராமியக் கதையை மையமாகக் கொண்ட அத்திரைப்படத்திற்கு, இளையராஜா அற்புதமான மெல்லிசைகளை அமைத்திருந்தார். அப்பாடல்கள், தமிழ் நாட்டுப்புறப் பாடல்களுக்கே உரிய எளிமையையும் இசை நயத்தையும் தத்ரூபமாக கொடுத்தது. இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியான உடனேயே பெரும் வெற்றி பெற்றன. குறிப்பாக, எஸ். ஜானகி பாடிய 'மச்சனா பார்த்தீங்களா' ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
இளையராஜா, 1970-களின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை தென்னிந்தியத் திரைப்படத்துறையின் ஒரு முக்கிய இசையமைப்பாளராகத் திகழ்ந்துவருகிறார். இவரது படைப்புகள் தமிழ் நாட்டுப்புறப் பாடல் வரிகளை ஒருங்கிணைத்து, பரந்த மேற்கத்திய இசை கருவிகளை ஒன்றிணைத்து தென்னிந்திய இசை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். சிறந்த திரைப்பட இசைக்கான இந்திய தேசிய திரைப்பட விருதை இவர் மூன்று முறை வென்றுள்ளார். இவரது, 'மலை கோயில் வாசலில்' பாடல் இருக்கிறதே, ஐயோ.. பின்னணி இசையில் ராஜா விளையாடி இருப்பார் என்றுதான் கூறவேண்டும். சொர்ணலதா - மனோவின் குரலில் மனதினை விண்ணிற்கு பயணசீட்டு இல்லாமலேயே அழைத்து செல்லும்.
பல காதல் தோல்விகளுக்கு ராஜாவின் 'தளபதி' திரைப்படத்தில் வரும் 'சுந்தரி கண்ணால் ஒரு செய்தி' என்ற பாடல் மற்றும் அதன் பின்னணி இசை என்று நமது இளைஞர்களுக்கு இதுதான் கைகொடுத்து வருகிறது. எந்த சூழ்நிலையிலும் கல்லு போல இருக்கும் மனிதனையும் இளையராஜாவின் 'தென்பாண்டி சீமையிலே' பாடல் கல்லையும் கரைந்து உருகி ஓட வைத்துவிடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஒருதலை காதலுக்கு 'பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா' பாடல் முதல் வரிசையில் வந்துவிடும். காதலுக்கு ராஜாவின் மொத்த பாடல்களையும் எடுத்து கொள்ளலாம். ஆனாலும் குறிப்பாக 'தென்றல் வந்து தீண்டும் போது' பாடல் இதயத்தை தீண்டாமல் இருக்க வாய்ப்பே இல்லை. 'என் அத்தான் உன்னை எண்ணித்தான்' எண்ணி காதலனை எண்ணி எண்ணி பட 'இந்த மான் உந்தன் சொந்த மான்' பாடல். அதேபோல இளையராஜாவின் 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தின் பாடல்கள் எதையும் நம்மால் தவிர்க்கவே முடியாது. மதுர மரிக்கொழுந்தில் தொடங்கி மாரியம்மா மாரியம்மா என்று ஊர் திருவிழா வைப் செய்துவிட்டு காதல் வரை செய்துவிட்ட பின்பு 'குடகு மலை காற்றில் ஒரு பாட்டு கேக்குதா?' என்று காதல் தோல்வி வரை ராஜா ஒரு சுற்று நம்மை அழைத்து சென்று விடுவார்.
பொன்மன செம்மல் திரைப்படத்தில் வரும் 'அடிச்சேன் காதல் பரிசு' பாடலில் காதலியோடு தனக்கு நடக்கவிருக்கும் திருமணத்தில் 'மாலையில் நடக்கணும் இளையராஜா கச்சேரி' என்று தங்கள் ஆசையை இருவரும் கூறுவர். அது பல இளையராஜா ரசிகர்களின் ஆசை என்றுதான் கூறவேண்டும். ராஜாவின் பாடலில் செந்தாழம் பூவில், மடை திறந்து, இது ஒரு பொன்மலை பொழுது, புத்தம் புது காலை, ஏரிக்கரை மேலிருந்து என்று பல பாடல்களை அடுக்கி கொண்டே போகலாம். ஏனென்றால் கிட்டத்தட்ட 8,600+ பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உட்பட ஒன்பது மொழிகளில் சுமார் 1,523 திரைப்படங்களுக்கு முழுமையான பின்னணி இசையையும் பாடல்களையும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக இசையில் பஞ்சமுகி, ராஜலஹரி என்கிற புதிய ராகங்களை உருவாக்கிப் பிரவாகமெடுத்த இளையராஜா, இப்போது தனது முதல் அசல் சிம்பொனிக்கு வந்து சேர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிப்பிடத்தக்கது. ஈவென்டிம் அப்பல்லோ அரங்கத்தில் இளையராஜாவின் சிம்பொனி இசை அரங்கேற்றப்பட்டது.
தற்போது தனது 82வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். "நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது?" என்று 'இதயம் ஒரு கோயில்' பாடலில் வரும் வரியை போன்று ராஜாவின் இசையும் நாமும் பிரிக்க முடியாத ஒன்றுதான்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.