Yash 
பொழுதுபோக்கு

Yash: பஸ் டிரைவரின் மகன் டூ ரூ.500 கோடி படத்தின் ஹீரோ - கனவு நாயகனின் கதை!

நெஞ்சில் கனவுகளையும் கையில் டீ பிளாஸ்க்கையும் சுமந்து கொண்டு ஒரு நாளுக்கு 50 ரூபாய் சம்பாதித்த யாஷை உங்களுக்குத் தெரியுமா?

மாலை முரசு செய்தி குழு

நம் எல்லோருக்குமே ராக்கி பாயாகத்தான் இவரைத் தெரியும். கே.ஜி.எஃப்: சாப்டர் 1 கன்னட சினிமாவையே புரட்டிப்போட்ட படம். அதுவரை நான்கைந்து கன்னட நடிகர்களின் பெயரைக்கூட சாமானிய தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்திருக்காது. ஆனால், ஒரு சாதாரண ஆக்ஷன் ஹீரோ யாஷை, அதற்கு முந்தைய சாக்லேட் பாய் யாஷை, அதற்கும் முந்தைய ஒரு ஓட்டுநரின் மகனான யாஷை, நெஞ்சில் கனவுகளையும் கையில் டீ பிளாஸ்க்கையும் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு ரூ.50 சம்பாதித்த யாஷை — இல்லை, நவீன் குமாரை — உங்களுக்குத் தெரியுமா? ஆம். அதுதான் அவரது நிஜப் பெயர்.

ஒரு ஓட்டுநரின் மகன் கண்ணாடியில் ஒரு சூப்பர் ஸ்டாரைக் காண்பது எளிதல்ல. உங்களுக்கு இருக்கும் கடவுள் நம்பிக்கையைப் போல 100 மடங்கு நம்பிக்கை தேவை. அந்த நம்பிக்கையின் கதை இது.

Yash Family

இது ஒரு வழிப்பாதை!

யாஷின் தந்தை அருண் குமார், பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (பி.எம்.டி.சி) பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்தவர். தாயார் புஷ்பா, இல்லத்தரசி. மகன் நடிகராக வேண்டும் என்ற ஆசையுடன் வீட்டை விட்டு புறப்பட்டபோது, பெற்றோர், "நடிகராவதற்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா என்பதை சோதித்து பார். ஆனால் அது நடக்கவில்லை என்றால் நாங்கள் சொல்வதைக் கேட்டு வேலைக்கு செல்ல வேண்டும்" என்ற நிபந்தனையுடன் அனுமதித்துள்ளனர். எல்லா மிடில் கிளாஸ் பெற்றோருக்கும் இருக்கும் பதைபதைப்பு தான் அந்த நிபந்தனை.

'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் யாஷ் இதைப் பற்றி கூறுகையில், "நான் திரும்பிப் போனால், என் பெற்றோர் என்னை மீண்டும் திரும்பி வர அனுமதிக்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். நடிகனாக முயற்சி செய்ய அவர்கள் எனக்கு சுதந்திரம் கொடுத்தார்கள். ஆனால் அது சரிவரவில்லை என்றால், அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பது நிபந்தனை" என்று குறிப்பிட்டிருந்தார்.

பெங்களூரு நகரம் பயமுறுத்தும் அளவுக்கு பெரியதாக இருந்தாலும், போராட்டங்களைப் பற்றி தனக்கு எந்தப் பயமும் இல்லை என்று யாஷ் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

நடிப்புதான் வாழ்க்கை என்றான பிறகு நாடகக் களத்திலிருந்து தொலைக்காட்சி வரை, அவர் செய்யாத வேலையே இல்லை. மேடைக்குப் பின்னால் தேநீர் ஊற்றிக் கொடுத்து 50 ரூபாய் மட்டுமே சம்பாதித்த நாட்களும் உண்டு. ஒரு கன்னட இயக்குநருக்கு உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். எத்தனை விசித்திரமான வேலைகளாக இருந்தாலும், அவர் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை.

Yash in Serials

பி.வி.கரந்த் அவர்களின் 'பேனகா' நாடகக் குழுவில் சேர்ந்ததுதான் யாஷின் கலைப் பயணத்தின் தொடக்கம். அதன் பிறகு, 2004ஆம் ஆண்டு 'உத்தராயண' தொடர் மூலம் கன்னட தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்னர், மிகவும் பிரபலமான 'நந்த கோகுல' தொடர் அவருக்கு அடையாளம் ஏற்படுத்தித் தந்தது. ஒரே நேரத்தில் 5 சீரியல்களில் நடிக்கும் அளவு பிஸியான நடிகரானார். ஆனால் அவரது சினிமா கனவு அவரைத் தூரத்திக்கொண்டே இருந்தது.

2007இல் 'ஜம்பாத ஹுடுகி' திரைப்படம் மூலம் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமானார். 2008இல் அவர் ஹீரோவாக நடித்து வெளியான 'மொகினா மனசு' மிகப் பெரிய ஹிட் ஆனது. ஆனால் அடுத்த ஆண்டே வந்த ராக்கி மிகப்பெரிய பிளாப்.

'குக்ளி', 'மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமாச்சாரி' போன்ற வெற்றிப் படங்கள் மூலம் படிப்படியாக முன்னேறினார். வித்தியாசமான கெட்டப், உடல்மொழி, வசனம், ஆக்‌ஷன், காமெடி, டான்ஸ் என ஆல் ஏரியாவிலும் யாஷ் கில்லி.

2016-ம் ஆண்டு, தன் முந்தைய படத்தின் கதாநாயகியான ராதிகா பண்டிட்டைத் திருமணம் செய்துகொண்டார். நடிகர் விஜயகாந்த் போலவே தனது திருமணத்தின்போது ரசிகர்கள் அனைவருக்கும் விருந்து கொடுத்தார்.

'கே.ஜி.எஃப்' படங்கள் மூலம் அவருக்குக் கிடைத்த அளவிலான உலகளாவிய புகழை அவரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.

KGF

'ராக்கி பாய்' சகாப்தம்

2018ஆம் ஆண்டு, 'கே.ஜி.எஃப் சாப்டர் 1' படம் யாஷை நட்சத்திரங்களின் வரிசையில் முதல் இடத்தில் நிறுத்தியது. கேங்ஸ்டர் கதைக்களம் கொண்ட இந்தப் படம், உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வசூல் செய்தது. யாஷின் கட்டுமஸ்தான தோற்றமும், அவரது ஸ்டைலும் பார்வையாளர்களை உடனடியாகக் கவர்ந்தன.

'ராக்கி பாய்' கதாபாத்திரத்தின் கடுமையான உறுதியும், அசைக்க முடியாத தன்னம்பிக்கையும், யாஷின் சொந்த வாழ்க்கையில் இருந்த மனோபலத்தையே பிரதிபலிப்பதாக இருந்தது. அந்தப் படத்தின் தாக்கம் நாடு முழுவதும் பரவியது.

அதைத் தொடர்ந்து 2022இல் வெளியான 'கே.ஜி.எஃப் சாப்டர் 2' படம், உலகம் முழுவதும் 1,200 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்து, அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்தது. இதன் மூலம், தென்னிந்திய சினிமாவில் யாஷ் நட்சத்திரங்களுக்கு நடுவில் பௌர்ணமி நிலவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஒட்டுமொத்த கன்னட சினிமாவும் சலாம் ராக்கி பாய் என்றது.

இத்தனை பெரிய வெற்றியைப் பெற்ற பிறகும், யாஷ் தன் வேர்களை மறக்கவில்லை என்பதே அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. 2017இல், தன் மனைவியும் நடிகருமான ராதிகா பண்டிட்டுடன் இணைந்து, 'யசோ மார்க்கா அறக்கட்டளை' என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார்.

இந்த அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளைச் செய்துவருக்கிறார். உதாரணமாக கர்நாடகா மாநிலம், கோப்பால் மாவட்டம், யெல்பர்கா தலுகாவில் உள்ள தள்ளூர் கிராமத்தில் 20 கிராமங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த ஏரி வற்றிவிட்டது. அதைத் தூர்வாரவும் அகலப்படுத்தவும், இன்னும் சில நீர்நிலைகளைத் தூர்வாரவும் 4 கோடி நிதி உதவி அளித்து, தானே முன்னின்று பணிகளைச் செய்தார். 

கடந்த சென்னைப் பெருவெள்ளத்தின்போதும் பெங்களூரிலிருந்து நிவாரணப் பொருள்களை அளித்து உதவி செய்தவர். இதை ஒரு விழாவில் நடிகர் விக்ரம் பெருமையாகப் பகிர்ந்துகொண்டார்.

Yash as Ravana

பஸ்மீடியா தகவலின்படி, 2026ஆம் ஆண்டு நிலவரப்படி, யாஷின் மொத்த சொத்து மதிப்பு 50 முதல் 60 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வட பெங்களூருவின் பிரஸ்டீஜ் கோல்ஃப்ஷயரில், 6 முதல் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரமான இரட்டை மாடி வீடு ஒன்றும், அதைத் தவிர பல்வேறு நிலவுடமைகளும் அவருக்கு உண்டு. ஆடம்பரமான வீடுகள் முதல் விலையுயர்ந்த கார்கள் வரை - யாஷ் தான் கண்ட கனவை உண்மையிலேயே நனவாக்கியிருக்கிறார்.

எல்லாவற்றையும் விட நடிப்புக்கான அவரது கனவை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத உயரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இந்த ஆண்டு அதிகம் பேசப்படும் இரண்டு படங்கள் என்றால், கீதூ மோகன்தாஸ் இயக்கும் 'டாக்சிக்: ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' மற்றும் நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் 'ராமாயணா' ஆகிய இரண்டும்தான்.

Yash in TOXIC

'டாக்சிக்' படத்தில் யாஷ் கதாநாயகனாக நடிக்க, 'ராமாயணா' படத்தில் ராவணனாக மாறி, ரன்பீர் கபூர் நடிக்கும் ராமன் கதாபாத்திரத்தையே ஒரு வகையில் மிஞ்சிவிட்டதாக கூறப்படுகிறது.

கே.வி.என் தயாரிக்கும் டாக்ஸிக் படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடி என்றால், நிதேஷ் திவாரி தயாரிக்கும் 'ராமாயணா' படத்தின் பட்ஜெட் 4,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பஸ் டிரைவரின் மகன் கண்ணாடி முன்னாள் நிற்கும்போது தன்னை 4000 கோடி படத்தில் கற்பனை செய்திருக்க மாட்டான் என்பதுதான் உண்மை. ஆனால் கண்ணாடியில் தெரிந்த மனிதன் மீது அவன் வைத்த நம்பிக்கைதான் இன்று இந்த உயரத்துக்கு அழைத்து வந்திருக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.