ஒருவருக்கு திடீரென பேச்சு குழறுகிறது, முகத்தின் ஒரு பக்கம் இழுத்துக்கொள்கிறது, கை அல்லது கால்களை அசைக்க முடியவில்லை என்றால், அதை சாதாரண உடல் சோர்வு என்று நினைத்து அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால், இவை பக்கவாதத்தின் (Brain Stroke) முக்கியமான அறிகுறிகளாக இருக்கலாம். பக்கவாதம் ஏற்பட்டால் ஒவ்வொரு நிமிடமும் மூளையில் சுமார் 20 லட்சம் செல்கள் அழியக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது, மருத்துவ உதவி கிடைப்பதில் ஏற்படும் சிறிய தாமதம்கூட ஒருவரின் பேச்சு, நினைவாற்றல், உடல் இயக்கம் ஆகியவற்றைப் பாதிக்கலாம்.
நமது மூளை சரியாகச் செயல்படுவதற்கு தொடர்ந்து ரத்த ஓட்டமும், அதன் மூலம் கிடைக்கும் ஆக்சிஜன் மற்றும் சத்துக்களும் அவசியம். ஆனால், மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தில் ரத்தக்கட்டி உருவாகி அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது ரத்த நாளம் வெடித்து ரத்தக்கசிவு ஏற்பட்டாலோ பக்கவாதம் ஏற்படுகிறது. இதில் சுமார் 80 சதவீத பக்கவாத பாதிப்புகள் ரத்தக்கட்டி காரணமாக ரத்த நாளம் அடைப்பதால் ஏற்படுகின்றன என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மூளையின் ஒரு பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும்போது, அந்தப் பகுதிக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இதனால் மூளை செல்கள் முதலில் தங்களது இயல்பான செயல்பாட்டை இழக்கத் தொடங்குகின்றன. தொடர்ந்து ரத்த ஓட்டம் கிடைக்காவிட்டால் அந்த செல்கள் இறந்துவிடும். இதன் காரணமாக உடலின் ஒரு பக்கம் செயலிழப்பது, பேசுவதில் சிரமம், பார்வை பாதிப்பு, நினைவாற்றல் குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால்தான் மருத்துவர்கள், பக்கவாத சிகிச்சையில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம் என்பதை வலியுறுத்துகின்றனர்.
மூளையில் பக்கவாதம் ஏற்படுவதை எப்படிக் கண்டறிவது? இதற்கு மருத்துவர்கள் FAST என்ற எளிய முறையைப் பரிந்துரைக்கின்றனர். இதில் F என்பது Face (முகம்). ஒருவரிடம் சிரிக்கச் சொன்னால் முகத்தின் ஒரு பக்கம் மட்டும் கீழே இழுத்துக்கொள்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். A என்பது Arm (கை). இரண்டு கைகளையும் உயர்த்தச் சொல்லும்போது ஒரு கையை மட்டும் உயர்த்த முடியாமல் போகிறதா என்று பார்க்க வேண்டும். S என்பது Speech (பேச்சு). பேசும்போது வார்த்தைகள் குழறுகிறதா அல்லது பேசுவதில் சிரமம் ஏற்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். T என்பது Time (நேரம்). இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.
இதுதவிர திடீரென பார்வை மங்குவது, கடுமையான தலைவலி, தலைச்சுற்றல், நடக்கும்போது சமநிலை இழப்பது போன்றவையும் எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். சில நிமிடங்களில் அறிகுறிகள் மறைந்துவிட்டாலும் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதும் முதலில் CT ஸ்கேன் அல்லது MRI மூலம் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதா அல்லது ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளதா என்பதை மருத்துவர்கள் கண்டறிவார்கள். அதன்பிறகு பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை வழங்கப்படும். ரத்தக்கட்டி காரணமாக ஏற்பட்ட பக்கவாதம் என்றால், தகுதியான நோயாளிகளுக்கு ரத்தக்கட்டியைக் கரைக்கும் மருந்து செலுத்தப்படலாம். பொதுவாக இதற்கான முக்கியமான கால அவகாசம் அறிகுறிகள் தொடங்கிய முதல் 4.5 மணி நேரமாகும்.
பெரிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால், 'மெக்கானிக்கல் த்ராம்பெக்டமி' (Mechanical Thrombectomy) என்ற சிகிச்சை முறையும் பயன்படுத்தப்படுகிறது. இதில் மண்டை ஓட்டைத் திறந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதில்லை. கை மணிக்கட்டு அல்லது தொடைப் பகுதியில் சிறிய துளையிட்டு, அதன் வழியாக மெல்லிய குழாயை ரத்த நாளங்கள் வழியாக மூளைக்குக் கொண்டு செல்வார்கள். பின்னர் சிறிய கருவி அல்லது உறிஞ்சும் சாதனத்தின் உதவியுடன் ரத்தக்கட்டியை அகற்றுவார்கள். குறிப்பிட்ட நோயாளிகளுக்கு மூளை ஸ்கேன் முடிவுகளின் அடிப்படையில் 24 மணி நேரம் வரையிலும் இந்தச் சிகிச்சை அளிக்க வாய்ப்புள்ளது.
சிகிச்சைக்குப் பிறகும் நோயாளியின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பின் அளவு போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதுடன், தேவைக்கேற்ப பிசியோதெரபி, பேச்சுப் பயிற்சி போன்ற மறுவாழ்வு சிகிச்சைகளும் வழங்கப்படும். பக்கவாதம் என்பது வயதானவர்களுக்கு மட்டுமே வரும் பிரச்சினை அல்ல. யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். அறிகுறிகள் தென்பட்டதும் காத்திருக்காமல் மருத்துவமனைக்குச் செல்வதே மூளை செல்களைப் பாதுகாப்பதற்கான முக்கியமான நடவடிக்கை. பக்கவாதத்தைப் பொறுத்தவரை தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கலாம் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.