இந்தியாவில் நீரிழிவு நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புதிய மருத்துவ ஆய்வு ஒன்று மூன்று எளிய உணவு மாற்றங்கள் மூலம் நீரிழிவு அபாயத்தை 31 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று கண்டறிந்துள்ளது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் தரவுகளின்படி, இந்தியாவில் 101 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயாளிகளாகவும், 136 மில்லியன் பேர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் (prediabetes) இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்தச் சூழலில், அன்றாட உணவில் நாம் செய்யும் சிறு மாற்றங்கள் ரத்த சர்க்கரை அளவைச் சீராக வைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. ஐரோப்பாவில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஊட்டச்சத்து ஆய்வான 'பிரெடிமெட்-பிளஸ்' (PREDIMED-Plus) சோதனையின் மூலம் இந்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வு, 55 முதல் 75 வயதுக்குட்பட்ட, வளர்சிதை மாற்றக் கோளாறு (metabolic syndrome) உள்ள 4,700 நபர்களிடம் ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்டது. ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு மெடிட்டரேனியன் உணவு முறை மற்றும் கலோரி கட்டுப்பாடுடன் கூடிய வாழ்க்கை முறை மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதைப் பின்பற்றிய குழுவினருக்கு நீரிழிவு அபாயம் 31 சதவீதம் குறைந்திருப்பது உறுதியானது. இந்த உணவு மாற்றங்கள் உடல் எடை குறைப்பு, இடுப்பு சுற்றளவு குறைப்பு மற்றும் சிறந்த வளர்சிதை மாற்ற ஆரோக்கியம் ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடையவை என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
முதல் முக்கிய மாற்றமாக, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் ஆலிவ் ஆயில் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த 'மெடிட்டரேனியன் உணவு முறையை' பின்பற்ற வேண்டும். இது உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைத்து, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, ரத்த சர்க்கரை அளவைச் சமநிலையில் வைக்க உதவுகிறது. இரண்டாவது மாற்றமாக, தினசரி உட்கொள்ளும் கலோரி அளவை மிதமான அளவில் குறைக்க வேண்டும். ஆய்வில் பங்கேற்றவர்கள் தினமும் 600 கலோரிகளைக் குறைத்ததன் மூலம், சிறந்த குளுக்கோஸ் கட்டுப்பாடு மற்றும் உடல் கொழுப்பு குறைப்பை அடைந்தனர். உடல் பருமன் தான் நீரிழிவு நோய்க்கான முக்கியக் காரணி என்பதால், கலோரிக் கட்டுப்பாடு இதற்குச் சிறந்த மருந்தாக அமைகிறது.
மூன்றாவது மாற்றமாக, முறையான வாழ்க்கை முறை ஆதரவை மேற்கொள்ள வேண்டும். வெறும் உணவு மாற்றங்கள் மட்டும் போதாது, அதனுடன் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளை இணைக்க வேண்டும். மேலும், முறையான உடல் எடை குறைப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது ரத்த சர்க்கரை சுரப்பைக் கட்டுப்படுத்த உடலுக்கு உதவும். இந்த மூன்று மாற்றங்களும் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பது, நாள்பட்ட வீக்கத்தைக் குறைப்பது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது போன்ற பலன்களைத் தருகின்றன. பிரீ-டயாபடீஸ், உடல் பருமன் மற்றும் குடும்பத்தில் நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் இந்த முறையைத் தீவிரமாகப் பின்பற்றுவது, வருங்காலத்தில் மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகள் உருவாவதைத் தடுக்க உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.