தினசரி காபி அருந்துவது, பக்கவாதம் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பது உட்பட பல உடல்நல நன்மைகளுடன் தொடர்புடையதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 'ஜர்னல் ஆஃப் அஃபெக்டிவ் டிஸ்ஆர்டர்ஸ்' இதழில் வெளியிடப்பட்ட இந்தக் கண்டுபிடிப்புகள், சீனாவின் ஃபுடான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை. மனநிலை மற்றும் மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளுக்கு எதிராக காபி அருந்துதல் என்பது ஒரு பாதுகாப்புப் பங்கை ஆற்ற முடியுமா? என்பதை இந்த ஆய்வு பகுப்பாய்வு செய்தது. காபி அருந்தாதவர்கள் மற்றும் தினமும் மூன்று கோப்பைகளுக்கு மேல் அருந்துபவர்களுடன் ஒப்பிடுகையில், ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கோப்பைகள் வரை காபி அருந்துபவர்களுக்கு பதட்டம் அல்லது மனச்சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மனநலப் பலன்களைப் பொறுத்தவரை, காபி உட்கொள்ளலில் ஒரு உகந்த அளவு இருக்கக்கூடும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
ஆரம்பத்தில் நல்ல மனநலத்துடன் இருந்த 4,61,586 நபர்களின் தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். சராசரியாக 13.4 ஆண்டுகள் பின்தொடர்ந்த காலத்தில், பங்கேற்பாளர்கள் தாங்களாகவே தெரிவித்த காபி அருந்துதல் என்பது, அவர்களின் பிற்கால மனநல விளைவுகளுடன் ஒப்பிடப்பட்டது. இந்த விரிவான தரவுத்தொகுப்பு, ஒரு பன்முக மக்கள் தொகையில் நீண்டகாலப் போக்குகளைக் கவனிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியது.
காபியை அதிக அளவில் உட்கொண்டதால் கூடுதல் நன்மைகள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் காஃபின் நீக்கப்பட்ட காபியும் அதே பாதுகாப்பு விளைவுகளைக் காட்டவில்லை. மனநிலை மாற்றத்தில், காஃபின் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை உணர்த்துகிறது. காஃபினின் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றத் தடுப்பு, குடல் ஆரோக்கியம் மற்றும் நரம்பியக்கடத்தி விளைவுகள் மனநிலையைச் சீராக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், இந்த ஆய்வு காரணத்தையும் விளைவையும் நிரூபிக்கவில்லை, மேலும் மூளைச் செயல்பாட்டையும் நேரடியாக அளவிடவில்லை. "கடந்த பத்தாண்டுகளில், உலகளாவிய பொது சுகாதாரத்திற்கு மிக முக்கியமான நோய் சுமைகளில் ஒன்றாக மனநலம் சார்ந்த விஷயங்கள் அதிகளவில் அங்கீகாரம் பெற்று வருகின்றன," என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தற்போது இதற்கு காபி ஒரு மாற்றாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.