கடைகளில் பிரெட் வாங்கும்போது, அதன் பாக்கெட்டில் “100% முழு கோதுமை” என்று எழுதப்பட்டிருந்தால், அது முழுக்க முழுக்க கோதுமை மாவால் தயாரிக்கப்பட்டது என்றுதான் பலரும் நினைப்பார்கள். உடல்நலத்தில் அக்கறை கொண்டவர்கள், மைதா கலந்த உணவுகளைத் தவிர்க்க விரும்புபவர்கள் இதுபோன்ற விளம்பரங்களை நம்பி பொருட்களை வாங்குவதும் உண்டு. ஆனால், பாக்கெட்டில் கூறப்பட்ட தகவலுக்கும் உண்மையான மூலப்பொருட்களுக்கும் இடையே வேறுபாடு இருந்தால் என்ன செய்வது? இத்தகைய தவறான விளம்பரத்துக்காக பிரபல பிரெட் தயாரிப்பு நிறுவனமான மிஸஸ் பெக்டர்ஸ் ஃபுட் ஸ்பெஷாலிட்டீஸ் நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
‘இங்கிலீஷ் ஓவன்’ (English Oven) என்ற பிராண்ட் பெயரில் பிரெட் தயாரித்து விற்பனை செய்யும் இந்த நிறுவனம், தனது தயாரிப்புகளை “100% அட்டா பிரெட்”, “100% முழு கோதுமை பிரெட்” என்று விளம்பரப்படுத்தியது. செய்தித்தாள்கள், நிறுவனத்தின் இணையதளம், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. பாக்கெட்டிலும் இதே போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால், அந்தப் பிரெட் முழுமையாக கோதுமை மாவால் தயாரிக்கப்பட்டது என்ற எண்ணம் நுகர்வோருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆணையம் கருதியது.
விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட பிரெட்டில் கோதுமை மாவின் அளவு 87 சதவீதம் மட்டுமே இருப்பதாக நிறுவனமே ஒப்புக்கொண்டது. மீதமுள்ள 13 சதவீதத்தில் தண்ணீர், ஈஸ்ட், சர்க்கரை, உப்பு மற்றும் பிற தயாரிப்புப் பொருட்கள் இடம்பெறுகின்றன. இதற்கு விளக்கம் அளித்த நிறுவனம், “100% அட்டா” என்ற வாசகம் பிரெட்டில் கோதுமை மாவை மட்டுமே தானிய மூலப்பொருளாகப் பயன்படுத்தியிருப்பதைக் குறிக்கிறது என்றும், மைதா சேர்க்கப்படவில்லை என்பதையே விளம்பரம் உணர்த்துகிறது என்றும் வாதிட்டது.
ஆனால், இந்த விளக்கத்தை நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஏற்கவில்லை. ஒரு பொருளில் கோதுமை மாவு மட்டுமே தானிய வகையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்; அதற்காக அந்தப் பொருளை முழுமையாகக் கோதுமை மாவால் தயாரிக்கப்பட்டது என்று கூற முடியாது என்று ஆணையம் தெரிவித்தது. “100%” என்ற சொல் பயன்படுத்தப்படும்போது, தயாரிப்பின் முழு உள்ளடக்கமும் அதுவே என்ற புரிதல் பொதுவாக ஏற்படும். எனவே, அந்தச் சொல்லைப் பயன்படுத்தும்போது நிறுவனம் மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதே ஆணையத்தின் நிலைப்பாடாக இருந்தது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிகளின்படி, ஒரு பிரெட் “முழு கோதுமை பிரெட்” என வகைப்படுத்தப்படுவதற்கு குறைந்தபட்சம் 75 சதவீதம் முழு கோதுமை மாவு இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தயாரிப்பில் 87 சதவீதம் கோதுமை மாவு இருந்ததால், அது அந்த வகைக்கான குறைந்தபட்ச அளவைப் பூர்த்தி செய்திருக்கலாம். ஆனால், அந்த விதி இருப்பதால் தயாரிப்பை “100% முழு கோதுமை பிரெட்” என்று விளம்பரப்படுத்த அனுமதி கிடைத்துவிடாது என்று ஆணையம் தெளிவுபடுத்தியது. ஒரு வகைக்கான குறைந்தபட்சத் தரத்தைப் பூர்த்தி செய்வதும், ஒரு பொருள் முழுமையாக அதே மூலப்பொருளால் தயாரிக்கப்பட்டது என்று கூறுவதும் வெவ்வேறு விஷயங்கள்.
இந்த விளம்பரங்கள் நுகர்வோரைத் தவறாக வழிநடத்துவதாகவும், பொருளின் உண்மையான கலவை குறித்த தவறான புரிதலை உருவாக்குவதாகவும் ஆணையம் முடிவு செய்தது. இதன் அடிப்படையில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-இன் கீழ் தவறான விளம்பரம் மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறைக்காக நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சர்ச்சைக்குரிய விளம்பரங்களை உடனடியாக நிறுத்தவும், உத்தரவைப் பின்பற்றி 15 நாட்களுக்குள் இணக்க அறிக்கையைச் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த நடவடிக்கை உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளில் இடம்பெறும் விளம்பர வாசகங்கள் குறித்து முக்கியமான எச்சரிக்கையாக அமைந்துள்ளது. “100% இயற்கையானது”, “முழுமையான ஊட்டச்சத்து”, “சர்க்கரை இல்லை”, “மைதா இல்லை” போன்ற வாசகங்களைப் பார்க்கும்போது, அவை எதைக் குறிக்கின்றன என்பதை நுகர்வோர் புரிந்துகொள்வது அவசியம். முன்பக்கத்தில் பெரிய எழுத்துகளில் இடம்பெறும் விளம்பர வாசகங்களை மட்டும் நம்பாமல், பாக்கெட்டின் பின்புறத்தில் உள்ள மூலப்பொருள் பட்டியலையும் கவனமாகப் படிக்க வேண்டும்.
உணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இதன் மூலம் தெளிவான செய்தி வழங்கப்பட்டுள்ளது. விற்பனையை அதிகரிப்பதற்காகக் கவர்ச்சியான வாசகங்களைப் பயன்படுத்தலாம்; ஆனால், அவை உண்மையான தயாரிப்பின் தன்மையுடன் பொருந்த வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தைச் செலவிட்டு வாங்கும் பொருளைப் பற்றி சரியான தகவலை அறிந்துகொள்ளும் உரிமை கொண்டவர்கள். அந்த உரிமையைப் பாதிக்கும் வகையில் விளம்பரங்கள் அமைந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.