AI Image
லைஃப்ஸ்டைல்

புளிச்சைக் கீரையில் இத்தனை நன்மைகளா? இதய ஆரோக்கியம் முதல் உடல் எடை குறைப்பு வரை!

புளிச்சைக் கீரை அதன் புளிப்பு சுவையால் பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை.

மாலை முரசு செய்தி குழு

இது தெரிந்தால் புளிச்சைக் கீரையை விடமாட்டீர்கள்

கீரை வகைகள் உடலுக்கு நன்மை தரும் உணவு. இதனை பலரும் அறிந்திருந்தாலும், பொரும்பானவர்களுக்கு கீரை பிடிக்காது. இதனால் கீரை சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர்.

கீரை சாப்பிடும் சிலரும்கூட புளிச்சைக் கீரையை பெரும்பாலும் தவிர்த்து விடுகின்றனர். கீரை என்றால் அரைக்கீரை, சிறுக்கீரை, முருங்கைக் கீரை தான் பெரும்பாலும் சாப்பிடுகின்றனர்.

புளிச்சைக் கீரை அதன் புளிப்பு சுவையால் பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. ஆனால் உண்மையில், புளிச்சைக் கீரையில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணங்களும் உள்ளன.

புளிச்சைக் கீரையில் உள்ள சத்துக்கள்:

புளிச்சக்கீரையில் கால்சியும், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் என ஏராளமான சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன.

மேலும் இதில் வைட்டமின் பி, இ, சி, பொட்டாசியம் போன்றவையும் உள்ளன.

புளிச்சைக் கீரையின் மருத்துவப் பயன்கள்:

புளிச்சைக்கீரை ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதை நன்றாக அரைத்து, பூசுவதால் கட்டிகள் விரைவில் கரையும்.

இதயத்தை பாதுகாக்கும் புளிச்சைக் கீரை:

நீர் கோர்த்தல் பிரச்சனை உள்ளவர்கள், இதய நோயாளிகள் மற்றும் ரத்தநாளங்களில் பிரச்சனை இருப்பவர்களுக்கு, புளிச்சைக்கீரையை மசியல் செய்து சாப்பிட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.

புளிச்சைக் கீரையில் கொழுப்புச் சத்தை குறைக்கும் பண்புகள் இருப்பதால், இது இருதய வாஸ்குலர் நோய்களை தடுக்கிறது. அதாவது, இதயம், ரத்த நாளங்கள், தமனிகள், நரம்புகளில் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.

சளித் தொல்லையை தீர்க்கும்:

புளிச்சைக் கீரையின் பூக்களை நசுக்கி சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறில், 2 சிட்டிகை மிளகுப் பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து சாப்பிட இருமல் சரியாகும். சளியை கரைத்து வெளியேற்றும் திறன் கொண்டது புளிச்சைக் கீரை. மேலும் சுவாச கோளாறுகளும் நீங்கும்.

சரும பிரச்சனைகள் நீங்கும்:

சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.

புற்று நோய் செல்களை எதிர்த்து போராடும்:

புளிச்சைக் கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை சாதாரண செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றுவதற்கு முக்கிய காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட பெரிதும் உதவுகிறது.

புளிச்சைக் கீரையில் கலோரிகள் குறைந்த அளவில் உள்ளன. 100 கிராம் புளிச்சைக் கீரையில் 24 கலோரிகள் மட்டுமே உள்ளன.

உடல் எடையை குறைக்க உதவும்:

மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது பசி உணர்வை குறைத்து நீண்ட நேரத்திற்கு வயிறை நிறைவாக வைத்திருக்கும்.

இதனால் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் இந்த கீரையை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் புளிச்சைக் கீரையில் இருந்து தயாரிக்கப்படும் கோங்குரா தேநீர், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காக பயன்படுத்தப் படுகிறது.

புளிச்சைக்கீரை பொடி, புளிச்சைக்கீரை துவையல், புளிச்சைக்கீரை மசியல் என ஏதாவது ஒரு வகையில் வாரம் இரண்டு முறை சேர்த்து வந்தால் வாதம் குறைந்து சமமாகும் என்பது சித்த வைத்தியர்கள் கூறும் பயன்.

புளிச்சைக் கீரை பூ ஜாம்:

புளிச்சைக் கீரை பூவில் (இது செம்புளிச்சை அல்லது கோங்குரா மலர்கள் அல்லது ரோசெல்லா மலர்கள் என்று அழைக்கப்படுகிறது) இருந்து ருசியான மற்றும் ஆரோக்கியமான ஜாம் தயாரிக்கலாம்

புளிச்சைக் கீரை செடியில் சிவப்பு நிறத்தில் பூக்கள் பூக்கும். இந்த பூக்களைக் கொண்டு ஜாம் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் ஜாம் தயாரிக்கும் முறை உங்களுக்காக.

தேவையான பொருட்கள்:

  • புளிச்சைக் கீரை பூக்கள் (இதழ்கள் மட்டும்) - 2 கப்

  • சர்க்கரை அல்லது நாட்டுச்சர்க்கரை - 1 கப் (பூக்களின் புளிப்புக்கு ஏற்ப கூட்டிக் குறைக்கலாம்)

  • தண்ணீர் - பாதி கப்

  • ஏலக்காய் தூள் - சிறிது (தேவைப்பட்டால்)

செய்யும் முறை:

புளிச்சைக் கீரை பூக்களின் இதழ்களை மட்டும் தனியாகப் பிரித்து நன்றாகக் கழுவிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கழுவிய பூக்களைப் போட்டு, அரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வேக வைக்கவும். பூக்கள் நன்றாக வெந்து மசியும் வரை கொதிக்க விடவும்.

பூக்கள் மசிந்த பிறகு, எடுத்து வைத்துள்ள சர்க்கரை அல்லது நாட்டுச்சர்க்கரையைச் சேர்க்கவும்.

சர்க்கரை கரைந்து பாகுபதம் போல கெட்டியாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கைவிடாமல் கிளறவும். இறக்கும் முன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாகக் கலந்து ஆறவைக்கவும். மிக

சுவையான புளிச்சைக் கீரை பூ ஜாம் தயார்!

ஜாம் கெட்டுப் போகாமல் இருக்க அதனை கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்க வேண்டும். அதற்கு முன் ஜாம் வைக்கும் கண்ணாடி பாட்டிலை சுடுதண்ணீரில் நன்றாகக் கழுவி, ஈரம் சிறிதும் இல்லாதவாறு முழுமையாகக் காயவைக்க வேண்டும்.

பாட்டிலில் ஈரம் இருந்தால் ஜாம் பூஞ்சை பிடித்து விரைவில் கெட்டுவிடும். இப்படி சுத்தம் செய்த கண்ணாடி பாட்டிலில் ஜாமை போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

இதனை சப்பாத்தி, பிரெட் மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால், 3 முதல் 6 மாதங்கள் வரை கெடாமல் நன்றாக இருக்கும். வெளியில் வைத்தாலும் 2 வாரங்கள் வரை கெடாது. ஆனால், நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்த ஃப்ரிட்ஜில் வைப்பதே நல்லது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.