migraine migraine
லைஃப்ஸ்டைல்

தலைவலியின் பின்னால் ஒளிந்திருக்கும் பெரிய ஆபத்து! "10 ஆண்டு வேதனையை முடிவுக்குக் கொண்டு வந்த திருப்பம்!"

சாதாரணத் தலைவலி, ஒருவரது அன்றாட வாழ்க்கையையே முடக்கிப்போடும் ஒரு நரம்பியல் பாதிப்பாகும்.

மாலை முரசு செய்தி குழு

இந்தியாவில் நான்கு பேரில் ஒருவருக்கு ஒற்றைத் தலைவலி (Migraine) பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது சாதாரணத் தலைவலி மட்டுமல்ல, ஒருவரது அன்றாட வாழ்க்கையையே முடக்கிப்போடும் ஒரு நரம்பியல் பாதிப்பாகும். முப்பது வயதுகளின் மத்தியில் இருக்கும் சாரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற கிராபிக் டிசைனர், கடந்த 10 ஆண்டுகளாக இத்தகைய தீவிர தலைவலியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். பல வருடங்களாக இது வெறும் மன அழுத்தம் அல்லது சைனஸ் பிரச்சனை என்று அவர் நினைத்து வந்திருக்கிறார். வலி வரும்போது ஐப்யூபுரூஃபன் (Ibuprofen) போன்ற மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டதால், அந்த மாத்திரைகளே அவருக்குப் பக்கவிளைவாக மீண்டும் தலைவலியை உண்டாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

சாராவுக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கு முன்பே ஒரு அறிகுறி தென்படும். வேலை செய்யும் போது திடீரெனக் பார்வையில் ஒரு மங்கலான சூழல் அல்லது மின்னும் புள்ளிகள் தோன்றும். இதுவே அவருக்கு வரப்போகும் வலியின் அறிகுறியாகும். இதன்பின் தொடங்கும் ஒரு பக்கத் தலைவலி, காபியின் வாசனையைக் கூடச் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்குத் தீவிரமடையும். இருட்டான அறையில் பல மணிநேரம் அல்லது நாட்கள் முடங்கிக் கிடப்பது மட்டுமே அவருக்குத் தெரிந்த ஒரே மருந்தாக இருந்தது. குடும்பத்தையும் வேலையையும் கவனிக்க வேண்டிய வயதில், இத்தகைய வேதனையை அனுபவித்த சாரா, பலமுறை தவறான சிகிச்சைகளையே மேற்கொண்டிருக்கிறார்.

தற்போது ஒற்றைத் தலைவலி சிகிச்சையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர். வெறும் வலியைத் தடுப்பது மட்டும் சிகிச்சையல்ல, நோயாளியின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதே இன்றைய மருத்துவத்தின் நோக்கம். சி.ஜி.ஆர்.பி (CGRP) எனப்படும் புரதங்கள் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்கும் புதிய மருந்து சிகிச்சை முறைகள் மூலம், நோயாளிகள் குறைவான பக்கவிளைவுகளுடன் சிறந்த பலனைப் பெற முடிகிறது. இத்தகைய நவீன மருத்துவத் தீர்வுகள், நோயாளிகள் அனுபவிக்கும் பயத்திலிருந்து அவர்களை மீட்டெடுத்துச் சாதாரண வாழ்க்கையை வாழ வழிவகுக்கின்றன.

சிகிச்சையில் மிக முக்கியமானது தடுப்பு முறை (Preventive therapy). ஒரு நோயாளிக்கு மாதத்திற்கு எட்டு முதல் பத்து நாட்கள் தலைவலி இருந்தால், அதை இரண்டாகக் குறைப்பதுதான் மருத்துவத்தின் வெற்றி. மருந்து சிகிச்சையோடு சேர்த்துச் சீரான தூக்கம், நேரத்திற்கு உணவு உட்கொள்ளுதல் மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகள் போன்றவை மிக அவசியம். இந்த நவீன சிகிச்சைகள், ஒரு நாள்பட்ட நோயாளியை மாற்றி, அவர்களைக் கட்டுக்கோப்பான வாழ்க்கை வாழ வைக்கின்றன. 10 வருடங்கள் வலியில் வாழ்ந்த சாரா போன்ற பலருக்கு, இந்த நவீன மருத்துவம் ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. தலைவலியைப் பெரிதாகக் கருதாமல் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது ஆபத்தானது; எனவே, சரியான நேரத்திற்கு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே நீண்ட கால ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.