இந்தியாவின் விமான நிலையங்களில் முக்கிய பங்கு வகித்து வந்த துருக்கியை தளமாகக் கொண்ட செலபி ஏவியேஷன் (Celebi Aviation) நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை, இந்திய அரசு மே 15, 2025 அன்று திடீரென ரத்து செய்திருக்கு. இந்த முடிவு, “தேசிய பாதுகாப்பு” காரணங்களைக் கூறி, உடனடியாக அமலுக்கு வந்திருக்கு.
செலபி ஏவியேஷன், 1958-ல் துருக்கியில் தொடங்கப்பட்ட முதல் தனியார் தரைவழி சேவை நிறுவனம். இப்போது, மூன்று கண்டங்களில், ஆறு நாடுகளில், 70 விமான நிலையங்களில் இயங்கி, 15,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட உலகளாவிய நிறுவனமாக வளர்ந்திருக்கு.
இந்தியாவில், 2008-ல் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் (Chhatrapati Shivaji Maharaj International Airport) தனது பயணத்தைத் தொடங்கியது. பின்னர், செலபி ஏர்போர்ட் சர்வீசஸ் இந்தியா (Celebi Airport Services India Pvt. Ltd.) மற்றும் செலபி டெல்லி கார்கோ டெர்மினல் மேனேஜ்மென்ட் இந்தியா (Celebi Delhi Cargo Terminal Management India) என்ற இரண்டு தனி நிறுவனங்களை நிறுவியது.
இந்தியாவில் செலபி ஒன்பது முக்கிய விமான நிலையங்களில் - டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, அகமதாபாத், கோவா (MOPA), கொச்சி, மற்றும் கண்ணூர் - என்று இயங்கி வந்தது. ஆண்டுக்கு 58,000 விமானங்களையும், 5,40,000 டன் சரக்குகளையும் கையாண்டு, சுமார் 7,800 ஊழியர்களுடன் இயங்கியது.
இந்நிறுவனம், பயணிகள் சேவைகள், சரக்கு கையாளுதல், விமானங்களின் எடை சமநிலை (Load Control), ராம்ப் சேவைகள், பயணிகள் பாலங்கள் (Bridge Operations), மற்றும் VIP விமானங்களுக்கான சேவைகள் ஆகியவற்றை வழங்கியது. மும்பையில் மட்டும், இந்நிறுவனம் 70% தரைவழி சேவைகளைக் கவனிச்சது
செலபியின் பாதுகாப்பு அனுமதி ரத்து, இந்திய-பாகிஸ்தான் மோதலின் பின்னணியில், துருக்கியின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டால் ஏற்பட்ட நிகழ்வு. ஏப்ரல் 22, 2025 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, மே 7-ல் இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” (Operation Sindoor) என்ற துல்லிய தாக்குதல்களை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக நடத்தியது.
இந்த மோதலில், துருக்கி பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தது. மே 8-9 தேதிகளில், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்திய ஆளில்லா விமானங்கள் (Drones), துருக்கியில் தயாரிக்கப்பட்ட Asisguard SONGAR மற்றும் Bayraktar TB2 மாடல்கள் எனக் கூறப்படுது. மேலும், ஆபரேஷன் சிந்தூர் தொடங்குவதற்கு முன், ஒரு துருக்கி போர்க்கப்பல் கராச்சியை வந்தடைந்ததாகவும், துருக்கி விமானப்படையின் C-130 விமானம் கராச்சியில் தரையிறங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தச் செயல்கள், இந்தியாவில் துருக்கிக்கு எதிரான கடுமையான எதிர்ப்பைத் தூண்டின.
துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனின் மகள் சுமேய்யே எர்டோகன், செலபி நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பதாகவும், அவர் Bayraktar ஆயுதங்களை உற்பத்தி செய்யும் Selcuk Bayraktar-ஐ மணந்தவர் என்றும் சில அறிக்கைகள் கூறின. ஆனால், செலபி இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, “எங்களுக்கு எந்த அரசியல் தொடர்பும் இல்லை, 65% பங்குகள் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மற்றும் மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த பன்னாட்டு முதலீட்டாளர்களிடம் இருக்கு”னு விளக்கமளித்திருக்கு.
விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் (Bureau of Civil Aviation Security - BCAS) மே 15, 2025 அன்று வெளியிட்ட உத்தரவு, “தேசிய பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டு, செலபி ஏர்போர்ட் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களின் பாதுகாப்பு அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படுகிறது”னு தெளிவாகக் கூறியது. இந்த உத்தரவு, செலபியின் இந்திய செயல்பாடுகளை முற்றிலும் நிறுத்தியிருக்கு.
டெல்லி விமான நிலையம்: டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL), செலபியுடனான தரைவழி மற்றும் சரக்கு சேவை ஒப்பந்தங்களை முடித்துவிட்டது. மற்ற தரைவழி சேவை வழங்குநர்களான AISATS மற்றும் Bird Group உடன் இணைந்து, செயல்பாடுகளை தொடர உறுதியளித்திருக்கு. மேலும், செலபியில் பணியாற்றிய ஊழியர்கள் புதிய முதலாளிகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று DIAL உறுதி அளிச்சிருக்கு.
மும்பை மற்றும் பிற விமான நிலையங்கள்: மும்பை விமான நிலையத்தில் 70% தரைவழி சேவைகளை செலபி கவனிச்சது. இப்போ, AI Airport Services, Air India SATS, மற்றும் Bird Group போன்ற மற்ற நிறுவனங்கள் இந்த இடைவெளியை நிரப்ப வேண்டியிருக்கு. பெங்களூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களும் மாற்று ஏற்பாடுகளை செய்யுறாங்க.
பயணிகள் மற்றும் விமான நிறுவனங்கள்: செலபி, British Airways, Cathay Pacific, Singapore Airlines, Etihad, Qatar Airways போன்ற முக்கிய விமான நிறுவனங்களுக்கு சேவை வழங்கியது. இந்த மாற்றம், தற்காலிகமாக பயணிகள் சேவைகள் மற்றும் சரக்கு கையாளுதலில் தாமதங்களை ஏற்படுத்தலாம். ஆனா, விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA), “பயணிகள் வசதி மற்றும் சரக்கு செயல்பாடுகள் பாதிக்கப்படாது”னு உறுதி அளிச்சிருக்கு.
செலபி, இந்த முடிவுக்கு எதிராக, “நாங்க உலகளாவிய நிறுவனம், இந்தியாவில் இயங்குறது முற்றிலும் இந்திய நிறுவனமா, இந்திய தொழில்முறை வல்லுநர்களால் நிர்வகிக்கப்படுது. எங்களுக்கு எந்த அரசியல் தொடர்பும் இல்லை, 65% பங்குகள் பன்னாட்டு முதலீட்டாளர்களிடம் இருக்கு”னு ஒரு அறிக்கையில் கூறியிருக்கு. மேலும், “சுமேய்யே எர்டோகன் பங்குதாரர்னு வரும் குற்றச்சாட்டு தவறு. எங்கள் துருக்கி பங்குதாரர்கள், Çelebioğlu குடும்பத்தைச் சேர்ந்த Can Çelebioğlu மற்றும் Canan Çelebioğlu (ஒவ்வொருவருக்கும் 17.5%) மட்டுமே”னு தெளிவுபடுத்தியிருக்கு.
மேலும், இந்திய வர்த்தக சங்கங்களும் துருக்கியுடனான வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்திருக்கு. Confederation of All India Traders (CAIT), துருக்கி மற்றும் அஜர்பைஜானுடனான வர்த்தகத்தை முற்றிலும் புறக்கணிப்பது குறித்து கூட்டம் நடத்த திட்டமிட்டிருக்கு.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்