
கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் (Anita Anand) நியமிக்கப்பட்டிருக்கிறார். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்! மே 14, 2025 அன்று, புதிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான அரசில், முதல் இந்து பெண்ணாகவும், முதல் தெற்காசிய வம்சாவளி பெண்ணாகவும் வெளியுறவு அமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.
அனிதா இந்திரா ஆனந்த், 1967-ம் ஆண்டு மே 20-ம் தேதி, கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் உள்ள கென்ட்வில் (Kentville) என்ற சிறிய ஊரில் பிறந்தவர். இவருடைய பெற்றோர், இந்தியாவில் இருந்து 1960-களில் கனடாவுக்கு குடிபெயர்ந்த மருத்துவர்கள். அம்மா சரோஜ் ராம் (Saroj D. Ram), பஞ்சாபின் ஜண்டியாலா குரு என்ற ஊரைச் சேர்ந்தவர்; அப்பா எஸ்.வி. ஆனந்த் (S.V. Anand), தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்.
இந்த இரு வேறு கலாச்சாரங்களின் கலவையில் வளர்ந்த அனிதா, தன்னுடைய இந்திய பாரம்பரியத்தை பெருமையோடு தாங்கி, இந்து மற்றும் சீக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தீபாவளி கொண்டாட்டங்கள், இந்திய சுதந்திர தின விழாக்கள் ஆகியவற்றில் தவறாமல் கலந்துக்கிறார்.
அனிதாவுக்கு இரண்டு சகோதரிகள் - கீதா ஆனந்த், டொராண்டோவில் தொழிலாளர் வழக்கறிஞராகவும், சோனியா ஆனந்த், மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் மருத்துவராகவும் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றுறாங்க. இவருடைய தாத்தா வி.ஏ. சுந்தரம், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய ஐயர் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்.
அனிதாவோட கல்வி பயணம் நம்மை ஆச்சரியப்படுத்தும்! இவர் குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் ஆய்வுகளில் முதல் பட்டம் (1989-ல் தங்கப் பதக்கம் பெற்றவர்!), ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சட்டவியலில் (Jurisprudence) இரண்டாவது பட்டம், டால்ஹவுஸி பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் (LLB), மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டம் (LLM) பெற்றவர்.
கல்வியில் இவர் ஒரு கில்லாடி! 2019 வரை, டொராண்டோ பல்கலைக்கழகத்தில் முதலீட்டாளர் பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட் ஆளுகை (Corporate Governance) துறையில் பேராசிரியராக பணியாற்றினார். இவர் யேல் பல்கலைக்கழகத்திலும் கற்பித்திருக்கிறார்.
தனிப்பட்ட வாழ்க்கையில், அனிதா 1995-ல் ஜான் நோல்டன் (John Knowlton) என்ற கனடிய வழக்கறிஞரையும் தொழிலதிபரையும் மணந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள், ஓக்வில் (Oakville) நகரில் ஒரு மகிழ்ச்சியான குடும்பமாக வாழ்கிறார்கள். இவர்களோட காதல் கதை, ஒரு சினிமா கதை மாதிரி! டொராண்டோவில் ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் பயிற்சியின் போது, அனிதாவோட கார் பழுதடைந்தபோது, ஜான் உதவிக்கு வந்தார். அங்கிருந்து தொடங்கிய நட்பு, காதலாகி, 1995-ல் திருமணத்தில் முடிந்தது.
அனிதாவின் அரசியல் பயணம் 2019-ல் தொடங்கியது. ஓக்வில் தொகுதியில் லிபரல் கட்சி சார்பாக முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினராக (MP) தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஒரு வரலாற்று தருணம், ஏன்னா இவர் கனடாவின் முதல் இந்து பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்! அதே ஆண்டு, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில், பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக (Minister of Public Services and Procurement) நியமிக்கப்பட்டார். இந்த பதவியில், கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், கனடாவுக்கு தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதில் முக்கிய பங்கு வகித்தார். இவருடைய திறமையான பணி, உலக அளவில் பாராட்டப்பட்டது.
2021-ல், அனிதா கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக (Minister of National Defence) நியமிக்கப்பட்டார். இது மற்றொரு மைல்கல், ஏன்னா இவர் இந்த பதவியை ஏற்ற இரண்டாவது பெண்மணி (முதல் பெண், முன்னாள் பிரதமர் கிம் காம்ப்பெல்). இந்த பதவியில், கனடிய படைகளில் பாலியல் தவறு நடவடிக்கைகளை எதிர்க்கவும், படைகளில் கலாச்சார மாற்றத்தை கொண்டுவரவும் முக்கிய முடிவுகளை எடுத்தார். 2022 ரஷ்ய-உக்ரைன் போரின்போது, உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை ஒருங்கிணைத்தார். இவருடைய தலைமையில், கனடா உக்ரைனுக்கு 30,000-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி அளித்தது.
2023-ல், அனிதா கருவூல வாரியத் தலைவராகவும் (President of the Treasury Board), 2024-ல் போக்குவரத்து அமைச்சராகவும் (Minister of Transport) பணியாற்றினார். இந்த பதவிகளில், கனடாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பை நவீனப்படுத்தவும், நகர்ப்புற நெரிசலைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்தவும் பணியாற்றினார்.
2025-ல், மார்க் கார்னி பிரதமராக பதவியேற்றபோது, அனிதாவை வெளியுறவு அமைச்சராக நியமித்தார். இந்த பதவியில், இவர் பகவத் கீதையை கையில் வைத்து பதவி பிரமாணம் செய்தார், இது இவருடைய இந்து பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. “நான் கனடாவின் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு பெருமையடைகிறேன். பிரதமர் மார்க் கார்னியுடன் இணைந்து, பாதுகாப்பான, நியாயமான உலகத்தை உருவாக்குவதற்கு உழைப்பேன்,”னு X தளத்தில் பதிவு செய்திருக்கார்.
அனிதாவின் இந்த நியமனம், கனடா-இந்திய உறவுகள் பதற்றமாக இருக்கும் ஒரு காலகட்டத்தில் வந்திருக்கு. 2023-ல், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கு இந்திய முகவர்கள் தொடர்பு இருக்கலாம்னு குற்றம்சாட்டினார். இந்தியா இந்த குற்றச்சாட்டை “அபத்தமானது”னு நிராகரிச்சது, இதனால் இரு நாடுகளும் மூத்த தூதர்களை வெளியேற்றினாங்க.
கனடாவில் உள்ள சீக்கிய சமூகம், 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 771,790 பேர், அரசியல் மற்றும் சமூகத்தில் பெரிய செல்வாக்கு செலுத்துது. இந்த சூழலில், காலிஸ்தான் இயக்கம் தொடர்பான பிரச்சினைகள், இந்திய-கனடா உறவுகளில் முக்கிய தடையாக இருக்கு.
2022-ல், கனடா தனது இந்தோ-பசிபிக் உத்தியை (Indo-Pacific Strategy) அறிமுகப்படுத்தியபோது, இந்தியாவுடன் உறவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது, ஆனால் இந்தியா “காலிஸ்தான் பயங்கரவாதத்துக்கு” கனடா மென்மையான அணுகுமுறையை கையாளுதுன்னு குற்றம்சாட்டியது. அனிதா, இந்த பதற்றமான சூழலை சமாளிக்க வேண்டிய பொறுப்பு இருக்கு.
அனிதாவின் இந்த நியமனம், பல காரணங்களுக்காக முக்கியமானது:
வரலாற்று முக்கியத்துவம்: முதல் இந்து பெண்ணாகவும், முதல் தெற்காசிய வம்சாவளி பெண்ணாகவும் கனடாவின் வெளியுறவு அமைச்சராக பதவியேற்பது, கனடாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், 2025 தேர்தலில் 22 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 65 பேர் போட்டியிட்டிருக்காங்க. இது இந்திய சமூகத்தின் வளர்ந்து வரும் செல்வாக்கை காட்டுது.
இந்திய-கனடா உறவுகள்: அனிதாவின் இந்திய வேர்கள், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்த உதவலாம்னு பலர் நம்புறாங்க. இவர் முன்பு இந்தோ-பசிபிக் உத்தியில் பங்கு வகித்தவர், இது இந்தியாவுடன் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
பன்முகத்தன்மை மற்றும் பெண்கள் பங்களிப்பு: மார்க் கார்னியின் அமைச்சரவையில், 50% பெண்கள் இருக்காங்க, இது கனடாவின் பாலின சமநிலையை பிரதிபலிக்கிறது. அனிதாவின் நியமனம், புலம்பெயர் சமூகங்களில் இருந்து வந்தவர்களுக்கும், பெண்களுக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்