மும்பை நகரில் சனிக்கிழமை இரவு நடந்த ஒரு குடும்ப விருந்து, அடுத்த 12 மணிநேரத்தில் ஒரு மாபெரும் சோகமாக மாறும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 13 வயது சிறுமி ஜைனப், தனது பெற்றோர், அக்கா மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக பிரியாணி விருந்து சாப்பிட்டுள்ளார். நள்ளிரவுக்குப் பிறகு இனிப்புக்குத் தர்பூசணி பரிமாறப்பட்டுள்ளது. ஆனால் மறுநாள் காலை முதல் அந்த குடும்பமே மரணத்தின் பிடியில் சிக்கியுள்ளது. அடுத்தடுத்து நான்கு பேர் உயிரிழந்த இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த மும்பையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நான்கு மரணங்களும் 'ஃபுட் பாய்சனிங்' எனப்படும் உணவு நஞ்சானதால் ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மொபைல் உதிரிபாகங்கள் கடை நடத்தி வந்த 40 வயது அப்துல்லா அப்துல் காதர், அவரது மனைவி நஸ்ரீன் (35), மகள்கள் ஜைனப் (13) மற்றும் ஆயிஷா (16) ஆகியோர் சனிக்கிழமை இரவு 10:30 மணியளவில் உறவினர்களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டு முடித்த பிறகு அவர்கள் பைதோனியில் உள்ள தங்களது வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.
வீட்டிற்கு வரும் வரை அவர்களுக்கு உடல்நலத்தில் எந்தப் பிரச்சனையும் தெரியவில்லை. நள்ளிரவு ஒரு மணியளவில் அனைவரும் சேர்ந்து தர்பூசணி சாப்பிட்டுள்ளனர். அதிகாலை 5 மணியளவில் தான் விபரீதம் தொடங்கியுள்ளது. குடும்பத்தில் இருந்தவர்களுக்குத் தொடர் வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டுள்ளது. முதலில் உள்ளூர் டாக்டர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆனால் நிலைமை மோசமடையவே, அனைவரும் உடனடியாக ஜே.ஜே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்குச் சிகிச்சை பலனின்றி காலை 10:15 மணியளவில் சிறுமி ஜைனப் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து தாய் நஸ்ரீன் மற்றும் மூத்த மகள் ஆயிஷாவும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். குடும்பத் தலைவர் அப்துல்லா இரவு 10:30 மணியளவில் மரணமடைந்தார். குடும்பமே கண் இமைக்கும் நேரத்தில் அழிந்ததைக் கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். அவர்களை முதலில் பரிசோதித்த டாக்டர் ஜியாத் குரேஷி கூறுகையில், அவர்கள் மருத்துவமனைக்கு வந்தபோதே மிகவும் சோர்ந்து போயிருந்ததாகவும், தர்பூசணி சாப்பிட்ட பிறகுதான் இந்த உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்ததாகவும் கூறினார்.
இந்தச் சந்தேக மரணங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உடற்கூறு ஆய்வு நடத்தியுள்ளனர். 12 மணிநேர இடைவெளியில் நான்கு பேர் உயிரிழந்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. போலீசார் அந்த வீட்டில் இருந்த தர்பூசணி துண்டுகளைப் பறிமுதல் செய்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், உடற்கூறு ஆய்வின் போது சேகரிக்கப்பட்ட மாதிரிகளும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்று மும்பை போலீஸ் துணை கமிஷனர் பிரவீன் முண்டே தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்புத் துறை மற்றும் தடய அறிவியல் துறையினர் இணைந்து இந்த மரணத்திற்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர். தர்பூசணியில் ஏதேனும் விஷத்தன்மை கொண்ட ரசாயனங்கள் கலந்திருந்ததா அல்லது அது கெட்டுப்போயிருந்ததா என்பது குறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆய்வு செய்கிறது. மேலும், ஜே.ஜே மருத்துவமனையின் நுண்ணுயிரியல் துறை பாக்டீரியா தொற்றுகள் ஏதேனும் உள்ளதா என்று சோதனை செய்து வருகிறது. இறுதி ஆய்வறிக்கை வந்த பிறகுதான் இந்த நான்கு உயிர்களைப் பறித்த உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.