பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பங்கேற்றார். தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், தமிழில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "பீகார் மக்களாகிய உங்களை பார்ப்பதற்காக 2 ஆயிரம் கி.மீ கடந்து வந்துள்ளேன். சமூக நீதி, மதச்சார்பின்மை ஆகியவற்றின் அடையாளம் ராகுல். பிகார் என்றாலே லாலு பிரசாத் தான் நினைவிற்கு வருவார். கலைஞர் கருணாநிதியும், லாலுவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். பல்வேறு மிரட்டலுக்கு மத்தியிலும், பாஜகவுக்கு பயப்படாமல் அரசியல் செய்த காரணத்தால் தான், இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களுள் ஒருவராக லாலு பிரசாத் உயர்ந்து நிற்கிறார். அந்த வகையில், அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளையாக உழைத்து வருகிறார் தேஜஸ்வி" என்று உரையாற்றினார்.
முதல்வர் ஸ்டாலின் தனது உரையைத் தமிழில் பேச, அதனைச் சரியாக உள்வாங்கி, அங்குள்ள மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், ஹிந்தியில் ஒருவர் மொழிபெயர்க்க பலரது கவனமும் அவர் மீது திரும்பியது. முதலில் அந்த மொழிப் பெயர்ப்பாளர் பீகாரைச் சேர்ந்த ஒருவர் என்று அனைவரும் நினைத்த நிலையில், பிறகு தான் தெரிந்தது அவர் முதல்வருடன் தனி விமானத்தில் தமிழகத்தில் இருந்து சென்ற அலிம் அல் புஹாரி என்று. இவர், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராகவும், வழக்கறிஞராகவும் பணிபுரிந்து வருகிறார்.
பொதுவாக, வட மாநிலத் தலைவர்கள் ஹிந்தியில் பேசுகையில் அதனை தமிழில் மொழிப் பெயர்க்கும் போதும், தென் மாநிலத் தலைவர்கள் அவரவர் மொழியில் பேசும்போது, அதனை ஹிந்தியில் மொழிப் பெயர்க்கும் போதும் பல சிக்கல்கள் எழுவதுண்டு. சில சமயங்களில், பேச்சின் வீரியம் மற்றும் உணர்ச்சிகள் சரியாகக் கடத்தப்படாது. ஆனால், அலிம் அல் புஹாரி, முதல்வர் ஸ்டாலின் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும், அதன் அரசியல் பின்னணியையும், தொனியையும் உணர்ந்து, மிகத் துல்லியமாக ஹிந்தியில் மொழிபெயர்த்தது அங்கிருந்த அனைவரையும் வியக்க வைத்தது.
அலிம் அல் புஹாரி ஏற்கெனவே பல தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் சார்பாகப் பேசி அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, முதல்வருடன் தனி விமானத்தில் சென்று வந்த புகைப்படங்களை புஹாரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளது கவனிக்கத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.