
நமது மாலைமுரசு தொலைக்காட்சியில் நடைபெற்ற 'நெற்றிக்கண்' விவாத நிகழ்ச்சியில், 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில், "காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானின் PRO-வாக செயல்படுகிறது என பிரதமர் பேசியுள்ளார்.. இது பற்றி உங்களின் கருது என்ன?” என்று நெறியாளர் தம்பி தமிழரசன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞர் அணி பொதுச் செயலாளர் அலிம் அல் புஹாரி, "பிரதமர் சிந்தூர் தாக்குதல் குறித்து இதுவரை புள்ளி விவரங்களோடு அல்லது உலகளாவிய உதாரணங்களோடு பேசியிருக்கிறாரா? 'வெற்றிகரமான தாக்குதலா'? என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை. அவருடைய பேச்சு மற்றவர்களை தூங்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது. ‘அபி நந்தனை பாகிஸ்தான் தூக்கி சென்ற போது காங்கிரஸ் மகிழ்ச்சியடைந்தது’ என்று சொன்னார்கள், இது எவ்வளவு பெரிய வன்மம் தெரியுமா?
எதிர்க்கட்சியை விமர்சிக்கலாம், அதற்காக இந்தியாவில் நடந்த தாக்குதலுக்கு மகிழ்ச்சியடைகிறார்கள் என விமர்சிக்க கூடாது. உதாரணத்திற்கு நான் கேட்கிறேன், மும்பை தாக்குதல் நடந்த போது பிரதமர் மகிழ்ச்சியடைந்தாரா? ஒரு இந்தியராக இந்த தாக்குதலுக்கு யாராவது மகிழ்ச்சியடைவார்களா? இந்த அடிப்படையே புரியாத ஒருவர் பிரதமராக இருக்கிறார் என்பது இந்தியாவின் சாபக்கேடு. பிரதமர் பாராளுமன்றத்தில் அதிக நேரம் பேசினார் - ஆனால் ராகுல் காந்தி கேட்ட கேள்விக்கோ, மற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள் கேட்ட கேள்விக்கோ ஒரு பதில் கூட அளிக்கவில்லை. 'சிந்தூர் தாக்குதலை வர்த்தக காரணமாக நான்தான் நிறுத்தினேன்' என டிரம்ப் சொல்வது பொய் என நீங்கள் சொல்லுங்களேன்!?.
அஜ்மல் கசாப் என்ற ஒருவரை நம்மால் கைது செய்ய முடிந்தது; பயங்கரவாத ட்ரயலை நம்மால் நடத்த முடிந்தது; பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்பதை நம்மால் உலக அரங்கில் அம்பலப்படுத்த முடிந்தது. இது எல்லாவற்றிலும் தோல்வியுற்ற ஒரு பிரதமர், தன்னுடைய ஆதங்கத்தை இங்கு கொட்டிக் கொள்கிறார் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, புள்ளி விவரங்களோடு எதையும் கூறவில்லை.
நமது நாட்டு வீரர்களை பாகிஸ்தான் தூக்கிச்சென்றால் காங்கிரஸ் மகிழ்ச்சியடைகிறது என்கிறார் பிரதமர். அது எப்படி மகிழ்ச்சியடைவோம்? இவர்களுக்கும் சுதந்திரத்திற்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா? இந்தியாவை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்த ஒரு கட்சியை பார்த்து இவ்வளவு புழுதி வாரி வீசுவதற்கு ஒரு பிரதமர் வெட்கப்பட வேண்டும். சிந்தூர் தாக்குதல் நடந்த போது எங்கள் கட்சி ஒரு அறிக்கை விடுத்தது, ‘ஆபரேஷன் சிந்தூர் குறித்து யாரும் அரசியல் ரீதியிலான விமர்சனம் வைக்கக்கூடாது’ என்று. நாங்கள் அனைவரும் நமது நாட்டின் ராணுவத்தினருக்கு மரியாதை கொடுத்தோம். ஏதாவது ஒரு நாடு பாகிஸ்தான் செய்ததுதான் தீவிரவாதம் என்று சொன்னதா? அப்படி சொல்லியிருந்தால் நான் இப்போதே வெளியேறி விடுகிறேன். மும்பை தாக்குதலுக்கு பிறகு பராக் ஒபாமா, 'இது பாகிஸ்தானின் தீவிரவாதம்.. இது கண்டிக்கப்பட வேண்டியது' என கூறினார், நீங்கள் எடுக்க கூடிய முடிவு இவ்வாறாக இருக்க வேண்டும்.
சிந்தூர் தாக்குதலை பாகிஸ்தானும் ஏற்றுக்கொள்ளவில்லை, மற்ற உலக நாடுகளுக்கும் தெரியவில்லை. தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசிய போது, 'பாகிஸ்தானையும் சீனாவையும் நாம் ஒன்று சேர்த்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்ன போதெல்லாம் சிரித்தீர்கள்’ என குறிப்பிட்டிருந்தார். இன்றும் பிரதமர் அதையே தான் செய்து கொண்டிருக்கிறார், கவலைக்கிடமான ஒரு செய்தியை விவரிப்பதற்கான எந்த ஒரு முக பாவனையும் அவரிடத்தில் இல்லை; மாறாக கேலி செய்து கொண்டிருக்கிறார். பிரதமர் பேசும் போது 'காங்கிரஸை பார்த்து நாங்கள் மட்டும் சிரிக்கவில்லை உலக நாடுகளே சிரிக்கிறது’ என்கிறார்; இது சிரிக்க கூடிய விஷயம் இல்லை.
தாக்குதல் நடத்த இடத்திற்கு செல்லாமல், தாக்குதலுக்கு உட்பட்ட மக்களை பார்க்காமல், பீகார் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற பிரதமருக்கு இப்படித் தானே பேச தெரியும். நாங்கள் மிச்சம் வைத்ததை சரி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், 370 விதியை தகர்த்துவிட்டு, ‘இனி இந்தியாவில் குண்டு சத்தமே கேட்காது’ என்றார்கள், அப்போ பஹல்காம் என்ன வேறு நாட்டில் உள்ளதா? எந்த தீவிரவாத பிரச்சனையும் இருக்காது என்று சொன்ன பிறகு மட்டுமே 59 தீவிரவாத தாக்குதல்கள் நடந்திருக்கிறது. பாராளுமன்றத்தை ஒரு கேலிக்குரிய இடமாக மாற்றி கொண்டிருக்கிறார் நரேந்திர மோடி.
மன்மோகன் சிங்கை பார்த்து “NON RESIDENT PRIME MINISTER” என்ற குற்றச்சாட்டு வைத்தார்கள். நரேந்திர மோடி கடந்த 2014 - 2019, முதல் முறை பிரதமராக இருந்த போது மொத்தம் 49 பயணம் சென்றிருக்கிறார், இப்போது 26 பயணங்கள் சென்றிருக்கிறார், இப்படி ஒரு “NON RESIDENT PRIME MINISTER” பிரதமரை வைத்துக் கொண்டு இந்த தேசத்தை எப்படி தீவிரவாதத் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவீர்கள்? விஜய் சிங், கர்னல் சோபியா குரேஷியை “ஜிகாதிகளுக்கு, ஜிகாதிகள் சகோதரியையே அனுப்பி பதிலடி கொடுத்தார்” என கூறினார். இது தான் இவர்கள் ராணுவ வீரர்களை மதிக்கக்கூடிய லட்சணம். ஒரு கர்னலை 'ஜிகாதிகளின் சகோதரி' என்று சொன்னவர் மீது கட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?’ என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராணுவ அதிகாரிகளை அவமானப்படுத்திய கட்சி பாஜக. விஜய் சிங் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? உங்களுக்கு அருகதை இருந்தால் நடவடிக்கை எடுத்து விட்டு பேசுங்கள். கொல்லப்பட்ட 25 பேரையும் இந்தியர்கள் என்று சொல்லாமல் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், இந்தியர்கள் என்ற உணர்வே உங்களிடம் இல்லையே? 1971-ல் ரிச்சர்ட் நிக்சனை பார்த்து அன்றைய பிரதமர் “BEING A DEVELOPING COUNTRY WE HAVE OUR BACKBONE STRAIGHT” என்று கூறி, 'நீங்கள் எங்களை அதிகாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை' என்று சொன்னார். இப்படி ஒரு கேள்வியை நீங்கள் டிரம்பை பார்த்து கேட்டீர்களா?” என்று புஹாரி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.