இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டு வரும் மக்கள் தொகை மாற்றங்கள் குறித்துப் படிப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. 'மக்கள் தொகை மாற்றங்கள் குறித்த உயர்மட்டக் குழு' (HLCDC) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு, நம் நாட்டில் நடக்கும் இயல்பற்ற மக்கள் தொகை மாற்றங்களுக்கான காரணங்களையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய உள்ளது. அத்துடன், இந்தச் சிக்கலைத் தீர்க்கத் தேவையான சட்ட ரீதியான மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும் இந்தக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பிரகாஷ் பிரபாகர் நாவ்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் சென்சஸ் கமிஷனர், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா, பி.பி.ஆர் அண்ட் டி (BPR&D) முன்னாள் தலைவர் பாலாஜி ஸ்ரீவஸ்தவா மற்றும் பொருளாதார நிபுணர் டாக்டர் ஷமிகா ரவி ஆகியோர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் இந்தக்குழுவின் உறுப்பினர் செயலாளராகச் செயல்படுவார். தேவைப்பட்டால், உள்ளூர் அரசுகள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் ஆலோசனை பெற்று இந்தக்குழு அறிக்கையைத் தயார் செய்யும்.
இந்தக் குழுவை அமைப்பதாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஊடுருவல் மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் மக்கள் தொகை மாற்றங்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பதாகக் கூறியுள்ளார். கடந்த 2025 ஆகஸ்ட் 15 அன்று, சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இதற்கான அறிவிப்பை முதன்முதலில் வெளியிட்டார். நமது நாட்டின் இறையாண்மை, தேசியப் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு மற்றும் பழங்குடியின சமூகத்தைப் பாதுகாப்பதில் மக்கள் தொகை மாற்றம் மிகவும் தீவிரமான விஷயம் என்று அமித் ஷா சுட்டிக்காட்டியுள்ளார். முறையற்ற குடியேற்றங்கள் மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் மாற்றங்களை முழுமையாகக் கண்டறியவே இந்த ஆய்வு என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் பிரதமர் மோடி, நாட்டின் சில பகுதிகளில் நடக்கும் இயல்பற்ற மக்கள் தொகை மாற்றங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார். எல்லைப் பகுதிகள் மற்றும் பழங்குடியின பகுதிகளில் உள்ளூர் வளங்களுக்கு ஏற்படும் அழுத்தத்தையும், எல்லைப் பாதுகாப்பையும் இந்த விவகாரத்துடன் அவர் தொடர்புபடுத்தியிருந்தார். இது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க நீண்ட காலமாகக் கூறி வரும் ஒரு கருத்தாகும். குறிப்பாக, வங்காளதேசத்திலிருந்து நடக்கும் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் மக்கள் தொகையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் தேர்தல் மற்றும் சமூகக் கட்டமைப்பை மாற்றிவிடுவதாக இந்த அமைப்புகள் நீண்டகாலமாக கவலை தெரிவித்து வருகின்றன.
இந்த அறிவிப்பின்படி, நாட்டில் சில பகுதிகளில் காணப்படுவது இயல்பான மக்கள் தொகை வளர்ச்சி அல்ல; மாறாக சட்டவிரோத குடியேற்றம், முறையற்ற இடம்பெயர்வு மற்றும் நிர்வாக ரீதியான குளறுபடிகள் போன்ற புறக் காரணிகளால்தான் இந்த மாற்றங்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் எல்லை மாவட்டங்களில் மட்டும் அல்லாமல், இப்போது நகர்ப்புறங்கள், தொழில் மண்டலங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும் பரவியுள்ளதாக அரசு கூறுகிறது. இதனால் அரசு சேவைகள் மற்றும் வளங்களை விநியோகம் செய்வதில் சமச்சீரற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தக் குழு தனது ஆய்வின் போது மக்கள் தொகையில் ஏற்படும் மாறுபாடுகள், எல்லை தாண்டிய நகர்வுகள் மற்றும் சமூக-சுற்றுச்சூழல் காரணங்களை ஆராயும். குறிப்பாக, மதம் அல்லது சமூகக் குழுக்களின் அடிப்படையில் ஏற்படும் கட்டமைப்பு மாற்றங்களை இது விரிவாகப் பகுப்பாய்வு செய்யும். சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை அடையாளம் கண்டு, அவர்களைக் கண்டறிந்து, சட்டப்படி வெளியேற்றும் ஒரு நிரந்தர அமைப்பை உருவாக்கவும் இந்தக் குழு பரிந்துரைக்க உள்ளது. எல்லையை நிர்வகிப்பதையும், மக்கள் தொகை மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதையும் வலுப்படுத்த புதிய வழிமுறைகளை இந்தக் குழு அரசுக்குத் தெரிவிக்கும். இந்த ஆய்வறிக்கையை ஒரு வருடத்திற்குள் சமர்ப்பிக்க இந்தக் குழுவுக்குக் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.