இந்தியா கையில் எடுக்கும் மாஸ்டர் பிளான்: "பெட்ரோல் இறக்குமதியைக் குறைக்க உதவும் E100 எரிபொருள்!"

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் சேர்க்கும் E20 முறையை இந்தியா அறிமுகப்படுத்திய நிலையில், இப்போது இன்னும் கூடுதலாக எத்தனால் சேர்க்கப்படும் எரிபொருட்களை நோக்கிப் பயணம் தொடங்கியுள்ளது.
E100 fuel India
E100 fuel IndiaE100 fuel India
Published on
Updated on
2 min read

இந்தியா தற்போது சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத புதிய போக்குவரத்து வசதிகளை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இப்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளதுதான் E100 எரிபொருள். ஏற்கனவே பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் சேர்க்கும் E20 முறையை இந்தியா அறிமுகப்படுத்திய நிலையில், இப்போது இன்னும் கூடுதலாக எத்தனால் சேர்க்கப்படும் எரிபொருட்களை நோக்கிப் பயணம் தொடங்கியுள்ளது. வழக்கமான பெட்ரோல், டீசல் போன்ற படிம எரிபொருட்களைச் சார்ந்திருப்பதை குறைத்து, இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் எரிபொருளைப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

E100 என்பது ஏறக்குறைய 95 முதல் 100 சதவீதம் தூய எத்தனால் கலந்த எரிபொருளாகும். இந்தியாவில் இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் E100 எரிபொருளில் சுமார் 93 முதல் 93.5 சதவீதம் வரை எத்தனால் இருக்கிறது. இதனுடன் பாதுகாப்பு மற்றும் வண்டி நன்றாக இயங்குவதற்காகச் சிறிதளவு பெட்ரோல் மற்றும் இதர சில பொருட்களைச் சேர்த்திருக்கிறார்கள். இந்த எரிபொருள் பொதுவாக 'பிளெக்ஸ்-பியூல்' (Flex-fuel) எனப்படும் வண்டிகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரக வாகனங்களில் எத்தனால் அளவு எவ்வளவு இருந்தாலும் அதற்கேற்ப எஞ்சின் தானாகவே மாறிக்கொள்ளும் திறன் கொண்டது.

இந்த E100 எரிபொருளை இந்தியா ஏன் இவ்வளவு தீவிரமாக ஊக்குவிக்கிறது என்பதற்கு மிக முக்கியமான காரணம் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதுதான். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கூற்றுப்படி, இந்தியா தனது எரிபொருள் தேவைக்காக 87 சதவீத கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. இதற்காக மட்டும் ஆண்டுதோறும் சுமார் 22 லட்சம் கோடி ரூபாய் செலவாகிறது. உலக அளவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், போர் போன்ற சூழல்களால் எரிபொருள் விலையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க, உள்நாட்டிலேயே விவசாய விளைபொருட்களில் இருந்து எத்தனால் தயாரித்து அதைப் பயன்படுத்துவதே சிறந்த வழி என்று அரசு கருதுகிறது.

எத்தனால் கலப்பு விஷயத்தில் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. நாடு முழுவதும் E20 பெட்ரோல் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது ஒரு மைல்கல். இப்போது அடுத்த கட்டமாக, எத்தனால் கலப்பை 30 சதவீதம் வரை உயர்த்துவதற்கும், E85 மற்றும் E100 போன்ற அதிக எத்தனால் கொண்ட எரிபொருட்களில் ஓடும் வாகனங்களை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த E100 எரிபொருள் முதன்முதலில் 2024-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்திர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 183 பெட்ரோல் பங்குகளில் இது கிடைக்கிறது. உலகில் பிரேசில் நாடுதான் இந்த E100 எரிபொருளை அதிக அளவில் பயன்படுத்துகிறது.

இந்த எரிபொருளுக்கு மாறுவதற்கு வாகன தயாரிப்பாளர்கள் தங்கள் வாகனங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். எத்தனால் பெட்ரோலை விடக் கொஞ்சம் அரிப்புத் தன்மை (Corrosive) கொண்டது, எனவே என்ஜின் பாகங்கள் அதற்குத் தாங்குவது போலத் தயாரிக்கப்பட வேண்டும். இருப்பினும், இந்த மாற்றம் வாகனங்களுக்கு அதிகத் திறனையும் (Performance), சிறந்த மைலேஜையும் தரும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் எத்தனால் எதிர்காலத்தில் எரிபொருள் விலையைக் கணிசமாகக் குறைக்கவும் உதவும் என்பதால், இது வாகன தயாரிப்பாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாகவே அமையும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com