அர்னாப் புயலின் தாக்கத்தால் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோர மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அதி கனமழை பெய்துள்ளது. சில பகுதிகளில் 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, நேற்று (அக் 27)ஆம் தேதி காலை 8.30 மணி முதல் இன்று (அக் 28) ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. அனகாப்பள்ளி மாவட்டத்தின் கண்ணிப்பாளையத்தில் 26.15 செ.மீ. மழையும், விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கே.வி.பி.ஆர். பள்ளி பகுதியில் 25.97 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
அதேபோல், விசாகப்பட்டினத்தில் உள்ள 16-வது காவல் பட்டாலியன் பகுதியில் 25.91 செ.மீ. மழையும், பரவாடாவில் 24.58 செ.மீ. மழையும், தாடி கிராமத்தில் 24.15 செ.மீ. மழையும் பெய்துள்ளது. சிம்மாச்சலத்தில் 23.63 செ.மீ. மழையும், வேபடாவில் 22.71 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, புயல் பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு இன்று (அக் 28) காலை 6.15 மணிக்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொலைபேசி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முறிந்து விழுந்த மரங்களை உடனடியாக அகற்றவும், வானிலை சீரடைந்ததும் மின் விநியோகத்தை விரைவாக மீட்டெடுக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும், ஏரிகள் மற்றும் கால்வாய்களில் நீர் நிரம்பி வழிவதைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். கனமழை மற்றும் பலத்த காற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இன்று மற்றும் நாளையும் புயலின் தாக்கத்தால் ஆந்திராவில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்