பாஜக - RSS மீண்டும் இணக்கம்! யார் இந்த ராம் மாதவ்? இவரை மோடி பரிந்துரைத்தது ஏன்? 
இந்தியா

பாஜக - RSS மீண்டும் இணக்கம்! யார் இந்த ராம் மாதவ்? மோடி இவரைப் பரிந்துரைத்தது ஏன்?

ஆர்.எஸ்.எஸ்.-பாஜக இடையிலான உரசல்கள் ஒருபோதும் மிகப் பெரிய பிளவாக மாறிவிடாது என்றாலும், இரு அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை கடந்த தேர்தல் உணர்த்தியது. அதனால், வருகின்ற 2027 உத்தரப் பிரதேசத் தேர்தலை முழு பலத்துடன் எதிர்கொள்ள இந்துத்துவா முகாம் தயாராகி வருகிறது.

மாலை முரசு செய்தி குழு

பாஜக அரசு 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டில் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்துகொண்டே வந்தது. ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தல் அந்தக் கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. 240 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்தது. பல இடங்களில் பாஜக சறுக்கியது கண்கூடாகத் தெரிந்தது.

இது ஒரு பக்கம் இருக்க, இதற்கு இணையாக பாஜக - ஆர்.எஸ்.எஸ். இடையிலான உறவும் மோசமடைந்து வந்ததைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக, பிரதமர் மோடியின் தனிமனித பிம்பம் மீது மறைமுகமான விமர்சனங்களை வைத்தது ஆர்.எஸ்.எஸ்.

RSS - BJP உறவும் விரிசல்களும்

RSS Leader Mohan Bhagawat

சில மாதங்களுக்கு முன்பு, "மனிதர்கள் தங்களைக் கடவுளாகக் கருதிக்கொள்ளக் கூடாது" என மோகன் பகவத் பேசியது பெரும் விவாதப் பொருளானது குறிப்பிடத்தக்கது.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் மற்றும் பாஜக ஒரே சித்தாந்தத்தில் பயணித்தாலும், ஆட்சி நடத்துவதில் பாஜகவின் பல முடிவுகளை ஆர்.எஸ்.எஸ். விமர்சித்துள்ளது. சில சமயங்களில், ஆர்.எஸ்.எஸ்-ன் கிளை அமைப்புகள் பாஜகவின் கார்ப்பரேட் ஆதரவு போக்கை வெளிப்படையாகக் கண்டித்துள்ளன.

2024ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் ஆகியோர் பாஜகவின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்தனர். "உண்மையான சேவகனுக்கு அகந்தை இருக்கக் கூடாது" என்றும், தேர்தல் பிரச்சாரங்களில் தலைக்கணம் காட்டியதால் தான் பாஜக 240 இடங்களுடன் நிறுத்தப்பட்டது என்றும் வெளிப்படையாகப் பேசினர்.

பாஜக, ஆர்.எஸ்.எஸ். உடனான உறவைப் புதுப்பிக்கத் தக்க தருணத்தைத் தேடி வந்தது. ஏனென்றால், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் உழைப்பைக் குறைத்து மதிப்பிடுவது தனது தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதைப் போன்றது என்பதை பாஜக உணர்ந்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு உரையில் பிரதமர் மோடி, உலகின் மிகப் பெரிய தொண்டு அமைப்பு எனப் புகழ்ந்தார்.

இதன் பிறகு, பாஜக தலைவராக நிதின் நபின் பதவியேற்றார். 8 மாதங்கள் கழித்து கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Nitin Nabin

ஆர்.எஸ்.எஸ்.-பாஜக இடையிலான உரசல்கள் ஒருபோதும் மிகப் பெரிய பிளவாக மாறிவிடாது என்றாலும், இரு அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை கடந்த தேர்தல் உணர்த்தியது. அதனால், வருகின்ற 2027 உத்தரப் பிரதேசத் தேர்தலை முழு பலத்துடன் எதிர்கொள்ள இந்துத்துவா முகாம் தயாராகி வருகிறது.

இந்தப் பணியில் பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.-க்கும் பாலமாகப் பார்க்கப்படுபவர் ராம் மாதவ். இவருக்கு நிதின் நபின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை வழங்கியிருக்கிறார். அதுவும் மோடியின் அழுத்தமான பரிந்துரையின் பேரில் கொடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இவருக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படக் காரணம் என்ன?

யார் இந்த ராம் மாதவ்?

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ராம் மாதவ். இவரது குடும்பம் ஜனசங் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளில் தீவிரமாக இயங்கிய பின்னணியைக் கொண்டது.

இளமைப் பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஆர்வம் காட்டிய இவர், 1981ஆம் ஆண்டில் தன்னை ஒரு முழுநேர ஊழியராக (பிரசாரக்) இணைத்துக் கொண்டார். ஆர்.எஸ்.எஸ். சார்ந்த பத்திரிகைகளில் எழுத்தாளராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

2003 முதல் 2014 வரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளராகச் செயல்பட்டார். 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியைப் பிடித்த பிறகு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலிருந்து விலக்கப்பட்டு பாஜகவுக்கு அனுப்பப்பட்டார்.

இணைந்த உடனே தேசியப் பொதுச் செயலாளர்!

பாஜகவில் இணைந்த உடனேயே, கட்சியின் தேசியப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

வடகிழக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் பாஜகவை விரிவுபடுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். அசாம், திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜக அரசுகளை அமைப்பதிலும், கட்சி அமைப்பை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வெற்றியும் பெற்றார்.

Ram Madhav

ஜம்மு-காஷ்மீரில் பாஜக-பிடிபி கூட்டணி அரசு அமைக்கப்பட்டதில் அவர் முக்கியமாகச் செயல்பட்டார். இந்தக் கூட்டணியால் கட்சிக்கு அரசியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியதைத் தொடர்ந்து, பிடிபி உடனான உறவை பாஜக பின்னர் முறித்துக்கொண்டது.

அப்போது காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், மாதவ் மீது ரூ.300 கோடி ஊழல் குற்றச்சாட்டை வைத்தார். இது அவரது அரசியல் பயணத்தைப் பாதித்தது.

கடந்த 2020ஆம் ஆண்டு பா.ஜ.க. தலைவராக இருந்த ஜெ.பி.நட்டா தனது தலைமையிலான கட்சி நிர்வாகிகளை அறிவித்தபோது, அதில் ராம் மாதவ் இடம் பெறவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் ஆர்.எஸ்.எஸ். பணிக்குச் சென்றார். அவருக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தேசியப் பொறுப்பு வழங்கப்பட்டது.

பாஜகவில் ரீ-என்ட்ரி

தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜகவுக்குத் திரும்பியிருக்கும் ராம் மாதவ், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த நோக்கங்களையும் பாஜக அரசின் நோக்கங்களையும் ஒருங்கிணைக்கும் பாலமாகத் திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 தேர்தல் மட்டுமல்லாமல் தொடர்ந்து ஜந்தார் மந்தர் போராட்டம், ஜார்க்கண்ட் போராட்டம் என பின்னடைவுகளை சந்தித்து வருகிறது பாஜக அரசு. இதுவரையில்லாமல் cjp என்ற புதுவகை எதிரியை எதிர்கொள்வதில் திணறி வருகிறது.

இந்த சூழலில் அதன் ஆர்.எஸ்.எஸ் வேர்களை புதுப்பிப்பதன் மூலம் 2027 உத்தரபிரதேச தேர்தலை உறுதியாக எதிர்கொள்வது பாஜகவின் திட்டமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஆனால், ராம் மாதவுக்கு வழங்கப்பட்டிருக்கும் தேசியத் துணைத் தலைவர் பதவி, கட்சியின் அன்றாடப் பணிகளில் தலையிடும் ‘ஆக்கப்பூர்வமான’ பொறுப்பு அல்ல. பொதுவாக மூத்த தலைவர்களுக்கு வழங்கப்படும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

இதனால், விரைவில் நிதின் நபின் இவருக்கு கூடுதல் பதவி வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராம் மாதவுடன், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் துணைத் தலைவர்களாக உத்தரகாண்டிலிருந்து தீரத் சிங் ராவத், ஒடிசாவைச் சேர்ந்த பைஜயந்த் பாண்டா, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த டி. புரந்தேஸ்வரி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரேகா வர்மா மற்றும் பஞ்சாபிலிருந்து சர்தார் மன்பிரீத் சிங் பாதல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இத்துடன், ஸ்மிருதி இரானி, பிப்லப் குமார் தேப் ஆகியோருக்குப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பி.எல். சந்தோஷ் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளராகவும், சிவபிரகாஷ் மற்றும் சௌதான் சிங் இணை அமைப்புச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்