இந்தியா

'திருமணத்தை மீறிய உறவிற்கு குழந்தைகள் ஆதாரம் அல்ல'.. கணவன்-மனைவி பிரச்சனையில் குழந்தைகளுக்கு 'DNA' பரிசோதனை செய்யமுடியாது!-ஆந்திரா நீதிமன்றம் உத்தரவு

துரோகத்தை நிரூபிப்பதற்கான ஒரு குறுக்கு வழியாக, ஒரு குழந்தையை இயந்திரத்தனமாக 'டி.என்.ஏ' சோதனைகளுக்கு உட்படுத்த முடியாது..

மாலை முரசு செய்தி குழு

மனைவி முறையற்ற உறவில் ஈடுபட்டார் என்பதை நிரூபிப்பதற்காக, மனுதாரர் தனது குழந்தைகளுக்கு 'டி.என்.ஏ' பரிசோதனை கோர முடியாது என்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.

சமீபத்திய தீர்ப்பு ஒன்றில், நீதிபதி தர்லாடா ராஜசேகர் ராவ், விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்திருந்த உரிமையியல் மறுஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்தார். கணவர் ஒருவரின் மனுவை விசாரித்த நீதிபதி தர்லாடா ராஜசேகர் ராவ் , விவாகரத்து நடவடிக்கைகளின் போது தாக்கல் செய்யப்பட்ட 'டி.என்.ஏ' பரிசோதனை மனுவை தள்ளுபடி செய்தார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் மனைவி தன்னைக் கைவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறி கணவர் தாக்கல் செய்த விவாகரத்து மனுவிலிருந்து இந்த வழக்கு தொடங்கியது. விசாரணையின் போது, ​​அவர் தன் இரண்டு குழந்தைகளுக்கும் 'டி.என்.ஏ' பரிசோதனை நடத்த அனுமதி கோரினார். அதன் முடிவுகளாக, அவர் 'அக்குழந்தைகளின் உயிரியல் தந்தை அல்ல' என்பதை நிரூபிக்கும் என்றும், தன் மனைவி 'திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தார்' என்ற தனது குற்றச்சாட்டை ஆதரிக்கும் என்றும் அவர் வாதிட்டார். "சண்டையிடும் பெற்றோர்களுக்கு இடையிலான ஒவ்வொரு வழக்கிலும், துரோகத்தை நிரூபிப்பதற்கான ஒரு குறுக்கு வழியாக, ஒரு குழந்தையை இயந்திரத்தனமாக 'டி.என்.ஏ' சோதனைகளுக்கு உட்படுத்த முடியாது", என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்ற குறிப்புடன் அந்த மனு தள்ளுபடி செய்தார் நீதிபதி.

மேலும், "திருமண தகராறுகளில் குழந்தைகளை 'பகடைக்காய்களாக' பயன்படுத்த முடியாது என்று குறிப்பிட்ட ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், மனைவியின் முறையற்ற உறவை நிரூபிப்பதற்காக ஒரு தந்தை தன் குழந்தைகளின் 'டி.என்.ஏ' பரிசோதனையைக் கோர முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஒரு பெற்றோரின் வழக்கிற்கு நன்மை செய்வதற்காக குழந்தைகளின் தனியுரிமை மற்றும் அடையாள உரிமையை தியாகம் செய்ய முடியாது", என்றும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்திய சாட்சியச் சட்டத்தின் 112-வது பிரிவின் கீழ் உள்ள சட்டப்பூர்வ அனுமானத்தையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அப்பிரிவின்படி, ஒரு செல்லுபடியான திருமணத்தின் போது பிறந்த குழந்தை சட்டபூர்வமானதாகக் கருதப்படுகிறது. மேலும், திருமணத் தகராறுகளில் 'டி.என்.ஏ' அல்லது இரத்தப் பரிசோதனைகளுக்கு உத்தரவிடுவதற்கு எதிராக நீதிமன்றங்கள் பலமுறை எச்சரித்துள்ளன என்றும், ஏனெனில் அத்தகைய நடவடிக்கைகள் குழந்தையின் நற்பெயருக்கும் சமூக அந்தஸ்துக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

குழந்தைகளை இதுபோன்ற நடைமுறைகளுக்கு உட்படுத்துவது நீண்டகால உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். 'டி.என்.ஏ' பரிசோதனை தொடர்பான முடிவுகள், பெற்றோரின் கோரிக்கைகளை விட, குழந்தையின் நலன்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய, அபர்ணா அஜிங்க்யா ஃபிரோடியா vs அஜிங்க்யா அருண் ஃபிரோடியா வழக்கில் உச்ச நீதிமன்றம் 2024-ல் வழங்கிய தீர்ப்பையும் உயர் நீதிமன்றம் மேற்கோள் காட்டியது. முக்கியமாக, கணவரின் விவாகரத்து மனுவானது, திருமணத்தை மீறிய உறவு என்ற அடிப்படையில் அல்லாமல், கைவிட்டுச் சென்ற குற்றத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது. எனவே, குழந்தைகளுக்கு 'டி.என்.ஏ' பரிசோதனை கோருவது, தற்போதைய வழக்கிற்கு நேரடியாகத் தொடர்பில்லாததாகும்.

மேலும், குழந்தைகள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினராக இல்லாததாலும், தந்தையிடமிருந்து எந்தப் பராமரிப்புத் தொகையையும் கோராததாலும், அவர்களை 'டி.என்.ஏ' பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு எந்த நியாயமும் இல்லை. ஒரு பெற்றோரின் சட்ட உத்தியின் நன்மைக்காக, மூன்றாம் தரப்பினரின், குறிப்பாகக் குழந்தைகளின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்று நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது. இறுதியாக, உயர் நீதிமன்றம் கணவரின் மனுவைத் தள்ளுபடி செய்து, ₹3,000 அபராதம் விதித்ததுடன், அந்தத் தொகையை மூன்று வாரங்களுக்குள் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்திடம் செலுத்துமாறும் அவருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மீறினால், சிறைத்தண்டனை உட்பட உரிமையியல் மீட்பு நடவடிக்கைகள் தொடரக்கூடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.