இந்தியா

”காங்கிரஸ் வெற்றிக்காக கருப்பு மேஜிக் செய்கிறது”- பிரதமர் விமர்சனம்

பிரதமர் மோடி கண்ணியமாக பேச வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவுரை

Malaimurasu Seithigal TV

பிரதமர் நரேந்திர மோடியின் "கருப்பு மேஜிக்" கருத்து குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று பதிலளித்துள்ளார்.  இதுபோன்ற மூடநம்பிக்கை கருத்துகளைப் பற்றி பேசி பிரதமர் பதவியின் கண்ணியத்தைக் குறைப்பதை நரேந்திர மோடி நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆகஸ்டு போராட்டம்:

விலைவாசி உயர்வுக்கு எதிராக ஆகஸ்ட் 5-ம் தேதி கருப்பு ஆடை அணிந்து காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டம் நடத்தியது. இதை விமர்சித்த பிரதமர் மோடி, கருப்பு மேஜிக் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இனி ஒருபோதும் மக்களின் நம்பிக்கையை பெற முடியாது என்று மோடி விமர்சனம் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக ராகுல் காந்தி, நாட்டில் பணவீக்கம் அல்லது வேலையில்லாத் திண்டாட்டத்தை பிரதமரால் பார்க்க முடியவில்லையா என்று கேள்வி கேட்டுள்ளார்.

ராகுல் கண்டனம்:

பிரதமர் பதவியின் கண்ணியத்தைக் குறைப்பதை நிறுத்துங்கள் எனவும் ஆட்சியின் கருப்புச் செயல்களை மறைக்க 'கருப்பு மேஜிக்' போன்ற மூடநம்பிக்கைகளைப் பற்றி பேசி நாட்டை தவறாக வழிநடத்தாதீர்கள் என்று ராகுல் காந்தி டிவிட்டரில் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

மக்களின் பிரச்சினைகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ப. சிதம்பரம் கண்டனம்:

கருப்பு ஆடை அணிபவர்கள் மக்களின் நம்பிக்கையை ஒருபோதும் பெற முடியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.  ஆனால் ஈ. வெ. ரா. பெரியார் வாழ்நாள் முழுவதும் கருப்பு சட்டை அணிந்து தமிழ்நாட்டு மக்களின் முழு நம்பிக்கையையும் பெற்றிருந்தார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் அவர்களும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மோடி விமர்சனம்:

900 கோடி மதிப்பிலான இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க வீடியோ கான்பரன்சிங் மூலம் பானிபட்டில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார் பிரதமர் மோடி.   நாடு முழுவதும் ஆகஸ்டு 5 சிலர் கருப்பு மேஜிக் செய்ய முற்பட்டனர் எனவும் அவர்கள் அவ்வாறு செய்வதன் மூலம் மக்களுக்கு அவர்கள் மேல் நம்பிக்கை வர வைக்க முடியும் என்றெண்ணினர் எனவும் கூறினார்.  ஆனால் ஒருபோதும் அது நடக்கது என பிரதமர் பேசியிருந்தார்.

ஆனால், மாந்திரீகம், சூனியம், மூடநம்பிக்கை போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியாது என்று மேலும் மோடி கூறியுள்ளார்.