ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடக்கும் போர் சூழல் காரணமாக உலகளவில் தற்போது கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த போர் தொடங்கியது எப்படி? இதனால் கச்சா எண்ணெய் குறைபாட்டால் மக்கள் எதிர்கொண்டுவரும் சவால்கள் என்னவென்று விரிவாக பார்ப்போம்.
போர் ஒரு பார்வை: கடந்த ஆண்டு 2025 அன்று ஜூன் மாதம் இஸ்ரேல், ஈரானின் மீது அணு ஆயுத திட்டம் மற்றும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற ஆயுத படைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதை எதிர்த்து தாக்குதலை நடத்தியது. அந்த போர் சமயத்தில் ஈரான் பின்னடைவை சந்தித்த நிலையில், போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கு ஈரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அனைத்தும் சுமூகமாக செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது பிப்ரவரி 28ம் தேதி மீண்டும் ஈரானின் மீது இஸ்ரேல்-அமெரிக்கா சேர்ந்து கூட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்நிலையில் இரண்டு நாடுகளுக்குள் மட்டுமின்றி வளைகுடா நாடுகளிலும் போர் பதட்டம் அதிகரித்தது, இதனையடுத்து ஈரானின் உச்சந்தலைவரான ஆயத்துல்லாஹ் அலி காமேனியை, தெஹ்ரானில் உள்ள அவரது வளாகத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதல் காரணமாக கொல்லப்பட்டார். இப்போது நடக்கும் இந்த போர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த போரை விடவும் பெரிதாகவே பார்க்கப்படுகிறது. காமேனியின் இறப்பிற்கு பிறகு ஈரானில் இடைக்கால தலைவராக அந்நாட்டின் 111வது பிரிவின் கீழ் அவசர தற்காலிக தலைவராக மூத்த மத குரு ஆயத்துல்லாஹ் அலிரேசா அராபி நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் மார்ச் 8ம் தேதி முன்னாள் உச்சந்தலைவரின் மகன் மொஜ்தபா காமேனி உச்சந்தலைவராக பதவி ஏற்றிருக்கிறார்.
அமெரிக்காவின் பங்கு: சுமூகமாக முடிவிற்கு வரவிருந்த இந்த போரினை மீண்டும் அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் துவங்கிவைத்துள்ளார். அமெரிக்க அரசியலமைப்பு சாசனத்தின் படி அதிபரால் ஒரு போரினை துவங்க முடியாது. இதற்க்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதி தேவை. ட்ரம்பின் இந்த போர் முன்னெடுப்பை கண்டித்து அமெரிக்க செனட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டிம் கைன் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானத்திற்கு, 47 பேர் சாதகமாகவும், 53 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். தீர்மானத்திற்கு எதிராகவே வாக்குகள் சேர்ந்ததினால் இந்த முடிவு ட்ரம்பிற்கு ஆதரவாகவே சென்றுள்ளது. இதனிடையில் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத், 'ஈரான் போர் இன்னும் 8 வாரங்கள் வரை தொடரலாம்' என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போரில் அமெரிக்கா நேரடியாக பங்குகொள்ள காரணமாக கூறப்படுவது, ஈரானின் ஏவுகணைத் திறன்களை அழித்தல், அவர்கள் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பது மற்றும் ஆட்சி மாற்றத்தை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவும் இஸ்ரேலுடன் சேர்ந்து போர் செய்வதாக கூறப்படுகிறது.
வர்த்தக பாதிப்பு: வெகுநாட்களாக நீண்டு வரும் இந்த போரினால் ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதனால், பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி சென்றடைவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தும் உள்ளது. இது குறித்து ட்ரம்பின் பதில் மக்களிடையே பேசுபொருளானது. அவர் கூறியது,"பெட்ரோல் நிலையங்களில் விலை உயர்வது குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. போர் முடிந்ததும் விலைகள் தானாகவே மிக விரைவாகக் குறைந்துவிடும். பெட்ரோல் விலைகள் ஒன்றும் அந்த அளவிற்கு அதிகமாக உயரவில்லை" என்று பதிலளித்திருந்தார். கச்சா எண்ணெயின் விலை உச்சத்தை தொடலாம் என்ற நிலையில், கத்தாரின் எரிசக்தி அமைச்சர் சாத் அல்-காபி கச்சா எண்ணெய் விலை குறித்துப் பேசியிருந்தார். அதில் போரினால் வளைகுடா நாடுகள் எண்ணெயை ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளனர். இது உலகின் எரிசக்திச் சந்தையைப் பெரிதும் பாதிக்கலாம். உலகப் பொருளாதாரங்களைக் கீழாக மாற்றலாம். அதுமட்டுமின்றி போர் நிறுத்தப்பட்டாலும் கூட மீண்டும் வழக்கம் போல, கத்தார் தங்களது ஏற்றுமதிகளை தொடங்க வாரங்கள் அல்லது மாதங்கள் கணக்கில் ஆகும் என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனால் ட்ராம்போ "உலக அமைதிக்காக இது ஒரு சிறிய விலையே!" என்று கூறியிருந்தார்.
அவதியுறும் உலக நாடுகள்: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்கள் காரணமாக எண்ணெய் டேங்கர் போக்குவரத்தை முடக்கியுள்ளதால், பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் அந்நாட்டின் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கத் தொடங்கியுள்ளன. ஏனெனில் பாகிஸ்தான் வளைகுடாவிலிருந்து எரிசக்தி இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ளது, மேலும் போர் நீடிப்பதால் அதன் அரசாங்கம் எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.அதன் தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு 2 வாரங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் சேமிப்பிற்காக அரசு ஊழியர்கள் வாரம் நான்கு நாட்கள் மட்டுமே வேலைக்கு வந்தால் போதும் என்றும், எஞ்சிய அலுவலகங்கள் ஆன்லைன் மூலமாக இயங்கலாம் எனவும் கூறியிருக்கிறார் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப். கியூபாவில் போதுமான அளவு எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதியுறுகின்றனர்.
இந்தியாவின் நிலை என்ன? ஈரான் - இஸ்ரேல் போரின் எதிரொலி தற்போது இந்தியா வரை அதிரவைத்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தற்போது வரை வணிக சிலிண்டர்களுக்கு மட்டுமே தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால் பெங்களூரு, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் வணிக சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ள உணவகங்களும் விலைகளை இரண்டு மடங்காக உயர்த்த வாய்ப்புள்ளது. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் முன்பதிவு காலத்துக்கான இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. மேலும் எரிவாயு சிலிண்டர் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையை தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி, LPG சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. கூடவே, வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை விட சமையல் எரிவாயு சிலிண்டருக்கு முன்னுரிமை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி தற்போது தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையிலும், புதுச்சேரியிலும் கூட உணவகங்களை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இதனால் உணவகங்கள் காலை உணவுகளோடு உணவு தயாரிப்பதை நிறுத்தியுள்ளனர். மேலும் உணவு வகை தயாரிப்பை குறைத்தும் வருகின்றனர். இதனால் உணவகங்களை சார்ந்திருக்கும் மக்களின் நிலையும், உணவகங்களை நடத்தும் சாமானிய உழைக்கும் மக்களின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் கால அளவு 15 நாட்களில் இருந்து 21 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், சிலிண்டர் தட்டுப்பாடு வந்துவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே வெகுவாக எழுந்துள்ளது.
போரின் எதிரொளியாக தற்போது அமெரிக்காவே நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிக வரிகளை விதித்திருந்த ரஷ்யாவின் எண்ணெய் பேரல்கள் மீது இருக்கும் வரிகளை நீக்க அமெரிக்கா யோசனை மேற்கொண்டு வருகிறது. இதனால் போர் விரைவில் முடிவிற்கு வர வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், ஹார்மோஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய்களை நிறுத்த ஈரான் ஏதாவது செய்தால், இது வரை தாக்கியதை விட, 20 மடங்கு அதிகமாக ஈரானை அமெரிக்கா தாக்கும் என்றும் கூடவே, ஈரான் ஒரு தேசமாக மீண்டும் கட்டி எழுப்ப முடியாத அளவுக்கு அதன் இலக்குகளை அமெரிக்கா அழிக்கும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இறுதியாக அதிகார நிலைநிறுத்தலுக்காக நடக்கும் இந்த போரில் இரையாவது என்னவோ வழக்கம்போல சாதாரண மக்களாவே இருக்கிறார்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.