ஒரு காலத்தில் தந்தையுடன் சாலையோரத்தில் அமர்ந்து புத்தகங்கள் விற்பனை செய்த சிறுமி... பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே தெருவில் தனக்கென ஒரு வீட்டை வாங்கியிருக்கிறார். அந்தச் சிறுமி வேறு யாருமல்ல, முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தேசிய பொதுச்செயலாளருமான ஸ்மிருதி இரானி. தனது வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாக எதைப் பார்க்கிறேன் என்பதைப் பகிர்ந்துகொண்ட அவர், சிறுவயதில் தந்தையிடம் சொன்ன ஆசை 50 வயதில் நிறைவேறிய நெகிழ்ச்சியான அனுபவத்தையும் நினைவுகூர்ந்துள்ளார்.
லக்னோவில் நடைபெற்ற 17-வது ஸ்கிரீன் எக்ஸ்பிரஸோ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்மிருதி இரானி, தனது குழந்தைப் பருவம், குடும்பச் சூழல், தந்தையின் உழைப்பு மற்றும் வாழ்க்கையில் வெற்றி என்பதற்கு தான் கொடுக்கும் அர்த்தம் குறித்து மனம் திறந்து பேசினார். அப்போது, டெல்லியில் தனது தந்தை சாலையோரத்தில் புத்தகங்கள் விற்பனை செய்து வந்த நாட்களை நினைவுகூர்ந்தார்.
ஸ்மிருதிக்கு சுமார் ஏழு வயது இருக்கும்போது அவரது பெற்றோர் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர். அந்தக் காலகட்டத்தில் அவர் தனது தந்தையுடன் அதிக நேரம் செலவிட்டுள்ளார். டெல்லியின் தௌலா குவான் பகுதியில் உள்ள ராணுவ கிளப்புக்கு எதிரே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் அவரது தந்தை ஒரு படுக்கை விரிப்பைத் தரையில் விரித்து, அதன் மீது இந்தி புத்தகங்களை வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். அந்தப் பகுதியில் தந்தையுடன் அமர்ந்திருந்த சிறுமி ஸ்மிருதிக்கு, அன்றைய வாழ்க்கை அனுபவங்கள் இன்றும் தெளிவாக நினைவில் இருக்கின்றன.
தௌலா குவான் பகுதியில் இந்தி புத்தகங்களை விற்ற அவரது தந்தை, ஆனந்த் நிகேதன், சாந்தி நிகேதன் போன்ற பகுதிகளில் ஆங்கிலப் புத்தகங்களையும் விற்பனை செய்துள்ளார். டெல்லியின் ஆர்.கே. புரம் செக்டர் 6 பகுதியில் பழைய பத்திரிகைகளை வாங்கி விற்பனை செய்துள்ளார். குறிப்பாக, தூக்கி எறியப்பட்ட பழைய 'டைம்' (TIME) இதழ்களை ஒரு பழைய பொருட்கள் விற்பனையாளரிடம் வாங்கி, மீண்டும் சாலையோரத்தில் விற்று வந்துள்ளார்.
சிறுமியாக இருந்தபோது தந்தையின் இந்தத் தொழில் குறித்து ஸ்மிருதிக்கு பல கேள்விகள் எழுந்துள்ளன. ஏன் ஒரு பகுதியில் இந்தி புத்தகங்களையும், மற்றொரு பகுதியில் ஆங்கிலப் புத்தகங்களையும் விற்கிறீர்கள் என்று அவர் ஒருமுறை தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு, வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பும் தொழிலாளர்கள் குறைந்த விலையில் கிடைக்கும் இந்தி புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள் என்றும், வசதி படைத்தவர்களின் வீடுகளில் பணிபுரிபவர்கள் ஆங்கிலப் புத்தகங்களை விரும்பி வாங்குவார்கள் என்றும் அவரது தந்தை விளக்கியுள்ளார். சிலர் ஆங்கிலத்தைப் படிக்கவும், சிலர் அந்த மொழியில் உள்ள செய்திகளைத் தெரிந்துகொள்ளவும் புத்தகங்களை வாங்குவதாகக் கூறியுள்ளார்.
உலக அரசியல் உள்ளிட்ட சர்வதேச நிகழ்வுகளைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்காகவே பழைய 'டைம்' இதழ்களையும் விற்பனை செய்ததாக அவர் கூறியுள்ளார். தந்தையின் இந்தப் பணியை அருகில் இருந்து பார்த்து வளர்ந்த ஸ்மிருதி, பின்னாளில் தனது அடையாளத்தை அறிமுகப்படுத்தும்போதும் அந்த நினைவுகளை மறக்கவில்லை. 2025-ம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற டைம் 100 நெக்ஸ்ட் நிகழ்ச்சியில் பேசியபோதுகூட, “நான் புத்தக விற்பனையாளரின் மகள். பழைய டைம் இதழ்களை விற்ற குடும்பத்தைச் சேர்ந்தவள்” என்ற பொருளில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
இந்த நினைவுகளுடன் தொடர்புடைய மற்றொரு சம்பவம்தான் தற்போது அவரது வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தந்தையுடன் தௌலா குவான் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தபோது, ராணுவ கிளப்புக்குள் சென்று வந்த கார்களையும், அங்கு இருந்த கொடிகளையும், ராணுவத்தினர் மரியாதை செலுத்துவதையும் ஸ்மிருதி கவனித்துள்ளார். அப்போது, ஒருநாள் அந்தச் சாலையிலேயே தங்களுக்கென்று சொந்த வீடு இருக்குமா என்று தந்தையிடம் கேட்டுள்ளார். அதேபோல், ஒருநாள் தங்களையும் யாராவது மரியாதையுடன் வரவேற்கும் நிலை வருமா என்றும் அவர் வியந்துள்ளார்.
தந்தை புத்தகங்களை விற்பனை செய்துகொண்டிருக்கும்போது, ஸ்மிருதி நேரத்தைச் செலவிடுவதற்காக அவரிடம் ஒரு சிறிய உணவுப் பெட்டியைக் கொடுத்துள்ளார். வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்கும் சில்லறைக் காசுகளை அந்தப் பெட்டியில் போட்டு வைத்துக்கொண்டு அமைதியாக இருக்குமாறு தந்தை கூறுவாராம். அந்தச் சிறிய அனுபவங்கள்தான் தனது குழந்தைப் பருவத்தின் முக்கியமான நினைவுகளாக இருப்பதாக ஸ்மிருதி தெரிவித்துள்ளார்.
ஆண்டுகள் பல கடந்த நிலையில், சிறுவயதில் கண்ட கனவு நனவாகியுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் தோல்வியடைந்த பிறகு, ஸ்மிருதி மீண்டும் நடிப்புப் பணிகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். 'க்யுங்கி சாஸ் பி கபி பஹு தி' தொடரின் இரண்டாவது சீசனிலும் அவர் பணியாற்றத் தொடங்கினார். இதே காலகட்டத்தில், தனது தந்தை ஒரு காலத்தில் புத்தகங்கள் விற்பனை செய்த அதே சாலையில் அவர் ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.
வீடு கட்டி முடிக்கப்பட்டதும், முதலில் வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை என்று ஸ்மிருதி கூறியுள்ளார். தனது 75 வயது தந்தையை அழைத்து வந்து வீட்டின் வாசலில் நிற்க வைத்துள்ளார். பின்னர், சிறுவயதில் அவர் கேட்ட ஆசையை நினைவுபடுத்தி, “எனக்கு ஏழு வயதாக இருந்தபோது உங்களிடம் சொன்னேன். இப்போது 50 வயதில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன்” என்று கூறியுள்ளார். அந்தத் தருணம் தனக்கு மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.
தனது வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை எது என்று கேட்டால், இந்த வீட்டை வாங்கியதைத்தான் முதலில் சொல்வேன் என்றும் ஸ்மிருதி தெரிவித்துள்ளார். ஏனெனில், சிறுவயதில் அவரது குடும்பம் பொருளாதார ரீதியாக பல சவால்களைச் சந்தித்துள்ளது. சொந்தமாக ஒரு வீடு இருப்பதும், அடுத்த மாத சம்பளம் வரவில்லை என்றாலும் குடும்பம் பாதிக்கப்படாத அளவுக்கு வங்கிக் கணக்கில் பணம் இருப்பதும் அப்போது அவர்களுக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்துள்ளது.
தனக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதே வெற்றி என்றும், வெளியுலகில் எவ்வளவு புகழ் அல்லது பொறுப்பு இருந்தாலும் வீட்டுக்குத் திரும்பும்போது குடும்பத்தினரின் அன்பைப் பெறுவதுதான் உண்மையான மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகம் மற்றும் அரசியல் துறைகளில் சுமார் 30 ஆண்டுகள் பயணித்துள்ள ஸ்மிருதி இரானியின் இந்த அனுபவம், வெற்றி என்பது பதவி, புகழ், பணம் ஆகியவற்றை மட்டும் வைத்து அளவிடப்படுவதில்லை என்பதை உணர்த்துகிறது. சிறுவயதில் தந்தையுடன் சாலையோரத்தில் அமர்ந்து கண்ட ஒரு கனவு, பல ஆண்டுகளுக்குப் பிறகு நனவானதே அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சியாக மாறியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.