Sonam-and-Raja-Raghuvanshi 
இந்தியா

கோரமாக மாறிய "தேனிலவு".. புது மாப்பிள்ளை கொலை! மணமகள் மிஸ்ஸிங்.. மேகாலயாவில் என்ன நடந்தது?

காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழு (SIT), ராஜா ஒரு ‘டாவ்’ (Dao) எனப்படும் கத்தியால் கொலை செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தியது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும், ராஜாவின் செல்போனும் அந்த இடத்தில் கிடைத்தன

மாலை முரசு செய்தி குழு

இந்தோரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி (28) மற்றும் சோனம் (24) என்ற இளம் தம்பதி, கடந்த மே 11, 2025 அன்று திருமணம் செய்து கொண்டு, மே 20 அன்று தங்களது தேனிலவுக்காக மேகாலயாவுக்கு பயணித்தனர். இன்ஸ்டாகிராமில் பிரபலமான மேகாலயாவின் உயிருள்ள வேர் பாலங்களை (Living Root Bridges) பார்க்க வேண்டும் என்று இவர்கள் ஆசைப்பட்டனர். இந்தோரில் போக்குவரத்து தொழில் செய்யும் ராஜா, பயணத்தை கவனமாக திட்டமிட்டு, ஒவ்வொரு விவரத்தையும் ஆராய்ந்து தயாராக இருந்தார்.

மே 22 அன்று, இந்த தம்பதி மவுலாக்கியாட் கிராமத்துக்கு வந்து, 3,000 படிகள் இறங்கி நோங்ரியாட் கிராமத்தில் உள்ள ஒரு விருந்தினர் இல்லத்தில் (Homestay) தங்கினர். அடுத்த நாள், மே 23 காலையில், அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவர்களது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால், குடும்பத்தினர் கவலையடைந்து, மேகாலயாவுக்கு சென்று உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து தேடுதல் வேலையை தொடங்கினர்.

கண்டுபிடிக்கப்பட்ட தடயங்கள்

காவல்துறையினர், தம்பதி வாடகைக்கு எடுத்திருந்த ஆக்டிவா ஸ்கூட்டரை, ஷில்லாங் மற்றும் சோஹ்ரா (செர்ராபுஞ்சி) இடையே உள்ள ஒரு கஃபே அருகே கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடித்தனர். ஸ்கூட்டரில் உள்ள ஜிபிஎஸ் கருவி, இவர்கள் வெய் சாவ்டோங் (Wei Sawdong) பகுதியை நோக்கி சென்றதாக காட்டியது. பல நாட்கள் தேடுதலுக்கு பிறகு, ஜூன் 2 அன்று, ராஜாவின் உடல், வெய்சாவ்டோங் நீர்வீழ்ச்சி அருகே ஒரு ஆழமான பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழு (SIT), ராஜா ஒரு ‘டாவ்’ (Dao) எனப்படும் கத்தியால் கொலை செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தியது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும், ராஜாவின் செல்போனும் அந்த இடத்தில் கிடைத்தன.

சோனம் மிஸ்ஸிங்

சோனம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மேகாலயா காவல்துறையினர், மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணி தாமதமாகிறது என்று கூறினர். ஒரு Raincoat, சில கறைகளுடன் கிடைத்ததாகவும், ஆனால் அது சோனத்துடையதா என்பது உறுதியாகவில்லை என்றும் காவல்துறை தெரிவித்தது. தேசிய பேரிடர் மீட்பு குழு (NDRF), மாநில பேரிடர் மீட்பு குழு (SDRF), உள்ளூர் தன்னார்வலர்கள் என பலரும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

குடும்பத்தினரின் கோரிக்கை

ராஜாவின் உடல் இந்தோருக்கு கொண்டு வரப்பட்டு, ஜூன் 4 அன்று இறுதி சடங்குகள் நடைபெற்றன. “நான் இறக்கவில்லை, கொலை செய்யப்பட்டேன்” என்று ராஜாவின் இறுதி சடங்கில் பதாகைகள் வைக்கப்பட்டன. குடும்பத்தினர், இது ஒரு கொலை மற்றும் கடத்தல் சம்பவமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். ஸ்கூட்டரை வாடகைக்கு கொடுத்தவர் மற்றும் உள்ளூர் கும்பல் இதில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இந்த வழக்கை சிபிஐ (CBI) விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

கடைசி தொடர்பு

சோனம் கடைசியாக, கடந்த மே 23 அன்று தனது மாமியாருடன் பேசுகையில், "நாங்க காட்டுக்குள்ள ட்ரெக்கிங் போயிருக்கோம், மூச்சு வாங்குது, பிறகு பேசுறேன்” என்று கூறியிருந்தார். மேகாலய முதலமைச்சர் கான்ராட் சங்மா, இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து, விசாரணையை தீவிரமாக கண்காணிப்பதாக கூறினார். மாநில சுற்றுலா அமைச்சர், இது ஒரு அரிதான சம்பவம் என்றும், மேகாலயா சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான இடமாகவே இருக்கிறது என்றும் கூறினார். ஆனால், இந்த சம்பவம் மேகாலயாவின் சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த துயரமான சம்பவம், இந்தோர் மக்களையும் மேகாலயாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராஜாவின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும், சோனம் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பதே குடும்பத்தினரின் ஒரே வேண்டுதலாக உள்ளது. தேடுதல் மற்றும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்