``வெள்ளைக்கார ஆட்சியை விட மோசமான ஏற்றத்தாழ்வு.. மினிமம் ரூ.42,000 வேண்டும்" - அவசரமாக திரளும் 1,00,000 தொழிலாளர்கள்! 
இந்தியா

``வெள்ளைக்கார ஆட்சியை விட மோசமான ஏற்றத்தாழ்வு.. மினிமம் ரூ.42,000 வேண்டும்" - அவசரமாக திரளும் 1,00,000 தொழிலாளர்கள்!

"நாடு 'சமத்துவமின்மை அவசரநிலை' (Inequality Emergency) என்ற கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொழிலாளர் பேரணி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும்" எனப் பேசினார் ஜெயந்தி கோஷ்.

Antony Ajay R

இந்தியாவின் பொருளாதார ஏற்றத்தாழ்வு காலனியத்துவ காலகட்டத்தை விட மோசமான நிலையில் இருப்பதாக பொருளாதார வல்லுனர் ஜெயந்தி கோஷ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வருகின்ற டிசம்பர் 1-ம் தேதி நாடாளுமன்ற நோக்கி ஒரு லட்சம் தொழிலாளர்கள் இணைந்து நடத்தும் பிரம்மாண்ட பேரணியை சி.ஐ.டி.யு (CITU) தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கான பத்திரிகை சந்திப்பில் தொழிலாளர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும்வகையில் கலந்துகொண்டார் ஜெயந்தி கோஷ். அப்போது, "நாடு 'சமத்துவமின்மை அவசரநிலை' (Inequality Emergency) என்ற கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொழிலாளர் பேரணி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும்" எனப் பேசினார்.

அனைவருக்கும் ரூ.21,000 பொது ஓய்வூதியம், ரூ.42,000 குறைந்தபட்ச ஊதியம் மற்றும் அதீத பணக்கார குடும்பங்களுக்குச் சிறப்பு வரி விதிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் பேரணியை நடத்தவுள்ளனர்.

தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசிய ஜெயந்தி, "இன்று நாடு எதிர்கொள்ளும் மிக முக்கியப் பிரச்னை போதுமான மற்றும் தரமான வேலைவாய்ப்புகள் இல்லாததும், அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளை உருவாக்க முடியாததும்தான்.

உண்மையான ஊதியத்தில் (Real wages) மிகப்பெரிய சரிவை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நாடு தனது பொதுச் சொத்துகளை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். தற்போதைய இந்தியாவில் நிலவும் பொருளாதாரச் சமத்துவமின்மை, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை விட மோசமாக உள்ளது." பேசினார்.

தொடர்ந்து அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், "கொலம்பியா மற்றும் பிரேசில் நாடுகளின் நடைமுறைகளைப் பின்பற்றி, அதீத பணக்காரர்கள் மீது சொத்து வரி மற்றும் வாரிசுரிமை வரி விதிப்பதே இந்தச் சமத்துவமின்மை அவசரநிலையைச் சரிசெய்வதற்கான முதல் படியாக இருக்க வேண்டும்." என்றார்.

பிரதமர் மோடியின் பேச்சை சுட்டிக்காட்டி பேசிய சி.ஐ.டி.யு தலைவர் சுதீப் தத்தா, "வரிச் சலுகைகளைப் பெற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை எனப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் உண்மையைப் பேசியிருக்கிறார். இதுதான் நிதர்சனம். இந்தியத் தொழிலாளர்கள் ஆரம்பத்திலிருந்தே இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கார்ப்பரேட் வர்க்கத்திற்குச் சலுகைகளை வாரி வழங்குவதன் மூலம் மக்களின் பிரச்னைகளைத் தீர்த்துவிடலாம் என்ற இந்தப் பொருளாதார மாதிரி படுதோல்வியடைந்துவிட்டது" என்றார்.

தொழிலாளர்களின் சில முக்கிய கோரிக்கைகள்:

* நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை (Labour Codes) உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNREGA) மீண்டும் முழுமையாகச் செயல்படுத்தி, அத்திட்டத்தில் பணிபுரிபவர்களை முழு உரிமைகள் கொண்ட தொழிலாளர்களாக அங்கீகரிக்க வேண்டும்.

* ரூ.42,000 குறைந்தபட்ச ஊதியம், சுயதொழில் செய்வோருக்கு ரூ.42,000 குறைந்தபட்ச குடும்ப வருமானம் மற்றும் அனைவருக்கும் ரூ.21,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

* பொதுத்துறை காலிப் பணியிடங்களை நிரப்புவது, ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணிநிரந்தரம் செய்வது, சம வேலைக்குச் சம ஊதியம் வழங்குவது, முதலாளிகளின் பாதுகாப்பு விதிமீறல்களைத் தடுப்பது ஆகியவற்றை அரசு உறுதி செய்ய வேண்டும்.

* தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் வேலைநிறுத்தங்களைக் குற்றமயமாக்குவதை நிறுத்த வேண்டும்; நீர், நிலம், காடுகள் மற்றும் தேசிய சொத்துகளைப் பாதுகாத்து, நில அபகரிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.