திருமணமான ஆண் ஒருவர் வயது வந்த பெண்ணுடன் சேர்ந்து லிவ்-இன் உறவில் இருப்பது குற்றமால்ல என்றும், ஒழுக்கத்தையும் சட்டத்தையும் பிரித்து வைக்க வேண்டும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த, லிவ்-இன் உறவில் வாழும் தம்பதியினர் தாக்கல் செய்த குற்றவியல் ரிட் மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், வயது வந்த பெண்ணுடன் பரஸ்பர சம்மதத்துடன் லிவ்-இன் உறவில் இருக்கும் திருமணமான ஆண் மீது வழக்குத் தொடர முடியாது என்று சமீபத்தில் ஒரு முக்கிய அறிக்கையில் கூறியது. அப்பெண்ணின் தாயார் தங்களுக்கு எதிராகப் பதிவு செய்திருந்த காவல்துறை வழக்கை ரத்து செய்யக் கோரி அந்தத் தம்பதியினர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
விசாரணையின் போது, அந்த ஆண் ஏற்கனவே திருமணமானவர் என்பதால், அவர் மற்றொரு பெண்ணுடன் தங்கியிருப்பது குற்றமாகும் என்று அப்பெண்ணின் குடும்ப வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், பெண்ணின் குடும்பத்தினரிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ள, லிவ்-இன் உறவில் வாழும் தம்பதியினருக்குப் பாதுகாப்பு கோரும் மனுவை, நீதிபதி ஜே.ஜே. முனீர் மற்றும் நீதிபதி தருண் சக்சேனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இருப்பினும், சட்டத்தை சமூக ஒழுக்கத்திலிருந்து பிரித்து வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
"திருமணமான ஒருவர், வயது வந்த ஒருவருடன் அவரது சம்மதத்துடன் லிவ்-இன் உறவில் இருக்கும்போது, அவர் மீது எந்தவொரு குற்றத்திற்காகவும் வழக்குத் தொடர முடியாது. அறநெறியும் சட்டமும் தனித்தனியாகப் பிரிக்கப்பட வேண்டும். சட்டத்தின் கீழ் எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படாத பட்சத்தில், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு சமூகக் கருத்துக்களும் அறநெறியும் வழிகாட்டாது," என்று நீதிபதி அமர்வு கூறியது. மேலும், அப்பெண் தான் வயது வந்தவர் என்றும், லிவ்-இன் உறவில் அந்த ஆணுடன் தன் சுயவிருப்பத்தின் பேரில் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் கூறி, ஷாஜஹான்பூர் காவல் கண்காணிப்பாளரிடம் அப்பெண் ஏற்கனவே ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளார் என்பதை நீதிமன்றம் குறிப்பிட்டது. அப்பெண்ணுடைய பெற்றோரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் அவர்களை எதிர்ப்பதாகவும், அப்பெண்னுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் அவர்கள் இருவரும் கூறியுள்ளனர்.
இது குறித்து நீதிமன்றம், "காவல்துறை கண்காணிப்பாளரால் இந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. ஒன்றாக வாழும் இரண்டு பெரியவர்களைப் பாதுகாப்பது காவல்துறையின் கடமையாகும். சக்தி வாஹினி எதிர் இந்திய யூனியன் மற்றும் பிறர், (2018) 7 SCC 192 வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபடி, இது தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளருக்கு குறிப்பிட்ட கடமைகள் உள்ளன. இந்த மனு, இரு மனுதாரர்களின் கூட்டுப் பிரமாணப் பத்திரத்தால் ஆதரிக்கப்படுகிறது," என்று நீதிமன்றம் கூறியது என்று 'பார் அண்ட் பென்ச்' செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தம்பதியினருக்கு எந்தத் தீங்கும் விளைவிப்பதைத் நீதிமன்றம் தடுத்துள்ளது. அவர்கள் தம்பதியினரின் வீட்டிற்குள் நுழைவதற்கும், அவர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தம்பதியரின் பாதுகாப்புக்கு ஷாஜஹான்பூர் காவல் கண்காணிப்பாளரே தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.