``அம்மாவின் அழகான வாழ்க்கை ஒரே நாளில் காணாமல் போனது" - எமோஷனலான ராகுல் காந்தி.. சோனியாவுக்கு 4 முறை புற்றுநோய் வந்ததா? 
இந்தியா

``அம்மாவின் அழகான வாழ்க்கை ஒரே நாளில் காணாமல் போனது" - எமோஷனலான ராகுல் காந்தி.. சோனியாவுக்கு 4 முறை புற்றுநோய் வந்ததா?

"திடீரென எங்கள் நங்கூரமாக இருந்தவர், நாட்டின் நங்கூரமாக இருந்தவர் சுட்டுக்கொல்லப்பட்டார். எங்களின் மிகப் பெரிய நம்பிக்கையாக இருந்தவர் துண்டு துண்டுகளாக சிதறினார்." - ராகுல் காந்தி

Antony Ajay R

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூலான பிளாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இதில் பேசிய ராகுல் காந்தி பல நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும் வாசிக்க: "நானும் என் காதலியும் அதே உணவகத்துக்கு சென்றோம்" - அம்மா முன்னால் ராகுல் காந்தி பகிர்ந்த பர்சனல் நோட்!

அப்போது அவர் சோனியா காந்தி கடந்து வந்த கடினமான பாதையைப் பற்றி பேசினார்.

அவர் , "எங்கள் அம்மாவும் அப்பாவும் நிறைய விவாதிப்பார்கள். ஆனால் ஒரே ஒருமுறை தான் சண்டையிட்டார்கள். அப்போது அப்பா அமரீந்தர் சிங் ஜியிடம் பேசிக்கொண்டிருந்தார். அம்மா அப்பாவிடம் ஏதோ சொல்ல இரண்டு மூன்று முறை முயன்று கொண்டிருந்தார். அதுதான் அந்த சண்டை. மற்றபடி அவர்கள் சண்டையிட்டதே இல்லை.

உணவருந்தும்போது, பெரும்பாலும் என் அம்மா அப்பாவின் மடியில் அமர்ந்திருப்பார். நாங்கள் அதைப் பார்த்துதான் வளர்ந்தோம். ஆனால் மற்றவர்கள் வீட்டில் அப்படி இல்லை. நான் என நண்பனின் வீட்டுக்கு சென்றபோது என்ன உங்கள் அம்மா அப்பாவின் மடியில் அமருவது இல்லையா என கேட்பேன். அப்படித்தான் நாங்கள் வளர்ந்தோம்.

திடீரென எங்கள் நங்கூரமாக இருந்தவர், நாட்டின் நங்கூரமாக இருந்தவர் சுட்டுக்கொல்லப்பட்டார். எங்களின் மிகப் பெரிய நம்பிக்கையாக இருந்தவர் துண்டு துண்டுகளாக சிதறினார்.

என் அம்மாவுக்கு நல்ல நினைவாற்றல் உண்டு. ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார். அவர் எதையுமே மறப்பது இல்லை, ஒன்றைத் தவிர, என் அப்பா இறந்தபோது என்ன நடந்தது எனக் கேட்டால் அவருக்கு எதுவுமே நினைவில் இருக்காது.

நீங்கள் புத்தகத்தில் படித்தது அம்மாவும் என் தங்கையும் இணைந்து நினைவுகளை ஒட்டியது.

அவர்களின் அழகான வாழ்க்கை, அவர்கள் கொண்டிருந்த அழகான அன்பு ஒரே நாளில் இல்லாமல் போனது. அது அவருக்கு மிகவும் மோசமான காலம்.

பிளாங்கிங் என்பது, என் அம்மா என் அப்பாவுக்கு உரியவர், என் அப்பா என் அம்மாவுக்கு உரியவர் என்பதுதான். என் தந்தை மறைவுக்கு பிறகு அவர் மற்றொரு பயணத்தை தொடங்கினார். அவர் வேறொரு அம்மாவாக மாறினார்.

வேடிக்கையான அம்மா, சிரித்துக்கொண்டிருக்கும் அம்மா மறைந்துவிட்டார். புதிய அம்மா வந்தார். ஏனென்றால் அவர் வாழ்க்கையின் சுடர் அணைந்துவிட்டது.

எல்லோரும் என் அம்மா ஒரு இன்ட்ரோவர்ட் என நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் அவர் முழுமையான எக்ஸ்ட்ரோவர்ட். அவர் யாரிடம் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசும் நபராக இருந்தார். என் பாட்டி இறக்கும் வரை. என் அப்பா இறந்த பிறகு அது இன்னும் மோசமானது. அப்படியே அவர் தனக்குள் மூழ்கிவிட்டார். நான் அதைப் பார்த்திருக்கிறேன்.

திடீரென ஒரு கதவு திறந்தது. அதுதான் இந்திய மக்கள். மில்லியன் கணக்கான மக்கள் நீ எங்களுக்கு உரியவர் என்று சொன்னார்கள்.

இந்த புத்தகத்தில் எனக்குப் பிடித்தது அதுதான். நீங்கள் ஒரு முழுமையான வட்டத்தை நிறைவு செய்வீர்கள்.

புத்தகத்தில் அவர் 2,3 முறை புற்றுநோய் வந்து மீண்டதாக எழுதியிருக்கிறார். ஆனால் அவர் 4 முறை புற்றுநோய் வந்து மீண்டிருக்கிறார். எல்லாவற்றையும் குறைவாக காட்டிக்கொள்வார்.

அவர் ஒருமுறை கூட அதற்காக பயந்து நான் பார்த்தது இல்லை." என்றார். பின்னால் சோனியா காந்தியின் பக்கம் திரும்பினார். "அம்மா அப்பா உங்களை காதலித்தார். ஆனால் இப்போது அவர் உங்களைக் குறித்து எவ்வளவு பெருமைபடுவார் என்பதை என்னால் சொல்லவே முடியாது" என உரையை முடித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.