வேதாந்தாவால் பாதிக்கப்படும் மக்கள்  
இந்தியா

மக்களின் உயிரைக் குடிக்கும் வேதாந்தா! மக்கள் அடிப்படை உரிமைக்கே போராடவேண்டிய நிலையா?

வேதாந்தா நிறுவனம் மக்களின் வளங்களையும், நிலங்களையும், கொள்ளையடிப்பதாகவும், சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் கூறி நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

Vinvizhi Leninton

இந்தியாவில் உள்ள பலரும் வேதாந்தா குழுமத்தின் பெயரினை கட்டாயம் கேட்டிருப்போம். இந்தியாவில் உள்ள பல வளங்கள் உள்ள கிராமங்களில் இந்த நிறுவனம் கனிமங்கள் எடுப்பதாகவும், அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதாகவும் கூறி தங்கள் நிறுவனத்தினை தொடங்குவர். ஆனால், உண்மையில் அதைத்தான் இந்த நிறுவனம் செய்ததா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

யார் இந்த வேதாந்தா?: வேதாந்தா ரிசோர்சஸ் என்பது லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பன்னாட்டுச் சுரங்க நிறுவனமாகும். வேதாந்தா லிமிடெட் உலகின் முன்னணி உலோகங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, முக்கிய கனிமங்கள், மின்சாரம் மற்றும் தொழில்நுட்ப உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால். அடுத்த பத்தாண்டுகளில், இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக உருவெடுப்பதும், இயற்கை வளங்களும் மனித வளங்களுமே இந்நிறுவனத்தின் அடித்தளமாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனம் மக்களின் வளங்களை கொள்ளையடிப்பதாகவும், சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் கூறி நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

போராட்டக்களத்தில் மக்கள்: ஒடிசாவில், வேதாந்தா நிறுவனம் பாக்சைட் ஆலையை அமைப்பதாகக்கூறி அப்பகுதி மக்களிடையே நிலத்தை கையகப்படுத்தியது. குழந்தைகளுக்குக் கல்வி, ஆலையில் வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவமனை கட்டுதல் ஆகியவை அந்த வாக்குறுதிகளில் அடங்கும். இருப்பினும், அங்கு வேலை பெற்ற ஒரு சிலரும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நில ஆக்கிரமிப்புகளை எதிர்த்து டோங்ரியா கோந்த் பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேதாந்தாவின் 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான தனது பாக்சைட் சுரங்கத் திட்டம் குறித்து முடிவெடுக்குமாறு , 2013 ஏப்ரல் 18 அன்று உச்ச நீதிமன்றம் அப்பகுதி கிராம சபைகளுக்கு உத்தரவிட்டது. ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 19 வரை நடைபெற்ற தொடர் கூட்டங்களில், மக்கள் அந்தத் திட்டத்தை ஒருமனதாக நிராகரித்து, தங்களின் மத மற்றும் கலாச்சார உரிமைகளை நிலைநாட்டினர். ஆனால், அப்பகுதியில் இருந்து வேதாந்தா வெளியேறவில்லை. இதனை தொடர்ந்து ஒடிசா தொழில்துறை பாதுகாப்புப் படையினர் (OISF) போராட்டக்காரர்கள் மீது நடத்திய தடியடியில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து லஞ்சிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடந்த வன்முறையில், OISF படை வீரரான சுஜித் மின்ஸ் என்பவரும் உயிரிழந்தார். இந்த தடியடியில் டானி பத்ரா என்பவரும் மரணமடைந்தார். தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் மீது காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று 'தி வயர்' செய்தி வெளியிட்டது. அனைத்து கிராமங்களுக்கும் உயிர்நாடியாக விளங்கும் பன்சதாரா ஆற்றில், லஞ்சிகர் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கழிவுகள்(வேதாந்தா அலுமினியம் நிறுவனம்), பல நோய்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் கூட காரணமாக அமைந்துள்ளன. வளர்ந்து வரும் செம்மண் குன்றுகளும், அந்த மண்ணில் ஏற்பட்ட உடைப்புகளால் உருவாகும் சிறு குளங்களும் அப்பகுதி மக்களுக்கு மரணப் பொறிகளாகத் திகழ்கின்றன. இதனையடுத்து ஒடிசா சுரங்கக் கழகம், கிராம சபைகளின் 2013ம் ஆண்டு தீர்மானங்களை எதிர்த்து மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் 2016ம் ஆண்டு மே 6ம் தேதி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. நியமகிரி மக்கள் அதிகாரத்தை எதிர்த்து வெற்றி பெற்றனர்.

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்து மக்கள் 100 நாட்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தினர். அப்பகுதியில் உள்ள தாமிர உருக்கு ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் அப்பகுதி மக்கள் சுவாச கோளாறு, தூய்மையான காற்று மற்றும் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த அவதிக்குள்ளானார். இதனை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்க பேரணியாக சென்றபோது காவல்துறையால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அடிப்படைஉரிமைக்காக போராடிய மக்கள் பலரின் மீதும் பொய் வழக்குகள் பல போடப்பட்டன. இதனையடுத்து, 2018 மே 23 அன்று, துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விசாரணை ஆணைக்குழுவிற்கு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமை தாங்க நியமிக்கப்பட்டார். அந்த ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை 2022 மே 18 அன்று தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. அதன்பின்னர் 1974 ஆம் ஆண்டு நீர் சட்டத்தின் பிரிவு 18(1)(b) இன் கீழ், 28 மே 2018 அன்று தமிழ்நாடு அரசால் அந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது.

2023ல் ஏலத்தின் மூலம் ஒடிசாவில் சுரங்கம் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து, பாக்சைட் திட்டத்திற்கு எதிராக ஒடிசாவில் பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள காஷிப்பூர் அருகே, பழங்குடியின கிராமவாசிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே 2026, ஏப்ரல் 7ல் நடந்த மோதலில், குறைந்தது 40 காவல்துறையினரும் 25 கிராமவாசிகளும் காயமடைந்தனர். சிஜிமாலி பாக்சைட் சுரங்கத்திற்குச் செல்லும் 3 கிலோமீட்டர் நீள அணுகுசாலை அமைக்கும் பணியே வன்முறை தொடங்க காரணமாக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சத்தீஸ்கரில் சக்தி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக, அந்நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் மற்றும் பிறர் மீது சத்தீஸ்கர் காவல்துறை வியாழன் (18ம் தேதி) முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். சிங்கிதரை கிராமத்தில் உள்ள வேதாந்தா ஆலையில், கொதிகலனில் இருந்து டர்பைனுக்கு உயர் அழுத்த நீராவியைக் கொண்டு சென்ற எஃகு குழாய் வெடித்ததில், ஏப்ரல் 14 அன்று பல தொழிலாளர்கள் பலத்த தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர். இது தற்போது வேதாந்தாவினால் நடந்த விபத்து ஆகும்.

இந்தியாவின் கனிவளங்கள் உள்ள அனைத்து இடங்களிலும், நிலத்தின் இரத்தத்தினை உறுஞ்சுவது போன்று மலைகளை வெட்டி, சுரங்கங்கள் அமைத்து, காடுகளை அழித்து இலாபம் பார்க்கிறது இந்த நிறுவனம். நிலத்தின் இரத்தத்தினை மட்டுமின்றி மனிதர்களின் உயிர்களையும் விலையாக கேட்கிறது இந்த வேதாந்தா நிறுவனம். இந்த நிறுவனத்தின் கைகளில் இருந்து தங்களது வாழ்விடங்களை மீட்க இன்னும் எத்தனை உயிர்களை இந்த உழைக்கும் மக்கள் கொடுக்கப் போகிறார்கள் என்பது காலம் நெடுகிலும் நம்மை நோக்கி கேட்கப்படும் ஒரு கேள்வி குறியாகத்தான் இருக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.