டெல்லி ஜிம்கானா கிளப் விவகாரத்தைத் தொடர்ந்து, மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் சொகுசான 'ப்ரீச் கேண்டி கிளப்' தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. பாரம்பரியம் என்ற பெயரில் உயர் அடுக்கு வர்க்க ஆதிக்கமும், காலனித்துவ காலத்து அடிமைத்தனமும், இந்தியர்களைப் புறக்கணிக்கும் போக்கும் இந்த கிளப்பில் இன்னும் தொடர்வதாகப் பொதுமக்கள் மத்தியில் கடுமையான விவாதம் வெடித்துள்ளது.
மும்பையின் பிரீமியம் பகுதியான மலபார் ஹில்ஸ் அருகே அமைந்துள்ள இந்த கிளப், உலகத்தரம் வாய்ந்த உப்புக் நீர் நீச்சல் குளங்கள், அழகிய புல்வெளிகள், டென்னிஸ் மைதானங்கள் மற்றும் அரபிக்கடலை நோக்கிய உயர்தர உணவகங்களைக் கொண்டுள்ளதால், மும்பை விஐபிக்கள் பலரும் இதில் உறுப்பினராக ஏங்குகின்றனர். ஆனால், இந்த கிளப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெளிக்கள நீச்சல் குளம், பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியாவின் வரைபட வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது தான் இதில் உள்ள மிகப்பெரிய முரண்பாடு. இந்த கிளப்பின் நிர்வாகிகளிடம் இன்னும் இருக்கும் காலனித்துவ மனநிலையை இந்த நீச்சல் குளம் கச்சிதமாக வெளிப்படுத்துவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக, இந்த கிளப்பிற்குள் இந்தியர்கள் நுழைவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த அளவிற்கு இனப்பாகுபாடு மிகக் கடுமையாகப் பின்பற்றப்பட்டது. எந்தளவிற்கு என்றால், அதிக வெயில் காரணமாகத் தோல் நிறம் சற்று கருமையாக மாறிய ஐரோப்பியர்களைக் கூட வாசலிலேயே நிறுத்தி, அவர்கள் தங்களது பாரம்பரியத்தை நிரூபிக்க பாஸ்போர்ட்டைக் காட்ட வேண்டும் என்று காவலாளிகள் வற்புறுத்திய சம்பவங்களும் நடந்துள்ளன. 1947-ஆம் ஆண்டு இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகும் கூட, இந்த கிளப் தங்களது "வெள்ளையர்களுக்கு மட்டுமே" என்ற கொள்கையைத் தீவிரமாகப் பாதுகாத்து வந்தது. பின்னர் 1960-களில், அமெரிக்காவின் கருப்பின தூதர் ஒருவரை இந்த கிளப்பிற்குள் அனுமதிக்க மறுத்ததால் சர்வதேச அளவில் ஏற்பட்ட அசிங்கத்தைத் தொடர்ந்து, வேறு வழியின்றி ஐரோப்பியர் அல்லாதவர்களுக்கும் இந்த கிளப் தனது கதவுகளைத் திறந்தது.
ஆனாலும், இந்தியர்களுக்கு உண்மையான சமத்துவம் அங்கு வழங்கப்படவில்லை. 1967-ஆம் ஆண்டு சிட்டி சிவில் கோர்ட்டால் அங்கீகரிக்கப்பட்ட இந்த கிளப்பின் விதிகளின்படி, உறுப்பினர்களில் கடுமையான பாகுபாடு காட்டப்பட்டது. இந்தியர்கள் இதில் சாதாரண உறுப்பினர்களாக மட்டுமே சேர முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. அதே நேரத்தில், கிளப்பின் மிக உயரிய நிர்வாக அதிகாரம் அனைத்தும் 'ட்ரஸ்ட் மெம்பர்கள்' (அறக்கட்டளை உறுப்பினர்கள்) கைகளில் மட்டுமே குவிக்கப்பட்டிருந்தது. இன்றுவரை அமலில் உள்ள அந்த விதியின்படி, இந்த அறக்கட்டளை உறுப்பினர் பதவி என்பது 'மும்பையில் வாழும் ஐரோப்பியர்களுக்கு' மட்டுமே பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஐரோப்பிய உறுப்பினர்களுக்கு மட்டுமே கிளப்பில் வாக்களிக்கும் உரிமையும், நிர்வாகக் குழுத் தேர்தலில் போட்டியிடும் அதிகாரமும், கிளப்பின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் கட்டுப்படுத்தும் உரிமையும் உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கடந்த காலங்களில் எழுதிய ஒரு கட்டுரை தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி, இந்த சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளது. அந்தப் பதிவில், 1960-களின் நடுப்பகுதியில் தனது பள்ளிப் பருவத்தில் நேர்ந்த ஒரு அவமானகரமான சம்பவத்தை சசி தரூர் நினைவு கூர்ந்துள்ளார். தனது அமெரிக்கப் பள்ளித் தோழன் ஒருவன், இந்த 'வெள்ளையர்களுக்கு மட்டுமே' என்ற விதியை மீறி, இந்திய நண்பனான என்னையும் அந்த கிளப்பிற்குள் அழைத்துச் செல்ல முயன்றபோது, நான் ப்ரீச் கேண்டி கிளப்பிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என்றும், இந்தியா சுதந்திரம் அடைந்து 20 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுதான் இந்தியாவின் நிலைமையாக இருந்தது என்றும் சசி தரூர் ஆதங்கத்துடன் எழுதியுள்ளார்.
இது குறித்துச் சமூக வலைதளங்களில் மேலும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள சசி தரூர், அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு நிலத்தில் செயல்படும் ஒரு கிளப்பில், இத்தகைய இனவெறி விதி இன்னும் நீடிப்பதற்கு எந்தவொரு நியாயமான காரணங்களும் இருக்க முடியாது என்றும், கிளப்பின் சட்டவிதிகள் அப்படி இருக்கிறது என்று கூறுவது முற்றிலும் முட்டாள்தனமானது என்றும், நம் நாட்டின் அரசியல் சாசனத்தை விட அந்த கிளப்பின் விதி பெரியதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவிலும், ஒரு கிளப் எப்படி சட்டப்பூர்வமாக 'ஐரோப்பியர்களுக்கு மட்டுமே' என்ற நிர்வாக அதிகாரத்தை வைத்திருக்க முடியும் என்ற பெரிய கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.
இதற்கிடையே, இந்த விவகாரத்திற்கு இணையத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவும் இந்த விமர்சனத்தில் இணைந்து கொண்டு, எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்து மும்பை எப்போதும் பெருமையாகப் பேசும், ஆனால் சில தசாப்தங்களுக்கு முன்பு வரை ப்ரீச் கேண்டி கிளப்பில் இந்தியர்களுக்கு உறுப்பினர் உரிமையே இல்லை என்றும், அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் இன்றும் கூட எந்தவொரு இந்தியரும் அதன் அறக்கட்டளைக் குழுவில் இருக்க முடியாது, மும்பையில் வாழும் ஒரு ஐரோப்பியருக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என்றும், இதில் உள்ள கொடுமை என்னவென்றால் இந்த கிளப் அமைந்துள்ள நிலம் மகாராஷ்டிரா அரசாங்கத்திற்குச் சொந்தமானது என்றும் அவர் சாடியுள்ளார்.
இது குறித்துப் ப்ரீச் கேண்டி கிளப்பின் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்தியக் குடிமக்கள் இதில் சாதாரண உறுப்பினர்களாக இருக்க முடியும் என்றாலும், மிக உயரிய 'அறக்கட்டளை' உறுப்பினர் பதவிகள் அவர்களுக்கு வழங்கப்படாது என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், தற்போது நிரந்தர உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்காலிக உறுப்பினர்களாகச் சேர விரும்பும் வாய்ப்புகளும் ஐரோப்பிய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும், இந்திய விண்ணப்பதாரர்களுக்கு இந்த வழியும் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது என்றும் கிளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த ப்ரீச் கேண்டி கிளப், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் உச்சக்கட்டமாக இருந்த 1878-ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. பிரிட்டிஷ் அதிகாரிகள் கடலில் பாதுகாப்பாகக் குளிப்பதற்காக ஒரு இடத்தை தேடியதன் விளைவாகவே இந்த நீச்சல் குளம் உருவானது. அப்போது சூயஸ் கால்வாய் 1869-இல் திறக்கப்படுவதற்கு முன்பு, இந்தியாவிற்கு வரும் பிரிட்டிஷ் பயணிகள் ஏமன் நாட்டில் உள்ள ஏடன் துறைமுக நகரத்தில் தங்கிச் செல்வது வழக்கம். அவர்களுக்காக மும்பை ஐரோப்பியர்கள் அங்கு ஒரு விடுதியை நடத்தியுள்ளனர். ஆனால் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட பிறகு அந்த விடுதி தேவையில்லாமல் போனதால், அதை 7,300 ரூபாய்க்கு விற்று, அந்தப் பணத்தைக் கொண்டு மும்பையில் இந்த புதிய நீச்சல் குளத்தைக் கட்டியுள்ளனர். பின்னர், பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கிய ஐந்து ஏக்கர் நிலம் மற்றும் சில அதிகாரிகளின் நிதியுதவியுடன், இது 'ஐரோப்பிய சமூகத்தின் நலனுக்கான பொதுப் பயன்பாட்டு இடமாக' மாற்றப்பட்டது.
பல தசாப்தங்களாக, இந்த கிளப் மும்பையின் பாரம்பரிய கோடீஸ்வரர்கள், தூதர்கள் மற்றும் தொழிலதிபர்களின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. இந்த கிளப்பின் நிதிப் பரிவர்த்தனைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால், துல்லியமான கட்டண விபரங்கள் கிடைப்பதில்லை. எனினும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கசிந்த தகவல்களின்படி, இதன் ஆரம்பக்கால உறுப்பினர் கட்டணம் மட்டும் சுமார் 1.12 கோடி ரூபாய் என்றும், கார்ப்பரேட் பேக்கேஜ்கள் 30 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், பணம் மட்டுமே இந்த கிளப்பிற்குள் நுழைவதற்கான தகுதி அல்ல என்றும், பாரம்பரிய குடும்பப் பின்னணியும், ஏற்கனவே உறுப்பினர்களாக இருக்கும் விஐபிக்களின் பரிந்துரையும் தான் முக்கியம் என்றும் உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.
இந்த கிளப்பின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் கடுமையான உள்நாட்டுச் சட்டப் போராட்டங்களும் நடந்து வருகின்றன. கிளப்பின் சொத்துக்களைக் கைப்பற்ற சில இந்தியக் குழு உறுப்பினர்கள் முயல்வதாக ஐரோப்பிய உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். இந்த மோதல் பல ஆண்டுகள் நீதிமன்ற வழக்குகளாகத் தொடர்ந்தது. 2013-இல் ஐரோப்பிய உறுப்பினர்கள் பழைய குழுவை நீக்கிவிட்டு புதிய நிர்வாகத்தை அமைத்தனர். இறுதியாக 2015-ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம் இந்த கிளப்பின் ஐரோப்பியர்களுக்கு மட்டுமேயான நிர்வாக அமைப்பை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது. இதற்கு எதிராகத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளும் கடந்த 2022-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த சர்ச்சை என்பது வெறும் ஒரு தனியார் கிளப் தொடர்பானது மட்டுமல்ல, சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், அரசாங்க நிலத்தில் இயங்கும் ஒரு அமைப்பில் இந்தியர்களை விட ஐரோப்பியர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் இத்தகைய காலனித்துவ ஆதிக்க விதிகள் இன்னும் நீடிப்பது தான் ஒட்டுமொத்த இந்தியர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்