தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் அரசியல் கட்சிகள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன. வரும் நவம்பர் 30-ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான மூன்று மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதனுடன், ஒவ்வொரு மாநிலத்திற்குமான மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை அதிகரிக்கும் முன்மொழிவும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று காக்ரோச் ஜனதா கட்சி (CJP) வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை எதிர்க்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த மசோதா நிறைவேறுவதற்கு எந்தவொரு கட்சியோ அல்லது அரசியல்வாதியோ ஆதரவளித்தால், அது மக்களின் ஆணைக்குச் செய்யப்படும் மாபெரும் துரோகமாக அமையும் என்றும் எச்சரித்துள்ளது.
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் ஆளும் கட்சிக்கு சாதகமாக மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைக்கும் 'ஜெர்ரிமாண்டரிங்' நடைமுறைக்கு இந்த முன்மொழிவு வழிவகுக்கக்கூடும் என்றும் CJP குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் தேர்தல் வரைபடமே ஆளும் கட்சிக்கு சாதகமாக மாற்றியமைக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், இதற்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, ஆதரவு கொடுக்க NCP-SP கட்சி (சரத் பவார் பிரிவு) ஆதரவளிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு சிவசேனா (UBT) நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவாரை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மறுபுறம், தமிழகத்தில் திமுக, தொகுதி மறுவரையறை மசோதாவின் புதிய வரைவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, புதிய வரைவு மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக திமுக தெரிவித்திருந்தது. மேலும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு பாரத ராஷ்ட்ரிய சமிதி (BRS) கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. தெலங்கானா மற்றும் தென் மாநிலங்களுக்கு தற்போது உள்ள பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்பதுதான் என்றும் எங்கள் நிலைப்பாடு. அனைத்து மாநிலங்களுக்கும் 50% இடங்கள் அதிகரிப்பால் விகிதாச்சாரம் பாதிக்கப்படாது. மாநிலங்களவையில் உள்ள 3 எம்.பி.க்களும் மசோதாவை ஆதரிப்பார்கள் என்று அக்கட்சியின் தலைவர் கே.டி.ராமாராவ் தெரிவித்துள்ளார். இதற்காக எதிர்ப்புகளையும் இந்த கட்சிகள் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை விரைவாக அமல்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும், தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிப்பதால் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக, இந்த விவகாரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்து வருவதால், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.