

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய தொகுதி மறுசீரமைப்பு மசோதா (Delimitation Bill), மக்களவையின் மொத்த இடங்களை 543-லிருந்து 816 ஆக உயர்த்த வழிவகை செய்கிறது. 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவ சதவீதம் 2051 வரை மாற்றப்படாது என்றும், அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக 50% இடங்கள் உயர்த்தப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டின் MP இடங்கள் 39-லிருந்து 59 ஆக உயரப்போவது ஒரு பெரிய வெற்றியாக தோன்றலாம். ஆனால், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு விதிகளையும், அதிகாரச் சமநிலையையும் ஆழமாக ஆராய்ந்தால், தென் மாநிலங்களுக்கு எதிராக இருப்பது போல இருக்கும். பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேறுவதை விட, மாநில உரிமைகளுக்கு எதிரான ஒரு சட்டத்தை தடுத்து நிறுத்துவது மிக முக்கியமானது. உதாரணமாக இந்த தொகுதி மறுவரையறை மசோதாவே சொல்லலாம். ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா, தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் நிறைவேறாமல் போனது. இது போன்ற ஒரு மசோதவை தடுக்க மூன்றில் ஒரு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு நிலையில் இருந்தால் மட்டுமே அதை நடைமுறைப்படுத்தாமல் தடுக்க முடியும்.
ஒரு கணக்கின் படி பார்ப்போமேயானால், இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்ந்தால், கூட்டாட்சித் தத்துவத்தையோ அல்லது அரசியலமைப்பையோ மாற்றும் ஒரு சட்டத் திருத்த மசோதாவை (Constitutional Amendment Bill) தடுக்க, மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான அதாவது 273 MP-க்களின் எதிர்ப்பு வாக்குகள் அவசியம்.
இப்போது தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த பலத்தைக் கணக்கிட்டுப் பார்ப்போம். புதிய 50% உயர்வின்படி தமிழ்நாடு (59), கர்நாடகா (42), ஆந்திரப் பிரதேசம் (38), கேரளா (30), தெலங்கானா (26) ஆகிய ஐந்து தென் மாநிலங்களும் கட்சி பேதமின்றி முழுமையாக ஒன்றிணைந்தால் கூட, அவற்றின் மொத்த பலம் சுமார் 195 MP-க்கள் மட்டுமே.
அதாவது, தென்னிந்தியாவின் நலனுக்கு எதிரான ஒரு அரசியலமைப்புத் திருத்தத்தைத் தடுக்கத் தேவையான 273 இடங்களில், 195 இடங்கள் மட்டுமே தென் மாநிலங்களிடம் இருக்கும். மீதமுள்ள 78 MP-க்களின் ஆதரவுக்கு வட இந்திய மாநிலங்களின் தயவை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம் உருவாகும். சதவீதம் மாறவில்லை என்றாலும், தனித்து நின்று ஒரு மசோதாவை எதிர்க்கும் வலிமை தென்னிந்தியாவுக்கு இல்லாமல் போகிறது என்பதே நிதர்சனம்.
சதவீதக் கணக்குகள் காகிதத்தில் சமமாகத் தெரிந்தாலும், உண்மையான இடங்களின் எண்ணிக்கை வித்தியாசம் (Absolute Seat Gap) மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. முன்பு 543 இடங்கள் இருந்தபோது, உத்தரப் பிரதேசத்திற்கும் (80) தமிழ்நாட்டிற்கும் (39) இடையிலான வித்தியாசம் 41 இடங்களாக இருந்தது. ஆனால் 816 இடங்களாக உயரும்போது, உத்தரப் பிரதேசம் 120 இடங்களையும், தமிழ்நாடு 59 இடங்களையும் பெறும். இப்போது இரு மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளி 61 இடங்களாக அதிகரிக்கும்.
வட இந்தியாவின் பெரிய மாநிலங்கள் சில ஒன்றிணைந்தாலே, அவை ஆட்சி அமைக்கத் தேவையான 409 இடங்களை எளிதில் எட்டிவிட முடியும். இதனால், தேசியக் கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைக்கவும், தங்களுக்கு வேண்டிய மசோதாக்களை நிறைவேற்றவும் தென் மாநிலங்களின் ஆதரவு அவசியமற்றதாக மாறும் சூழல் உருவாகலாம். முன்பு 30 அல்லது 40 MP-க்களை வைத்திருந்த மாநிலக் கட்சிகள் மத்திய அரசின் கொள்கைகளைத் தீர்மானிக்கும் 'கிங் மேக்கர்களாக' இருந்தன; ஆனால் 816 பேர் கொண்ட பிரம்மாண்ட அவையில், 59 இடங்கள் என்பது ஒரு பெரிய கடலில் கரைந்த துளியாக மாறி, மாநிலக் கட்சிகளின் பேரம் பேசும் சக்தியைக் குறைத்துவிடும்.
இந்தியக் கூட்டாட்சி முறையில் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கேடயமாக மாநிலங்களவை (Rajya Sabha) செயல்படுகிறது. ஆனால், மக்களவை இடங்கள் 816 ஆக உயர்த்தப்படும் நிலையில், மாநிலங்களவையின் 245 இடங்கள் உயர்த்தப்படவில்லை. ஏதேனும் ஒரு முக்கிய மசோதாவில் இரு அவைகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு, அரசியலமைப்பின்படி கூட்டுக் கூட்டம் (Joint Sitting) கூட்டப்பட்டால், 816 பலம் கொண்ட மக்களவையின் கைகளே முழுமையாக ஓங்கும். இது மாநிலங்களின் குரலைப் பிரதிபலிக்கும் மாநிலங்களவையை வெறும் அலங்கார அவையாக மாற்றிவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
தற்போதைய மசோதா 1971 மக்கள் தொகை விகிதத்தை 2051 வரை மட்டுமே பாதுகாக்கிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறிய தென் மாநிலங்களுக்கு இது ஒரு தற்காலிக ஆறுதல் மட்டுமே. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு நடந்தால், ஏற்கனவே விரிவுபடுத்தப்பட்ட 816 இடங்கள் கொண்ட கட்டமைப்பில் தென் மாநிலங்களின் பங்கு மேலும் சுருங்கி, வட மாநிலங்களின் ஆதிக்கம் நிரந்தரமாகிவிடும்.
எண்ணிக்கையில் 39 என்பது 59 ஆக உயர்ந்திருப்பது பார்க்கப் பெரிதாகத் தெரிந்தாலும், அதிகாரப் பகிர்வில் தென்னிந்தியாவுக்கு இது ஒரு பலம்வாய்ந்த வாய்ப்பு போலத்தான். ஒரு மசோதாவை ஆதரித்து நிறைவேற்றவும் முடியாமல், தனித்து நின்று தடுத்து நிறுத்தவும் முடியாமல், பாராளுமன்றத்தில் வெறும் பார்வையாளர்களாக மாறும் சூழலை இந்த 816 இடங்கள் கொண்ட புதிய மாற்றம் உருவாக்குகிறதா என்ற கேள்வியை ஒவ்வொரு தென்னிந்திய வாக்காளரும் எழுப்ப வேண்டிய தருணம் இது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.