indian railways new rule  
இந்தியா

இனிமே ‘Waiting List’ -ல இருந்தா இப்படிதா போகணும்..! இந்திய ரயில்வேயின் திடீர் அறிவிப்பு! இன்று முதல் புதிய கட்டுப்பாடு அமல்!

உறுதி செய்யப்பட்ட டிக்கெட் இல்லாத பயணிகள் இனி பொது வகுப்பு (General/Unreserved) பெட்டிகளில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்....

மாலை முரசு செய்தி குழு

புதுடெல்லி: இந்திய ரயில்வே தனது பயணிகளின் வசதிக்காகத் தொடர்ந்து பல்வேறு புதிய விதிமுறைகளையும் மாற்றங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, மே 1, 2025 முதல் நாடு முழுவதும் ஒரு முக்கிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது. இனிமேல், காத்திருப்புப் பட்டியல் (Waiting List) டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் ஸ்லீப்பர் (Sleeper) மற்றும் ஏசி (AC) பெட்டிகளில் பயணம் செய்ய முடியாது என்பதுதான் அந்த அதிரடி அறிவிப்பு.

இதுகுறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள தகவலின்படி, உறுதி செய்யப்பட்ட டிக்கெட் இல்லாத பயணிகள் இனி பொது வகுப்பு (General/Unreserved) பெட்டிகளில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஒருவேளை யாரேனும் காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுடன் ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டியில் பயணிப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். டிக்கெட் பரிசோதகர் (Ticket Examiner - TTE) அபராதம் விதிக்கவோ அல்லது அவர்களை உடனடியாக பொதுப் பெட்டிக்கு மாற்றவோ அதிகாரம் பெற்றுள்ளார். மே 1-ம் தேதி முதல் இந்த விதிமுறை தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

முன்பு, ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் உறுதி செய்யப்படாவிட்டால், அது தானாகவே ரத்து செய்யப்பட்டுவிடும். இருப்பினும், பலர் டிக்கெட் கவுண்டர்களில் காத்திருந்து காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகளைப் பெற்று, ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் நிலை இருந்தது. இது உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. சிலர் தங்களது இருக்கைகளில் காத்திருப்புப் பட்டியல் பயணிகள் அமர முயற்சிப்பதால், அமைதியாகப் பயணிக்க முடியாத சூழல் நிலவியது.

இந்த அசௌகரியங்களைத் தவிர்க்கவும், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் எந்தவித இடையூறும் இன்றி பயணிக்கவும் தான் இந்த புதிய கடுமையான விதிமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் மூலம், உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் உறுதி செய்யப்பட்ட பயணிகளுக்கே கிடைக்கும் என்றும், காத்திருப்புப் பட்டியல் பயணிகள் பொதுப் பெட்டிகளில் மட்டுமே பயணிப்பதை உறுதி செய்வதன் மூலம் நெரிசலைக் குறைக்க முடியும் என்றும் ரயில்வே நம்புகிறது.

எனவே, இனி ரயில்களில் பயணம் செய்யத் திட்டமிடும் பயணிகள், குறிப்பாக ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணிக்க விரும்புவோர், தங்களது டிக்கெட் உறுதி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுடன் ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டியில் பயணிப்பது சட்டப்படி குற்றமாகும் என்பதை பயணிகள் நினைவில் கொள்ள வேண்டும்.

மும்பை-மன்மாட் பஞ்சவடி எக்ஸ்பிரஸில் முதல் முறையாக ஏடிஎம் வசதி!

இதற்கிடையில், இந்திய ரயில்வே மற்றொரு புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளது. முதன்முறையாக, மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் அருகே இருக்கும் மன்மாட் முதல் மும்பை வரை இயக்கப்படும் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் (Panchavati Express) ரயிலில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (Automated Teller Machine - ATM) நிறுவப்பட்டுள்ளது.

பொதுவாக ஏடிஎம் இயந்திரங்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் நிறுவப்படுவது வழக்கம். ஆனால், மத்திய ரயில்வே ஒரு படி மேலே சென்று, மும்பை-மன்மாட் இடையே இயங்கும் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில் (AC Coach) ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதாகவும், அதில் பணம் எடுக்க முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏடிஎம் இயந்திரம் ரயிலின் ஒரு பெட்டியின் பின்புறத்தில், முன்பு தற்காலிக சரக்கு அறையாகப் பயன்படுத்தப்பட்ட இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. ரயிலின் 22 பெட்டிகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருப்பதால், பயணிகள் இந்த ஏடிஎம் இயந்திரத்தை எளிதாக அணுக முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளதால், விரைவில் அனைத்து விரைவு ரயில்களிலும் (Express Trains) இதுபோன்ற ஏடிஎம் வசதியை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் பயணிகளின் வசதிக்காக எடுக்கப்படும் இந்த புதிய முயற்சிகள் வரவேற்பைப் பெற்றுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்