Sahil Wakode 
இந்தியா

"தொடர்கதையாகும் IIT தற்கொலைகள்.. மரணங்களுக்கு மின்விசிறிதான் காரணமா?" - முற்றுப்புள்ளி வைக்கப்போகிறதா நிறுவனம்?

2016 முதல் செப்டம்பர் 2026 வரையிலான காலகட்டத்தில் 120 தற்கொலைகளும் பதிவாகியுள்ளன என்று கூறும் தரவுகள்

Vinvizhi Leninton

ஐஐடி பம்பாய் வளாகத்தில் தனது விடுதி அறையில், இரண்டாம் ஆண்டு பி.டெக் படித்து வந்த சாஹில் ரவீந்திர வக்கோடே, கடந்த வெள்ளிக்கிழமை அன்று (18.09.26) சடலமாக கண்டெக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பருவ இடைத்தேர்வின் போது, ​​அவர் கைபேசி மற்றும் சாட்ஜிபிடி (ChatGPT) பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வால் கொதித்தெழுந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த விவகாரம் குறித்து உயிரிழந்த மாணவனின் பெற்றோர் தங்கள் மகன் சாதி அடிப்படையிலான பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி புகார் அளிக்கப்பததாகவும் கூறப்படுகிறது. ஆனால், உடன் பயின்ற மாணவரோ அவ்வாறு இல்லை என்றும் அவரது கருத்தினை சில ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் "ஐஐடி வளாகங்களில் இதுதான் முதல் முறையா?" என்று நீங்கள் கேட்டால் அதுதான் இல்லை. இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் தொடர்கதையாகவே நடந்துகொண்டுதான் வருகிறது.

இந்திய தொழில்நுட்பக் கழகமானது முதல் முதலில் 1951-ல் கரக்பூரில் நிறுவப்பட்டது. தற்போது இந்தியாவில் 23 ஐஐடி-க்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் கல்விசார் மேன்மை, சமூக முன்னேற்றம் மற்றும் நாட்டில் மிகவும் விரும்பப்படும் சில தொழில் வாய்ப்புகளுக்கான அணுகல் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கின்றன. இதில் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் என்பது நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தும் ஒன்றாகவே இருந்துவருகிறது.

2019 அக்டோபர்: ஹைதராபாத் ஐஐடி-யில் 20 வயது பி.டெக் மாணவர் பிச்சிகலா சித்தார்த் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலையில் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த விபரீத முடிவினை எடுப்பதற்கு முன்னர், தனது நண்பர் ஒருவருக்கு, "தனது வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை" என ஒரு நீண்ட செய்தியை அனுப்பியுள்ளார். மேலும், தற்கொலைக் கடிதத்தின்படி , மன அழுத்தம் காரணமாக அந்த மாணவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாக செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டன.

2019, நவம்பர்: கேரளாவின் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீஃப், கிண்டியில் உள்ள ஐஐடி-எம் வளாகத்தில் இருக்கும் சரயு விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இவரது அறையில் நவம்பர் மாதம் 2019-ல், மர்மமான முறையில் தற்கொலை செய்து சடலமாக மீட்கப்பட்டார். இதற்கு காரணமாக குறைந்த அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் பெற்றதால் பாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதாக அப்போது கூறினர்.

IIT campus suicides

மாணவியின் கைபேசியில் இருந்த ஒரு குறிப்பில், அவரது மரணத்திற்கான காரணமாக சில பேராசிரியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதனால், இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) போரட்டத்தை முன்னெடுத்தது. அவரது தற்கொலைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பேராசிரியர்களைக் கைது செய்யக் கோரி மாணவர்கள் முழக்கங்களை எழுப்பியதோடு, காவல்துறை இந்த விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல கட்சிகளும் இந்த தற்கொலையை 'மதத்தினால் ஏற்பட்ட பாகுபாடே காரணம்' என தங்களது எதிர்பினையும், கண்டனத்தையும் முன்வைத்தனர். அதன் பின்னர், 2019 டிசம்பரில் மத்திய குற்றப்பிரிவிலிருந்து சிபிஐக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

ஜூலை 2026: கடந்த ஜூலை மாதம், ஐஐடி பம்பாய்-யில் பொருள் அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவரான 20 வயதான சோஹில் ராஜ்குமார் சங்வான், தனது விடுதி அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மேலும், காவல்துறையினர் இச்சம்பவத்தின் சூழ்நிலைகள் குறித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. 

இது போன்று பல மரணங்கள் நிகழ்ந்துள்ளது என்றே கூறலாம். குறிப்பாக , 20 ஆண்டுகளில் 173 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும், இது கடந்த பத்தாண்டுகளில் பதிவான மரணங்களில் 70% ஆகும் என்றும் முன்னாள் மாணவர் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக ANI செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

2006 முதல் செப்டம்பர் 2026 வரையிலான காலகட்டத்திற்காகத் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, 2006 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் 51 மாணவர் தற்கொலைகளும், 2016 முதல் செப்டம்பர் 2026 வரையிலான காலகட்டத்தில் 120 தற்கொலைகளும் பதிவாகியுள்ளன என்று கூறப்படும் இந்தத் தரவுகள், குளோபல் ஐஐடி முன்னாள் மாணவர் ஆதரவுக் குழுவின் நிறுவனரும், ஐஐடி-கான்பூர் முன்னாள் மாணவருமான தீரஜ் சிங் அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களின் தற்கொலைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேசிய பணிக்குழு, ஜூன் 2026-ல் வெளியிட்ட ஒரு இடைக்கால அறிக்கையில், கல்வி அழுத்தம், சாதி அடிப்படையிலான பாகுபாடு, நிதி நெருக்கடி, பாலியல் துன்புறுத்தல் மற்றும் தேர்வு தொடர்பான பின்னடைவுகள் உள்ளிட்ட இப்பிரச்சனையுடன் தொடர்புடைய பல காரணிகளை அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஐஐடி வளாகத்தில் நடக்கும் இந்த தொடர் தற்கொலைகளுக்கு காரணங்களாக கூறப்படுபவை மனஅழுத்தம், தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமை, சாதிய பாகுபாடு, மத ரீதியிலான பாகுபாடு என்ற காரணங்களை உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

தற்போது ஐஐடி பம்பாய்-யில் மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பது என்பது "இந்த தற்கொலைகளுக்கு முடிவில்லை" என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் வரவைக்கிறது என்றுதான் கூறவேண்டும். தனது மகன் கடந்த மூன்று மாதங்களாக சாதி அடிப்படையிலான அவமதிப்பு, மிரட்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வந்ததாக மாணவனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

IIT campus suicides

இந்நிலையில், வக்கோடேயின் பெற்றோரும், அங்கு படிக்கும் மாணவர்களும் ஐஐடி-பம்பாய்க்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், அந்த நிறுவனம் கடந்த திங்களன்று (செப்டம்பர் 21) பேராசிரியர் சூர்யநாராயண தூல்லாவை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்தது. "பேராசிரியர் சூர்யநாராயண தூல்லாவின் டீன் பதவி உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என ஐஐடி-பம்பாய் இயக்குநர் பேராசிரியர் ஷிரீஷ் கேதாரே ஒரு மின்னஞ்சலில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், மாணவரின் மரணத்திற்கு அந்த ஐஐடி நிறுவனம் ஒரு அறிக்கையில், “சாஹிலின் துரதிர்ஷ்டவசமான மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து எங்களின் முந்தைய தகவலில் இடம்பெற்றிருந்த கூற்றுகளுக்காக நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளது.

IIT campus suicides

தற்போது மாணவரின் தற்கொலைக்கு பின்னர், பம்பாய் ஐஐடி நிறுவனம், வளாகத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் மற்றும் வளாகம் முழுவதும் உள்ள பயன்பாட்டுப் பகுதிகளிலும் சுவரில் பொருத்தப்படும் மின்விசிறிகள் நிறுவப்படும் என்று கூறியதாக கூறப்படுகிறது. 'புதுப்பித்தல் பணிகளின்' ஒரு பகுதியாக வளாகத்திற்கு வந்தடைந்த சுவரில் பொருத்தப்படும் மின்விசிறிகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

கூரை மின்விசிறிகளை மாற்றுவது குறித்த கலந்தலோசனையானது, சுமார் இரண்டு மாதங்களாகப் பரிசீலனையில் இருந்து, சமீபத்தில்தான் இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சுவரில் பொருத்தப்படும் மின்விசிறிகளின் முதல் தொகுதி தற்போது வளாகத்திற்கு வந்து சேர்ந்துள்ளதாக மாணவர்கள் தரப்பில் இருந்து கூறுவதாக பல செய்திகள் வெளியாகியுள்ளது.

இருப்பினும், இந்த மின்விசிறி மாற்றுதல் என்பது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஒரு விரிவான விடுதி புனரமைப்புப் பணியின் ஒரு பகுதி என்றும், சமீபத்திய மாணவர் மரணங்களுடன் இதற்குத் தொடர்பில்லை என்றும் கல்வி நிறுவன அதிகாரிகள் கூறுவதாக 'இந்தியா டுடே' செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நேரமானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், இந்த சுவரில் பொருத்தப்படும் மின்விசிறிகளானது எப்படி ஒரு கட்டமைப்பையே சரிசெய்யும்? என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் முன்வைத்துள்ளனர். மேலும், இதனை வேரில் இருந்து சரி செய்யாமல், மேலோட்டமாக செய்யும் இது போன்ற செயலானது, தற்போது மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்