அரசியல் கட்சிகள் யாரும் கூட்டணி பற்றி பேசாமல் இருந்ததால் அனைவரும் இந்த முறை தமிழக சட்டசபை தேர்தலில் எப்படியும் பல முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி ஏறக்குறைய முடிவாகி விட்டதாக தெரிகிறது. இன்றைய தமிழக அரசியல் கள நிலவரப்படி நான்கு முனை போட்டி உறுதியாகி உள்ளது. இதனால் யாருக்கு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது என்பது தான் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.
அதிமுக தலைவர்கள் திடீரென டில்லி புறப்பட்டு சென்று, பாஜக தலைவர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்துள்ளனர். இருமொழி கொள்கை பற்றி வலியுறுத்த, மக்கள் நலன் குறித்து பேச என அதிமுக தரப்பில் பல விளக்கங்கள் சொல்லப்பட்டாலும் இவர்கள் கூட்டணி குறித்து பேசி முடிவு செய்யத்தான் டில்லி சென்றுள்ளார்கள் என அரசியல் வட்டார தகவல்கள் பலவும் அடித்து கூறி வருகின்றனர். இது உண்மை தான் என்பது போது இன்று சட்டசபைக்கு வந்த அதிமுக எம்எல்ஏ., திண்டுக்கல் சீனிவாசன், பாமக எம்எல்ஏ.,க்களுடன் வழக்கத்திற்கு மாறாக சந்தோஷமாக சிரித்து பேசி வந்தார். இது பற்றி கேட்டதற்கு, நாங்கெல்லாம் கூட்டணி என சூசகமாக கூறி விட்டு சென்றார்.
மேலும் படிக்க: பாஜக.,விற்கு அதிமுக போட்ட அதிரடி கன்டிஷன்கள்...ஆடி போன டில்லி மேலிடம்
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக் கொள்ள தயார் என கூறி ஓப்பனாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். ஏற்கனவே அதிமுக- பாஜக கூட்டணி அமைய உள்ளதும், இந்த கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே பாஜக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தர் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகள் உள்ளன. மீதமுள்ள கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளன. இன்றைய தேதியில் எந்த கூட்டணியிலும் இல்லாமல் தனியாக இருக்கும் கட்சிகள் என்று பார்த்தால் தேமுதிக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் கட்சிகள் தான். இந்த கட்சிகளை கூட்டணிக்கு வர சொல்லி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்ததாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்.
இவர்களில் தேமுதிக, அதிமுக அல்லது திமுக பக்கம் செல்ல வாய்ப்புள்ளது. விஜய் கண்டிப்பாக எந்த கூட்டணியிலும் இணைய மாட்டார்கள். தங்கள் தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் அரசியலுக்கு புதியவர் என்பதால் விஜய்யின் சினிமா செல்வாக்கை நம்பி மட்டும் அவரது தலைமையை ஏற்று, கூட்டணியில் இணைய யாரும் தயாராக இல்லை. அதே போல் சீமானும் கூட்டணி முடிவை ஏற்க மாட்டார்கள். ஏற்கனவே நாம் தமிழர் கட்சிக்கு தமிழகத்தில் 8 சதவீதம் வரை ஓட்டு வங்கி இருப்பதால் கண்டிப்பாக அதை 10 சதவீதம் வரையாவது உயர்த்தவே நினைப்பார். இதனால் விஜய், சீமான் இருவருமே தனித்து போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம்.
திமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால் மிகவும் பலமாக உள்ளது. இதுவரை திமுக கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியேறவில்லை. அப்படியே வெளியேறினால் தமிழக வாழ்வுரிமை கட்சி தான் வெளியேறும். திமுக தலைமையுடனான மோதல் அதிகரித்தாலோ அல்லது அவருக்கு சீட் தர மறுத்தாலோ கண்டிப்பாக கூட்டணியில் இருந்து வெளியேறுவார். அப்படி அவர் வெளியேறும் பட்சத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய அதிக வாய்ப்பு ஏற்படும். மொத்தத்தில் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
ஒருவேளை இப்படி நான்கு முனை போட்டி ஏற்பட்டால் அது கண்டிப்பாக திமுக.,விற்கு நெருக்கடியை ஏற்படுத்தும். திமுக.,விற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள், டாஸ்மாக் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து, ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒரே அணியில் சேரும் போது அது திமுக கூட்டணிக்கு நிச்சயம் மிகப் பெரிய சவாலாக இருக்கும். பார்லிமென்ட் தேர்தலில் தேசிய அளவில் பாஜக.,விற்கு பெரும்பான்மை கிடைப்பதை தடுப்பதற்காக இந்தியா கூட்டணியில் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்த அதே ஃபார்முலாவை தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் திமுக.,விற்கு எதிராக நடைமுறைப்படுத்தலாம். பாஜக.,வை கூட்டணிக்கு சேர்ப்பதால் நிச்சயமாக அதிமுக.,விற்கு சிறுபான்மையினர் ஓட்டுக்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால் அதிகமான எதிர்க்கட்சிகள் ஒரு பக்கமாக சேர்வதால் நிச்சயமாக திமுக வெறுப்புக்களை நிச்சயமாக அள்ள முடியும். இது திமுக ஆட்சி மீண்டும் அமைவதை தடுக்க முடியாமல் போனாலும் திமுக.,விற்கு பெரும்பான்மை கிடைக்க விடாமல் தடுக்க முடியும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்