இன்று நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தொடரில் கைத்தறி - தொழிலாளர் நலன், சிறு - குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்ந்து கூட்டப்பட்டது. பல அமைச்சர்கள் பேசிய இந்த பேரவையில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா பேசுகையில் அவையில் சற்று கூடுதலாகவே சலசலப்பு ஏற்பட்டது. பட்டாசு ஆலை குறித்த அவரது தகவல்களால் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
சிவகாசி சட்டமன்றத் தொகுதியின் MLA-வான அமைச்சர் கீர்த்தனா பேசுகையில், பட்டாசு ஆலை உரிமையாளர்கள், உரிமம் பெற வேண்டுமானால் பெசோ உரிமம், DRO உரிமம், டிஷ் உரிமம், சல்பர் உரிமம் போன்றவை இன்று வரை இயந்திரங்கள் இன்றி எடுக்கக்கூடிய Manual முறையில் உரிமம் எடுக்க இன்று கூட கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆவதாக அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டார். ஆகவே, அவர்களை ஊக்குவிப்பதற்காக சில வேலை செய்திருக்க வேண்டும் என்றும் அவர் பேசினார். மேலும், இந்த 3 வருட காலநீட்டிப்புதான் சட்டவிரோத செயல்களை அதிகப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டு பேசினார். அதை புதுப்பிக்க நினைத்தாலும் 1 வருடம் ஆவதாக கூறினார். இதனை சரி செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் கூறியதாகவும், அதனால் அமைச்சர் கீர்த்தனாவும், தொழிலாளர் நலத்துறை அமைச்சரோடு சேர்ந்து பணிகள் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சி காலத்தில் கருத்தரங்குகள் நடத்தியதாகவும் ஆனால் அதனால் விபத்துகள் குறையவில்லை என்றும் சுட்டிக்காட்டி பேசினார். மேலும், 2022, 2025 ஆண்டுகளில் 89 விபத்துகள் நடந்துள்ளதாக அவர் கூறினார். அன்று முதல்வராக இருந்தவர் அந்த மக்களை பார்த்ததாக கூறினார்கள் என்றும் ஆனால் இன்றைய முதலமைச்சர் ஜோசப் விஜய் 2005-ம் ஆண்டிலேயே அங்கிருக்கக்கூடிய மக்களை நேரில் சென்று சந்தித்ததாக ஆதாரங்களை காட்டினார். மேலும், அவர்களோடு ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடியதாகவும் அவர் பேசினார். தற்போது முதல்வர் அமைச்சர்களிடம் பேசியபோது கூட "இன்றும் ஏன் அவர்கள் அப்டியே இருக்கிறார்கள்?" என்றும் அவர்களுக்கான நலத்திட்டங்களை கொண்டு வரவரவேண்டும் என்று அவர் கூறியதாகவும் அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டு பேசினார்.
மேலும், தொழிலாளர்கள் நலத்துறை பற்றி இவர்கள் (திமுக) பேசுகிறார்கள், ஆனால் அவர்களுக்கான பட்டியலே இன்று வரை ஆன்லைனில் இல்லை என்று குறிப்பிட்டார். கொரோனா கால உதவித்தொகை கொடுக்கச்சொல்லி கூறியதாகவும் "லிஸ்ட்டே இல்லாமல் எப்படி கொடுப்பது?" என்ற கேள்வியினையும் கேட்டிருந்தார். மேலும், தன்னுடைய சட்டமன்ற அலுவலகத்திற்கு அருகில்தான் இஎஸ்ஐ மருத்துவமனை இருப்பதாக கூறி அங்கு 100 படுக்கைகளை 2000-ம் ஆண்டில் அனுமதியுயளித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். ஆனால், இன்றுவரை அப்படி ஒரு 100 படுக்கை வசதிகள் அந்த மருத்துவமனையில் இல்லை என்றும் இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆண்டிருந்தாலும் அப்படி ஒன்று 26 வருடங்கள் ஆகியும் வரவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், முதல்வரிடம் தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், தானும் பேசியதாக குறிப்பிட்ட அவர், பட்டாசு ஆலைகளையொட்டி நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுக்க ஆன்லைன் முறையை கொண்டு வரவேண்டும் என்றும், அதன் ஆரம்ப படிநிலைகளை அவர்கள் கடந்து விட்டதாகவும் அதற்கான செயலி விரைவில் தயாராகும் என்றும் அமைச்சர் கீர்த்தனா அவையில் குறிப்பிட்டார். மேலும், தற்போது அந்த பகுதியில் கட்டியுள்ள ஒரு கட்டிடத்தில் 2 தளங்களில் தீக்காய மேலாண்மை மையங்கள் அமைத்துள்ளதாகவும், தோல் வங்கிகளை கொடுவரப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதோடு இதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ்-க்கு நன்றியும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தீயணைப்பு நிலையம் அங்கு ஒன்று மட்டுமே இருப்பதாக கூறினார். மேலும், இன்னும் ஒரு தீயணைப்பு நிலையம் கொண்டுவர ஒரு நிலம் பார்த்திருப்பதாகவும் அமைச்சர் கீர்த்தனா விளக்கினார்.
மேலும், சிவகாசியில் 'பைரோ பார்க்' கொண்டு வரப்போவதாகவும், முறையான பயிற்சியின்மையால் இரசாயன சோதனை நடத்தும்போது பல விபத்துகள் நடப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதனால், இரசாயன சோதனை நடத்தப்போவதாகவும் அதற்காக ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (R&D) கொண்டு வரப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார். பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் ஊழியர்களின் உடல் முழுவதும் இரசாயனம் இருப்பதாக முதல்வர் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர், 'பைரோ பார்க்'கில் நவீன வசதிகளில் இந்த இரசாயன பரிசோதனையை செய்யப்போவதாக அமைச்சர் கூறினார். அமைச்சர் கீர்த்தனாவின் பேச்சிற்கு அவைத்தலைவர் தனது பாராட்டினையும் தெரிவித்தார்.
அதன் பின்னர் ஓ. எஸ். மணியன் பேசினார், அமைச்சரின் பேச்சிற்கு பாராட்டு தெரிவித்ததோடு பட்டாசு ஆலைகளில் மட்டுமல்ல அதை விற்பதற்கு உள்ள கடைகளுக்கும் கூட உரிமம் பெற 6 மாதங்கள் ஆவதாக சுட்டிக்காட்டினார். அப்போது எழுந்து பேசிய அமைச்சர் கீர்த்தனா, பட்டாசு ஆலைகளின் உரிமத்தை வழங்குவதிலும் கூட கடந்த ஆட்சி காலத்தில் ஊழல் நடைபெற்றதாக சுட்டிக்காட்டினார். ஒரு உரிமத்திற்கு 5 லட்சம், 10 லட்சம் என்று லஞ்சம் வாங்கியதாகவும், ஆனால் தற்போது 177 பட்டாசு ஆலைகளில் ஒரு ரூபாய் கூட வாங்காமல் இருந்ததாகவும், 5 சங்கங்களை சேர்ந்தவர்களும் "இது போன்ற ஆட்சியை நாங்கள் பார்த்தது இல்லை, ரொம்ப நன்றி மா!" எனக் கூறியதாகவும் அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டார், இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது தொழில்துறை அமைச்சரின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எழுந்து பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் எ. வ. வேலு, ஊழல் என்ற வார்த்தையை அவையில் உபயோகிக்கக்கூடாது என்று அவைத்தலைவர் ஏற்கனவே கூறியிருப்பதாகவும், லட்சம் வாங்குகிறார்கள் என்றால் அதிகார மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை கண்காணிக்குமாறும் "அவர்கள் உங்களுக்கு கீழ்தான் வேலை செய்கிறார்கள் அவர்களை திருத்துங்கள்" என்றும் கட்டமாக பேசினார்.
மேலும், "எப்போது எடுத்தாலும் இடைச்செருகல் போல ஊழல்.. ஊழல் என்று ஒரே பாட்டு பாடுகிறார்கள்" எ. வ. வேலு பேசினார். அமைச்சர்களுக்கு பொறுப்பு அதிகம் என்றும் எதிர்க்கட்சி குறைகள் இருக்கிறதா? என்றுதான் தங்களால் பார்க்கமுடியும் , அதை இல்லை என்று மறுத்து பேசுவதற்கு உண்டான ஆற்றல் ஆளும்கட்சியிடம் இருப்பதால் அப்படி இல்லை என்று மறுத்து பேசலாம் என்றும் அவர் பேசினார். அந்த நேரத்தில் மீண்டும் அமைச்சர் கீர்த்தனா எழுந்து தனது பேச்சிற்கு விளக்கம் கொடுத்தார். "அது தான் கூறவில்லை என்றும் 5 சங்கங்களில் உள்ள தலைவர்கள் சொன்னது, ஆதாரம் வேண்டுமானால் எனது மின்னஞ்சல் வழியாக காட்டுகிறேன்" என்றும் பேச சபாநாயகர் குறுக்கிட்டு "நிறுத்துங்கள்.. அதை விடுங்கள்.. வேண்டாம், உட்காருங்கள்" என்று கூறினார். இதனால் அவை மேலும் சலசலத்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.