தமிழகத்தின் அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்புது பரிணாமத்தை அடைந்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நாம் இதுவரை பார்க்காத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாக்கியதில் முக்கிய பங்கு விஜய்க்கு உண்டு.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தை துவங்கிய விஜய், இரண்டு மாநில மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். தேர்தல் பிரச்சாரங்களுக்கும் செல்லத் துவங்கியிருக்கிறார்.
கடந்த செப்டம்பர் 27அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 41-பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த சம்பவம் நடந்த 3 நாட்களுக்கு பிறகு விஜய் வெளியிட்ட வீடியோ அவருக்கே பின் விளைவுகளை ஏற்படுத்தி அவர்மீதான விமர்சனங்களை மேலும் அதிகரித்தது.
ஆனாலும், தவெக -வினர் இந்த பிரச்சனையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓரளவு மீண்டிருக்கின்றனர், என்றுதான் சொல்ல வேண்டும். நேற்றைய தினம் கூட தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
திமுக -வை அரசியல் எதிரி என்றும் பாஜக -வை கொள்கை எதிரி என்றும் முன்னிறுத்தி அரசியலை துவங்கிய விஜய் தனது ஒவ்வொரு நகர்வுக்கும் குறிப்பிட்ட கால நேரத்தை எடுத்துக்கொண்டு மிக பொறுமையாக தான் செயற்படுகின்றார் என்ற விமர்சனமும் அவர் மீது எழாமல் இல்லை. மேலும் அவர், நல்ல நேரம், நியூமரலாஜி உள்ளிட்ட ஜோசியம் சார்ந்த விஷயங்கள் மீது ஈடுபாடு கொண்டவர் என்ற பேச்சுகளும் அவ்வப்போது எழுந்து வருகின்றன.
இந்த பேச்சுகளுக்கான முதல் விதை, விக்கிரவாண்டி மாநாட்டின்போதுதான் எழுந்தது. அதற்கு காரணமும் உண்டு. தமிழக வெற்றிக்கழகம் ஆரம்பித்த பிறகு நடத்தப்பட்ட முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற்ற ‘v'-சாலை மாநாடு. இந்த மாநாட்டை திட்டமிட்டு நடத்தியதாகவும், “மேலும் ‘வி’ என துவங்கும் இடத்தில தான் முதல் மாநாட்டை நடத்த வேண்டும், நியூமராலஜி படி அதுதான் சரியாக இருக்கும்” என விஜய் -ன் ஜோசியர் சொன்னதாகவும், அப்போதே பல பேச்சுக்கள் உலவின. மேலும், ராகு காலம் முடிந்த பின்னரே, அந்த மாநாட்டில் விஜய் பேசியதாகவும் கூறப்பட்டது.
விஜய்யை இயக்கும் ஜோசியர் யார்!?
விஜய் ஜோசியர் ஒருவரை தீவிரமாக நம்புவதாக பல தகவல்கள் கசிகின்றன. மேலும் தன்னுடைய எல்லா முன்னெடுப்புகளுக்கும் அவரின் முடிவை கேட்டுவிட்டுதான் விஜய் செயல்படுவாராம். என்று மாநாடு நடத்த வேண்டும், எப்போது மக்களை சந்திக்க வேண்டும், எந்த நேரத்திலிருந்து எந்த நேரம் வரை பேச வேண்டும் என்ற பல விஷயங்களை அந்த ஜோசியர் தான் முடிவு செய்கிறாராம். விஜய் மக்கள் சந்திப்பு ‘சனிக்கிழமைகளில்’ திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சனிக்கிழமை -தான் விஜய்யின் கட்டத்திற்கு உகந்த நாள் “அந்தநாளில் மக்களை சந்தியுங்கள்” என ஆலோசனை வழங்கியதே இவர்தானாம்.
கரூர் சம்பவம் நிகழ்ந்த போதும்கூட விஜய் உடனடியாக இந்த ஜோசியருடன் தான் ஆலோசனை நடத்தினாராம். மேலும் “ஜனவரி வரை கொஞ்சம் சங்கடங்கள் தொடரும், ஆனால் அதன் பிறகு ஏறுமுகம் தான்” என சொல்லியிருக்கிறார். அதனால்தான் கூட்டணி குறித்த முடிவுகளை கூட தவெக பொங்கலுக்கு பிறகு எடுக்கும், என சில விவரம் தெரிந்தவர்கள் கூறிவருகின்றனர்.
பெரியாரையும், அம்பேத்கரையும் கொள்கை தலைவர்களாக முன்னிறுத்தி அரசியல் செய்யும் விஜய், இது போன்று ஒரு ஜோசியரை நம்புவது சரியல்ல, மேலும் கட்சி முடிவுகளில் கூட அந்த ஜோசியர் மூக்கை நுழைப்பது விஜய்யின் அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல என அவரின் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதாக சில அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.