தமிழ்நாடு

“அண்ணன் சீர்” திட்டம்: முக்கிய அரசாணை வெளியானது! 8 கிராம் தங்கம் + பட்டுப்புடவை... ரூ.812 கோடி ஒதுக்கீடு

இதற்காக பிரத்யேக இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்

Muthu Lakshmi

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தேர்தல் வாக்குறுதியில் அளித்த 'அண்ணன் சீர்' திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி. அந்த வகையில், தமிழகத்தில் திருமணம் நடைபெறும் மணப்பெண்களுக்கு அரசு சார்பில் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் வகையில் அறிவிக்கப்பட்ட “அண்ணன் சீர்” திட்டத்துக்கு தற்போது முதல்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில் “அண்ணன் சீர்” திட்டம் முக்கிய அறிவிப்பாக இடம்பெற்றது. இதன்படி, தகுதியுடைய திருமணமாகும் பெண்களுக்கு 22 காரட் 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப்புடவை ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

திருமணம் என்பது பெண்களின் வாழ்க்கையில் முக்கியமான தருணம் என்பதைக் கருத்தில் கொண்டு, அந்த நிகழ்வில் ஒரு அண்ணனாக அரசு உடனிருந்து சீர்வரிசை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பங்களின் திருமணச் செலவுச் சுமையை குறைக்கும் நோக்கத்துடனும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில், திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிர்வாக மற்றும் நிதி அனுமதி வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்தகட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

“அண்ணன் சீர்” திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகளிடம் இருந்து இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. இதற்காக பிரத்யேக இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். இணையதளம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, தகுதி, விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம், தமிழகத்தில் கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த திருமண உதவித் திட்டங்களின் தொடர்ச்சியாகவும், மாற்றியமைக்கப்பட்ட புதிய வடிவமாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த காலத்தில் திருமண உதவியுடன் தங்கம் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருந்த நிலையில், தவெக அரசு அதனை “அண்ணன் சீர்” என்ற பெயரில் மீண்டும் கொண்டு வந்துள்ளது.

அதேபோல், தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு “தாய்மாமன் தங்க மோதிரம்” உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், “அண்ணன் சீர்” திட்டத்துக்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டிருப்பது, திட்டத்தை செயல்படுத்துவதில் அடுத்தகட்ட நகர்வாக அமைந்துள்ளது. ரூ.812 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட உள்ள இத்திட்டத்தில் எத்தனை பயனாளிகள் பயன்பெற உள்ளனர், தகுதி விதிமுறைகள் என்ன, விண்ணப்பிக்கும் நடைமுறை எப்போது தொடங்கும் என்பன குறித்த முழுமையான அறிவிப்பை பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்