

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நாளை நடைபெறவிருக்கும் நிலையில், நேற்றுடன் பரப்புரைகள் நடந்து முடிந்தன. பிரசாரங்களில் காரசாரமான விவாதங்களும் வசவுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
அப்படியாக, சில நாட்களுக்கு முன்னர் திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய கருத்து கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்தது.
முன்னதாக, தாராபுரம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்யபாமாவை ‘பெட்டி பாமா’, ‘பல்டி பாமா’ என்ற வசைகளால் கடுமையாகத் தாக்கினார். அதைத் தொடர்ந்து திமுக பரப்புரையின் கணிசமான பகுதி கட்சி மாறிய வேட்பாளர்களைத் தாக்கியதாக அமைந்தது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு முறையே மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, இவர்கள் இருவரும் இதே தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த இவர்களுக்கு மீண்டும் இடைத்தேர்தலில் சீட் கொடுத்தது தவெக. இந்த நடவடிக்கை மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தது
இதனால், இந்த இரண்டு தொகுதிகளிலும் தவெக அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் விஜய் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
திமுக பிரசாரத்தின்போது முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்யபாமாவின் உருவம் குறித்து கேலி செய்யும் விதமாகப் பேசியிருந்தார். இதற்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம், ஸ்டாலின் பெண் வேட்பாளரை உருவகேலி செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “யாரையும் அப்படி மனம் கோணக்கூடிய அளவிலே பேசக்கூடிய நபர் இல்லை அவர்” எனக் கூறிவிட்டு சென்றார்.
நடந்த நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்று விளக்கம் கொடுக்காமல், கனிமொழி தனது அண்ணனின் குணநலன்களைப் பெருமையாகப் பேசிவிட்டு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, பெண்களுக்கு எதிரான பேச்சுகளுக்கு கட்சி பேதமின்றி தக்க பதிலடி கொடுக்கும் கனிமொழி, இந்த விவகாரத்தில் நழுவ முயன்றுள்ளது அரசியல் விமர்சகர்களால் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்