தமிழ்நாடு

தவெக கூட்டத்தால் மீண்டும் ஒரு பலி..! தலைவர் விஜய்யின் வாகனத்தின் பின்னால் சென்ற மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...

திருச்சியைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவர் விக்னேஷ் மற்றும் மேலும் நான்கு பேர், மார்ச் 4 அன்று விஜய்யின் வாகன அணிவகுப்பைப் பின்தொடர்ந்து..

மாலை முரசு செய்தி குழு

மார்ச் 4 அன்று திருச்சியிலிருந்து தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்றபோது விபத்தில் காயமடைந்த 19 வயது மாணவர் உயிரிழந்தார். அவர் திங்கள்கிழமை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மார்ச் 4 அன்று, விஜய் காலை திருச்சி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிப்பட்டிக்கு ஒரு வேனில் சென்றுகொண்டிருந்தார். அங்கு அவர் தனது கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் உரையாற்றினார். விஜய்யின் வேன் திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் பயணித்தபோது, விஜய்யை ஒருமுறையாவது பார்த்துவிடவேண்டும் என்ற முயற்சியில், மோட்டார் சைக்கிள்களில் வந்த பலரும் அந்த வேனைப் பின்தொடர்ந்தனர். திருச்சியைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவர் விக்னேஷ் மற்றும் மேலும் நான்கு பேர், மார்ச் 4 அன்று விஜய்யின் வாகன அணிவகுப்பைப் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது அவர்களது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் காயமடைந்தனர்.பைக்கை ஓட்டிச் சென்ற விக்னேஷுக்கு தலையில் பலத்த காயங்களும், பின்னால் அமர்ந்து பயணித்த 20 வயதான அவரது நண்பருக்கு இடது காலில் காயங்களும் ஏற்பட்டன. அவர்கள் உடனடியாக தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விக்னேஷ் ஆரம்பத்தில் அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர், மார்ச் 20 அன்று திருச்சியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர், திங்களன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விக்னேஷின் குடும்பத்தினர் கூறுவதன்படி, 'அன்று கல்லூரிக்குச் செல்வதாக அவர்களிடம் கூறியிருந்தும், விஜயைப் பார்க்கச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் பின்னர்தான் வீட்டிற்கு தெரியவந்தது', என்று கூறினர். மேலும், கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில், சேலம் மாவட்டத்தில் விஜய்யின் பேரணியில், அவரை காணவந்த அவரது ரசிகரான மகாராஷ்டிராவைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார். மேலும், செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் நடைபெற்ற பேரணியின்போது கூட்டநெரிசல் காரணமாக, 41 பேர் உயிரிழந்ததோடு, 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் தற்போது மற்றொரு ஒரு மாணவனும் உயிரிழந்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.