தமிழ்நாடு

சட்டமன்றத் தேர்தல் 2026: "வாக்கு சதவீதம்" – தமிழக அரசியல் மாற்றத்தின் புதிய சிக்னல்கள்!

தமிழக வெற்றி கழகம் 34.92% வாக்குகளுடன் முதலிடத்தை பிடித்து

Muthu Lakshmi

இந்தியாவில் 4 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் பெரும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் யாரும் கணிக்க முடியாத அரசியல் நிலவரம் தற்போது கைகூடியுள்ளது. ஏப்ரல் 23 தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே 4 தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் வெளியானது. மொத்தம், 234 சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 5.73 கோடி, இதில்   84.29% வாக்குகள் பதிவாகி இருந்தது. 2.93 லட்சம் பெண் வாக்காளர்களில் 85.76% வாக்களித்திருந்தனர். 2.80 லட்சம் ஆண் வாக்காளர்களில் 83.57% பேர் வாக்களித்திருந்தனர். மேலும் 7,728 மூன்றாம் பாலினத்தவர்களில்  60.49% பேர் வாக்களித்திருந்தனர்.

நேற்று வெளியான சட்டமன்ற தேர்தல் முடிவில் 118 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதில் கூட்டணியை நாடும் சிக்கலில் உள்ளது. அதையடுத்து திமுக 59 இடங்களுடன் இரண்டாம் இடத்திலும், அதிமுக 47 இடங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. மற்ற கட்சிகளில் காங்கிரஸ் 5, பாமக 4 இடங்களையும் பெற்றுள்ளன. முஸ்லீம் லீக் கட்சி, சிபிஎம், விசிக மற்றும் சிபிஐ ஆகியவை தலா 2 இடங்களையும், பாஜக, தேமுதிக மற்றும் அமமுக தலா 1 இடங்களையும் பெற்றுள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கட்சிகளின் வாக்கு சதவீதம் அரசியல் நிலையை தெளிவாக காட்டுகிறது. தமிழக வெற்றி கழகம் 34.92% வாக்குகளுடன் முதலிடத்தை பிடித்து, மாநில அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து திமுக 24.19% வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், அதிமுக 21.21% வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. காங்கிரஸ் 3.37% மற்றும் பாஜக 2.97% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதையடுத்து சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 4% வாக்குகளுடன் குறிப்பிடத்தக்க ஆதரவை பெற்றுள்ளது. ஆனாலும் ஓரு தொகுதியில் கூட அக்காட்சியின் வேட்பாளர்கள் வெற்றியை கைப்பற்றவில்லை. அதேபோல், தேசிய முற்போக்கு திராவிட கழகம் 1.20%, விசிக 1.09%, சிபிஐ 0.66%, சிபிஎம் 0.60% வாக்குகளைப் பெற்றுள்ளன.

மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் சேர்த்து 4.97% வாக்குகளை பெற்றுள்ளன. அதேசமயம், நோட்டா-க்கு 0.41% வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தத்தில், இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் புதிய மாற்றத்தையும், வாக்காளர்களின் மனநிலையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டு இருப்பதையும் வெளிப்படுத்துகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.