2026 தேர்தல் தமிழகத்தின் மிக முக்கியமான இதுவரை பார்க்காத ஒன்று என்பதில் சிறு சந்தேகமும் இல்லை. ஆனால் கட்சிகளின் கூட்டணி கணக்குகள் தான் மக்களை பெரிதும் அலைக்கழிக்கின்றன.. ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக -வின் சண்டை மூலைமுடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர்க வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும், இந்த துயர சம்பவத்திற்கு பிறகு தவெக தலைதூக்குவது கடினம் இது விஜய்க்கு நிச்சயம் பின்னடைவு என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் கரூர் சம்பவம் ஆளுங்கட்சியான திமுக -வுக்குத்தான் பின்னடைவை ஏற்படுத்தியது ஒழிய பாதிக்கப்பட்டவர்கள் உட்பட யாரும் விஜய் மீது கோவத்தை வெளிப்படுத்தவில்லை.
எதோ ஒரு விதத்தில் விஜய் பலம் அடைந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் முன்பை விட அவர் திமுக -வை அதிகம் எதிர்க்கிறார். மேலும் திமுக -வின் பிரதான எதிரி தான் தான் என்பதையும் கூறியுள்ளார்.
செங்கோட்டையன் நீக்கம்!
பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக -வின் சண்டை மூலைமுடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாகியுள்ளது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகான அதிமுக பலவீனமான ஒன்று என்பதை தமிழ் நாடு நமக்கு அறிந்தது. அந்த கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல்களை சமாளிப்பதற்குள்ளாகவே வருடங்கள் ஓடிவிட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக கருத்து வேறுபாடு இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 9 -ஆம் தேதி அன்னூரில் நடைபெற்ற அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு போராட்ட குழுவினரால் பாராட்டு விழா நடைபெற்றபோது மோதல் வெளிப்படையானது.
ஆனால் எடப்பாடியோ தொடர்ச்சியாக ஓபிஎஸ், சசிகலா, டிடிவி என அனைவரையும் கட்சியை விட்டு நீக்கியே வைத்திருந்தார். இந்நிலையில்தான் அதிமுக -விலிருந்து எடப்பாடியால் ஒதுக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒன்றிணையப் போகிறார்கள் என்ற பேச்சுக்கள் எழுந்தன.
இந்த அமளிகளுக்கெல்லாம் இடையில்தான், முத்துராமலிங்க தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு பசும்பொன்னிற்கு, “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தோடு இணைந்து ஒரே காரில் பயணம் செய்தார் செங்கோட்டையன். செங்கோட்டையனின் இந்த செயல் கட்சி கட்டுப்பாட்டை மீறியதோடு எடப்பாடியையும் கடுப்பேற்றியதாக கூறப்படுகிறது.. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இருவரும் சந்தித்து பேசினர். பின்னர் ஒரே காரில் பசும்பொன் கிராமத்துக்கு வந்தனர். இதுதான் சாக்கு என எடப்பாடியும் செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார்.
8 மாதத்திற்கு முன்பே கூட்டணி!
இந்த அரசியல் சிக்கல்கள் குறித்து பல விமர்சகர்கள் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு அம்சம் “விஜய் Factor” எங்கே விஜய் -உடன் அதிமுக கூட்டணி வைத்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் பாஜக-அதிமுக கூட்டணி 8 மாதங்களுக்கு முன்பே உருவானது. மேலும் கூட்டணி அமைக்கப்பட்ட ஆரம்ப காலங்களில், எடப்பாடியை கூட்டணியின் தலைவர் எனவோ, அதிமுக தலைமையில்தான் ஆட்சியையும் அமையும் எனவோ உத்தரவாதமிக்க பேச்சுக்கள் எழாததால், கள அளவில் இந்த கூட்டணி இணையவே இல்லை. அதனால்தான் திமுக துவங்கி அனைவரும் ‘பொருந்தா கூட்டணி’ என விமர்சித்தனர்.
அதற்கு ஒரு காரணமும் உண்டு டிடிவி -யை கூட்டணியில் இணைக்கும்போது, ‘எடப்பாடி முதல்வர் இல்லை’ என சொல்லித்தான் அழைத்ததாக ஒரு தரப்பு விமர்சகர்கள் கோரி வருகின்றனர்.
எடப்பாடியின் ஆசை!!
ஆனால் எடப்பாடி எதாவது அதியசம் நடந்து பாஜக -வை விட்டு விலகி விட மாட்டோமா என வேண்டிக் கொண்டிருக்கிறாராம். ஆனால் கொடநாடு, அதிமுக சின்னம் என அவர்கள் மீதும் ஏகப்பட்ட வழக்கு உள்ளது. அமித்ஷா -விற்கு 2026 -ல் பாஜக-அதிமுக வெற்றியைவிடவும் திமுக -வின் தோல்விதான் முக்கியம். மேலும் சசிகலா, டிடிவி, செங்கோட்டையன், ஓபிஎஸ் என அனைவரும் அதிமுக -வை பாஜக விடம் ஒப்படைக்க உழைத்தவர்கள் என்ற சர்ச்சையும் எழாமல் இல்லை.
இந்த அரசியல் களம் குறித்து தனியார் யூடியூப் தளத்தில் பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரியன், “தவெக தலைவர் விஜய் முன்பை விட அதிகமாக திமுகவை எதிர்ப்பதன் மூலம் அவர் அதிக பலத்துடன் திரும்பி வந்துள்ளார் என்றுதான் நாம் புரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமின்றி அதிமுக இடத்தை விஜய் நெருங்கிக்கொண்டிருக்கிறார். இந்த தேர்தல் அதிமுகவுக்கு தான் வாழ்வா சாவா தேர்தல். மேலும் விஜய் என்னதான் 2026 நமது என சொன்னாலும் அவர்களுக்கு கள நிலவரம் தெரியும். மேலும் அவர்கள் பிரதான எதிர்க்கட்சியாக மாறி அதிமுக -விற்குத்தான் சாவு மணி அடிப்பார்கள்.
மேலும், அதிமுகவில் கட்டுமானம் ஓரளவிற்கு சிறப்பாக இருக்கிறது. ஆனால் தலைமை சரியில்லை. ஆனால், தவெகவில் கட்டுமானமே உருவாகவில்லை, ஆனால் இவர்கள் இணைந்தால் நல்ல வெற்றிதான் உருவாகும். ஆனால் கூட்டணிக்கு பிறகு, இந்த வெற்றி யாரால் என்ற கேள்வி நிச்சயம் எழும், அதனால்தான் விஜய் தயங்குகிறார். விஜய் நிச்சயம் தனியாகத்தான் போட்டியிடுவார்” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.