தமிழ்நாடு

BREAKING: சென்னை, திருவள்ளூர் உட்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 21) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Muthu Lakshmi

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தொடர் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 21) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார். அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தி. சினேகா, செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மு. வீரப்பன் ஆகியோர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கவிதா அறிவித்துள்ளார். தொடர்ந்து பெய்து வரும் மழையைக் கருத்தில் கொண்டு ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்துள்ளது. தாம்பரம், குரோம்பேட்டை, செங்கல்பட்டு, கிண்டி, அண்ணா சாலை, அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

திடீரென தீவிரமடைந்த மழையால் சென்னையின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கும் சூழல் உருவாகியுள்ளதால், பொதுமக்கள் வெளியே செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 25 வரை பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்