தமிழ்நாடு

“அமைச்சர் இருக்கையில் அமர மறுத்த புஸ்ஸி ஆனந்த்” - தலைமைச் செயலகத்தில் நெகிழ்ச்சி சம்பவம்! அன்புமணியுடன் நடந்த ஆலோசனை?

இந்த சந்திப்பின் போது மேகதாது அணை விவகாரம், அதற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை...

Muthu Lakshmi

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், இது தொடர்பாக ஆலோசனை நடத்த சென்னை தலைமைச் செயலகத்திற்கு அவர் இன்று சென்றார். அப்போது அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் நடந்து கொண்ட விதம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது. மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அன்புமணி ராமதாஸ், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி மற்றும் செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ. கணேஷ்குமார் ஆகியோர் இன்று சென்னை தலைமைச் செயலகம் சென்றனர். அன்புமணி வருவதை அறிந்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், தலைமைச் செயலக நுழைவாயிலுக்கே நேரில் வந்து அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றார். இதனால் ஆச்சரியமடைந்த அன்புமணி, "நாங்களே வந்திருப்போமே... எங்களை வரவேற்க நீங்கள் ஏன் வந்தீர்கள்? என்று அமைச்சர் ஆனந்திடம் கேட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அமைச்சர் ஆனந்தின் அறைக்குச் சென்ற பிறகு, அன்புமணி ராமதாஸ் மற்றும் சவுமியா அன்புமணிக்கு அமைச்சர் ஆனந்த் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதற்கு பதிலாக அன்புமணியும் அமைச்சர் ஆனந்துக்கு பொன்னாடை அணிவித்தார். இதன்பின்னர் நடைபெற்ற மேகதாது அணை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின் போது மேலும் ஒரு சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமைச்சருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமராமல், அன்புமணி ராமதாஸ் அருகிலேயே அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அமர்ந்ததாக கூறப்படுகிறது. இதைக் கவனித்த அன்புமணி, அமைச்சருக்கான இருக்கையில் அமருமாறு பலமுறை வலியுறுத்தியதாகவும், அதன் பிறகே அமைச்சர் ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ இருக்கையில் அமர்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின் போது மேகதாது அணை விவகாரம், அதற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அனைத்துக் கட்சிகளின் ஒருங்கிணைந்த நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆனந்த் அளித்த வரவேற்பும், ஆலோசனைக் கூட்டத்தின்போது நடந்த இந்த நிகழ்வுகளும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.